குழந்தைகளின் உளவியலை சிதைக்கும் பாலியல் சீண்டல், வல்லுறவு!
பாலியல் சீண்டல்
இதில் வயது வந்தோர்களை உள்ளடக்கவில்லை. முழுக்க குழந்தைகளை எப்படி வயது வந்தோர் பயன்படுத்தி காம வெறியை, ஆசையை தீர்த்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களின் பின்னாளைய வாழ்க்கை உளவி்யல் குறைபாடுகளோடும் தீர்க்க முடியாத சிக்கல்களோடும் அமைவதை பார்க்கலாம்.
குழந்தை ஆரோக்கியமாக வளர நல்ல உணவு மட்டும் அளித்தால் போதாது. குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும். பெற்றோர்களுக்கு நல்ல மனநிலை வாய்த்திருப்பதோடு பக்கத்தில் இருக்கும் ஆட்களும் ஒழுங்கானவர்களாக அமையவேண்டும். அப்படி சரியான விஷயங்களை அமையவில்லை. நல்லதும் அல்லதும் பெற்றோர்களால் சொல்லித் தரப்படவில்லை என்றால் குழந்தை வளர்ந்தபிறகு உலகை விரோதமாகவே பார்க்கும். நட்பை, உறவை அனைத்தையுமே சந்தேகமாக பார்க்கும். அனைத்து உறவுகளுமே அன்பினால், மரியாதையால், நட்பால் உருவாக்கப்படுவதில்லை. சில உறவுகள் அதிகாரத்தால், வலியால், அவமானப்படுத்துதல்களாலும் உருவாகும். வலியை மகிழ்ச்சியாக ஒருவர் உணரத் தொடங்கும்போதுதான் அவருக்குள் உளவியல் குறைபாடுகள் மெல்ல முளைவிடத் தொடங்குகிறது. சிறுவயதில் பெற்றோரால், வளர்ப்பு பெற்றோரால், தனியாக வாழ்ந்து வேதனைகளை சந்தித்தவர்கள் பிற்காலத்தில் தனக்கு கிடைத்த விஷயங்களை மற்றவர்களுக்கு கொடுக்கிறார். இதில் ஒரு பாதி பழிவாங்குதல், இன்னொன்று வலியை மகிழ்ச்சியாக அனுபவிக்க தொடங்குவது. இதில் அதிகபட்சமாக பிறரை கொன்றால்தான் ஒருவரால் மகிழ்ச்சியாகவே வாழமுடியும் என்ற நிலைவருவதுதான்.
குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தால் கொலைகார ர்களாக மாறிவிடுவார்கள் என்பதற்கு உத்தரவாதம் ஏதும கிடையாது. தொடர் கொலைகார ர்கள் அல்லது சைக்கோ கொலைகார ர்கள் பெரும்பாலானோர் சிறுவயதில் பாலியல் சீண்டலுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை தற்செயல் என்று ஏற்கலாமா? டேவிட் பெர்கோவிட்ஸ், ஜான் டக்ளஸ், எட்மண்ட் கெம்பர் ஆகியோரை சிறையில் நேர்காணல் கண்டபோது, இவர்கள் மூவருமே மோசமான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்று தெரியவந்தது. அதிகாரத்தை கடுமையாக பிரயோகித்து அடித்து மிரட்டி குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களால்தான் குழந்தைகளின் மனநிலையில் இருள் படர்கிறது என பல்லாண்டு கால ஆரா்ய்ச்சியில் சமூகவியலாளர் லோனி ஏதென்ஸ் கூறியுள்ளார். பாலியல் சீண்டல்களுக்கு ஆட்படும் பலவீனமான குழந்தைகளுக்கு மூளையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பகுதி வளருவதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இனி எப்படி குழந்தைகளை வளர்க்க கூடாதோ அப்படி வளர்க்கப்பட்ட சிலரைப் பார்ப்போம்.
இங்கிலாந்தில் பிறந்த மேரி பெல் இரண்டு சிறுவர்களை கொலை செய்தவர். 1968 இல் இவர் பிறந்து சிறுமியாக இருக்கும்போது இவரது அம்மா, நான்கு முறை போதை மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்து கொல்ல முயன்றார். தனக்கு தேவையில்லாத குழந்தை என்று மேரியை நினைத்ததுதான் இதற்கு காரணம். விபச்சாரம் செய்து வந்து மேரியின் அம்மா, அவரை வாய்வழி புணர்ச்சிக்கு வற்புறுத்தி சித்திரவதை செய்தார். ஹென்றி லீ லூகாசின் அம்மாவும் விலைமாதுதான். இவர் தான் வாடிக்கையாளர்களோடு உறவு கொள்வதை மகன் பார்க்கவேண்டும் என கட்டாயப்படுத்தினார். இதைக் கேட்க மறுத்ததால் லூகாசை அடித்த அடியில் அவர் கோமாவுக்கு சென்று மீண்டு வந்தார். லூகாசின் சகோதரர் ஒருமுறை கண்ணைத் தாக்கியதில் பின்னாளில் அந்த கண்ணை நீக்கவேண்டியிருந்தது.
எல்லோரையும் மோசமான குடும்ப பின்னணி என்று வகைப்படுத்திவிட முடியுமா என ஆராய்ச்சியாளர் பின்கஸை கூட வம்புக்கு இழுத்தார்கள். ஜெப்ரி டாமருக்கு கூட பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருந்திருக்கலாம். அவை ஆவணங்களில் இடம்பெறாதிருக்கும் வாய்ப்பும் உள்ளது. டெட் பண்டி பிறக்கும்போது அவரது அம்மாவுக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் அவரது தாத்தா தனது மனைவியை அடித்து உதைத்து கொடுமை செய்யும் கணவராக இருந்தார். இவற்றை பார்த்தபடியேதான் டெட் பண்டி வளர்ந்தார். நேரடியாக பாலியல் சீண்டல்களை பார்க்காவிட்டாலும், அனுபவிக்காவிட்டாலும் இதுபோன்ற செயல்பாடுகள் ஒருவரின் மனதை கடுமையாக பாதிப்பவைதான்.
சிறுவயதில் கடுமையான உளவியல் பாதிப்புகள், பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு உட்படும் சிறுவர்கள் தனது தன்னம்பிக்கையை பலி கொடுத்துவிடுகின்றனர் இதனால் அவர்களுக்கு உலகில் வாழ்வதில் பயம் ஏற்படும். பிறரோடு வாழ்வதற்கும், அன்பு பெறுதவற்கும் கொடுப்பதற்கும் தகுதியானவர்கள் அல்ல என்று எண்ணும்போதுதான் அவர்களின் மனதில் உணர்ச்சிகளுக்கு இடமே இல்லாமல் போகிறது என உளவியலாளர்கள் கூறுகின்றனர். ஜான் வேய்ன் கேசியின் அப்பா, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மகனி்ன் ஆண்மை பற்றி கேலி பேசிக்கொண்டிருந்தார்.
எட் கெம்பரின் அம்மா, அவரின் தோற்றத்தை சுட்டிக்காட்டி உன்னால் பெண்ணின் அன்பை எப்போதும் பெற முடியாது என்று வசைபாடினார். லூயிஸ் வாலசின் அம்மா, அவனை அடித்து உதைத்ததோடு பெண்களின் உடையை அணிவித்து பொது இடங்களுக்கு கூட்டிச்சென்று அவமானப்படுத்தினார். சார்லஸ் மேன்சன், கரோல் கோல், கோல்ட்பர்க், டாமர் ஆகியோருக்கும் இதே நிலை ஏற்பட்டது. பெற்றோரின் எதிர்மறையான வளர்ப்பு முறையால் அவமானமும், துரோகம் இழைக்கப்பட்ட கோபமும் இவர்களுக்குள் எப்போதும் இருந்து வந்தது. வாழ்நாள் முழுக்க தனிமையும், தன்னைத்தானே வெறுத்துக்கொண்டும் இருந்தார்கள். கொலைகளை மகிழ்வோடு செய்தார்கள். இப்படி கூறுவதன் அர்த்தம் இவர்கள் செய்த கொலைகள் சரிதான் என்பதல்ல. இவர்களுக்கு நேர்ந்த சூழல்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவை அவர்களை சமூக விரோதிகளாக, இரக்கமேயில்லாத, மனிதநேயமற்ற, குற்றவுணர்வில்லாத கொலைகாரர்களாக மாற்றியது. இதுதொடர்பாக ரிச்சர்ட் ரோட்ஸ் எழுதிய வொய் தே கில் என்று நூலை படிக்கலாம்.
அம்மா மீதான வெறுப்பு
புராணங்களிலும் பல்வேறு கதைகளிலும் கொடூரமான அம்மாக்கள் மகன்களை, மகள்களை சித்திரவதை செய்வார்கள். பிறகு அதிலிருந்து மீட்க ஏதாவது இளவரசர்கள் வருவார்கள். கதையாக நன்றாக இருந்தாலும் நிஜம் அதற்கு வெகுதூரம். ஆனால் உண்மையில் இப்படி கொடூரமான மனநிலை கொண்ட அம்மாக்களை ஆல்பிரட் ஹிட்சாக்கின் சைக்கோபோன்ற திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். சிறுவயதில் அம்மாக்களின் வளர்ப்புமுறை ஏற்படுத்தும் பாதிப்பை ஒருவர் வளர்ந்தபிறகும் மறக்கமுடியாது. அந்தளவு காயங்கள் மூளையி்ன் வளர்ச்சியை பாதித்துவிடும்.
மலப்புழையில் விளக்குமாறின் கைப்பிடியை செருகுவது, கையை நெருப்பில் பிடித்து கருக்குவது, பிடித்த வளர்ப்பு பிராணிகளை வெட்டி எறிவது, பிறருடன் உடலுறவு கொள்வதை வற்புறுத்தி பார்க்க வைப்பது, பொதுஇடத்தில் அவமானப்படுத்துவது, அடித்து துன்புறுத்துவது ஆகியவற்றை சைக்கோ கொலைகார ர்கள் தங்கள் அம்மாவிடம் அனுபவித்திருக்கிறார்கள். இன்றும் இப்படி அம்மாக்கள் குழந்தைகளை சித்திரவதை செய்துகொண்டிருக்கலாம். ஆனால் இதற்காக ஒருவர் செய்யும் பிற்காலத்திய வன்முறைகளுக்கு நியாயம் கற்பிக்க முடியாது. இப்படி அம்மாக்களால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களை குறிவைத்து கொலை செய்கிறார்கள் என உளவியலாளர்களின் ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. ஏறத்தாழ இப்படி நடைபெறும் கொலைகள் தங்கள் வாழ்க்கையை நாசம் செய்த அம்மாவை பழிவாங்குவதுதான். இதனை சிலர் அவர்கள் வாழும் காலத்திலேயே செய்தும் விடுகிறார்கள்.
லீ லூகாஸ் தனது கொடுமைக்கார அம்மா வயோலாவை விவாத த்தில் ஆக்ரோஷமாகி அந்த இடத்திலேயே கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார். எட்மண்ட் கெம்பரும் கூட தன் கொடுமைக்கார அம்மாவின் தலையை தனியே வெட்டி குப்பைத்தொட்டியில் எறிந்தார். பின்னர் போலீசிடம் கொலை பற்றி பேசும்போது கெம்பரிடம் எந்த குற்றவுணர்வுமில்லை. நான் செய்த்து சரியானதுதான். இத்தனை ஆண்டுகளில் அவர் அலறிக்கொண்டும் கத்திக்கொண்டும் இருந்தாள் என்று கூறினார். ஜோ பிஸ்சர் இதில் கொஞ்சம் வேறுமாதிரியான ஆள். எழுபதுகளில் ஏராளமான கொலைகளை செய்தவர், தன் அம்மாவைக் கொல்லவில்லை. விலைமாதுவாக வாழ்ந்து மறைந்த அம்மாவைப் பற்றி எங்குமே அவர் பேசவில்லை. இறந்துபோனதற்கு பிறகு நான் அவளை கொலை செய்யவேண்டுமென்றால் பத்துமுறை கொல்ல வேண்டும். அப்பாவின் இதயம் நொறுங்கிவிடும் என்பதற்காகத்தான் அதனை நான் செய்யவில்லை. எனது அம்மாவை கல்லறையிலிருந்து எடுத்தால் மீண்டும் அவளை நான் கொன்று புதைப்பேன் என்று பின்னர் காவல்துறையினரிடம் விளக்கம் சொன்னார்.
மோசமான விதை
1956இல் இந்த வார்த்தை பிரபலமாக தொடங்கியது. இதன் அர்த்தம், சைக்கோ கொலைகாரர்களாக மாறும் குழந்தையின் இயல்பைக் குறிப்பது. சிலர் இயல்பான, அன்பு கொண்ட பெற்றோர்கள் உள்ள சூ்ழ்நிலையிலிருந்து தடம்புரண்டு கொலைகார ர்களாக மாறுவார்கள். இதனை பிறப்பிலேயே தீயசக்தி என்று கூறலாமா? நல்ல குடும்பத்தில் கல்வி கிடைத்தும் மனிதநேய விஷயங்களை சட்டங்களை மதிக்காமல் குற்றவாளிகளாக ஆனவர்களையே மோசமான விதை என்று கூறுகிறார்கள். குற்றவாளிகள் ஆக ஒருவரைச் சுற்றியுள்ள சூழல் மட்டும் காரணமல்ல. அவரின் பரம்பரை கூட காரணம் என சில ஆராய்ச்சியாளர்கள் விவாதிக்கின்றனர். ஆனால் மோசமான குடும்ப சூழ்நிலையும், பிரச்னையிலிருந்து வெளியே வருவதற்கு எந்த உதவியும் இல்லாத இயலாமையும்தான் கொல்லுங்கள் அல்லது குணப்படுத்துங்கள் மனங்கள் கதற வைக்கிறது.
சிலர் எந்த இடத்தில் வளர்ந்தாலும் நல்ல குழந்தைகளாக வளர முடியும் என கூறுவார்கள். ஆனால் நடைமுறையில் அப்படி நடப்பதற்கு கடினமானது என்பதை அனைவரின் மனதுக்கும் தெரியும். ஒருவேளை குழந்தைகள் பிறக்கும்போது குருடர்களாக இருந்தால் வேண்டுமென்றால் அவர்கள் மோசமானவர்களாக மாற வாய்ப்புள்ளது. அவர்களால் எதையும் பார்க்க முடியாது அல்லவா? பெற்றோர்கள் சரியான வழிமுறைப்படி வளர்த்தி, தவறு செய்யும்போது கண்டித்திருந்தால் அடுத்தவர்களின் மீதான அக்கறை மனதில் வந்திருக்க வாய்ப்புண்டு.
மரபணுக்களின் பங்கு
தற்போது நடக்கும் ஆராய்ச்சியில் பிள்ளை சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை, தவிர்க்கிறான் என்றால் அதற்கு அப்பாவின் உடலிலுள்ள மரபணுக்கள்தான் காரணம் என்று கூறுகிறார்கள். மோனோமைன் ஆக்ஸிடேஸ் ஏ ஜீன் எனும் மரபணுவே குழந்தைகள் வன்முறையை கையில் எடுத்து பலரை கொல்ல காரணம் என்று கூறுகிறார்கள். இது பரம்பரையாக மரபணு வழியாக வருகிறது என்கிறார்கள். அப்படியானால் வளர்ப்பும், இயற்கையும் கூட முக்கியமான பங்கு வகிக்கிறது என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது. இதுபற்றி மேலும் அறிய இணையத்தில் ஸ்டீவன் பிங்கர், மேட் ரிட்லி ஆகியோரின் நூல்களைப் தேடிப்பாருங்கள்.
வின்சென்ட் காபோ
கருத்துகள்
கருத்துரையிடுக