ஜெர்மனியில் இன அழிப்பை செய்த ஹிட்லர் பற்றிய ஆய்வு உண்மைகள்! ஹிட்லர் - மருதன்
ஹிட்லர்
மருதன்
கிழக்கு பதிப்பகம்
ஹிட்லர் பற்றி பல்வேறு யூகங்கள் இதுவரை எழுந்துள்ளன. அவரின் இளமைப்பருவம், வளர்ச்சி, அரசியல் கட்சியில் சேர்வது, பின்னர் நடைபெறும் அரசியல் மாற்றங்கள், நாஜி கட்சி தொடங்கப்படுவது, இரண்டாம் உலகப்போரை அவர் தொடங்குவது, முதலில் கிடைக்கும் வெற்றி பின்னர் தலைகீழாகி அவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு மாறுவது என நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இதில் உள்ள வேறுபாடு, அவரைப் பற்றி பிறர் எழுதியுள்ள பல்வேறு கருத்துகளையும் ஆசிரியர் கூறியுள்ளார். இதனால் ஹிட்லர் பற்றி முன்னர் நமக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களும் உண்மையா, பொய்யா என சந்தேகம் ஏற்படுகிறது.
இனவெறியுடன் யூதர்களை அழித்தவர் என்று ஹிட்லர் கூறப்பட்டாலும், அவரின் இளமைக்காலம், அரசியல் நுழைவு, வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது, இன அழிப்பைத் தொடங்குவது என பல்வேறு விஷயங்களை பேசுபவர்கள் மெல்ல அவரை ஆதரிக்கத் தொடங்குவது நடைபெறுகிறது. இதற்கு காரணம், இன்றும் அவர் தொடங்கிய இன ஒழிப்பு என்பது ஏதோ ஒரு வகையில் நடந்து வருகிறது என்பதால்தான்.
ஹிட்லர் என்பவர் அனைத்து விஷயங்களையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முன்னேறியவர் என்றுதான் நினைக்கவேண்டியிருக்கிறது. அரசு பணியாளராக த்ந்தை இருந்தபோதும், அவரது உதவி வெகு நாட்களுக்கு ஹிட்லருக்கு உதவவில்லை. அவர் உருவாகி வளர்ந்த காலகட்டம் நெருக்கடியான போர் நடைபெற்ற காலமாக இருந்தது. இதனால் போரில் ஈடுபட்டு, தோற்றுப்போன நாடு அனுபவிக்கும் அனைத்து அவலங்களையும் அவர் நேரில் கண்டிருக்கிறார். போரில் சிப்பாயாக பங்கேற்றிருக்கிறார். இவையே அவர் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிய உதவியிருக்கிறது. பின்னாளில் அவர் நாஜிக்கட்சியைத் தொடங்கி எஸ்எஸ் படை வேட்டையை நடத்துவதற்கான திட்டங்களை போர்க்களத்தில் இருந்தபோதே உருவாக்கியிருக்கவேண்டும்.
நூலில் பல்வேறு இடங்களில் ஹிட்லர் பற்றி பொதுவாக நமக்குத் தெரிந்த விஷயங்கள் உண்மைக்கு தூரமாக உள்ளன என ஏராளமான நூல் ஆசிரியர்களின் கருத்துகளையும் ஆய்வுகளையும் எடுத்து வைத்து ஆசிரியர் பேசுவது நூலின் உண்மைத்தன்மையை அதிகரிக்கிறது.
இன்று இனவெறியைத் தூண்டி நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு தீவிரவாதம் அல்லது பிறரைக் காரணமாக காட்டும் தலைவர்களை ஹிட்லர் மீண்டும் நினைவுபடுத்துகிறார். தேசியவாதம் ஒன்றை பிரசாரமாக கட்டியமைத்து ஜனநாயக முறையில் வென்று சர்வாதிகாரத்திற்கு வந்த பகுதிகளை கவனமாக வாசிக்கவேண்டும். நாட்டின் பொது எதிரியாக குறிப்பிட்ட இனத்தை காட்டும் அரசியல் கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளை வெல்லாமலே ஆட்சிக்கு வந்துவிட முடியும் என்பதையும் அதனால் நேரும் ஆபத்தையும் சொல்லும் இடங்கள் வாசிக்கும்போதே பதற்றமளிக்கிறது.
ஹிட்லரை எதிர்க்கும் விதமாக எதிர்க்கட்சிகள் வலிமையாக கூட்டாக இணைந்து நிற்காதபோது நாட்டிற்கு ஏற்படும் நிலைக்கு இரண்டாம் உலகப்போர் கால ஜெர்மனி சரியான எடுத்துக்காட்டு.
ஹிட்லர் இன அழிப்பை வேகமாக செய்துகொண்டிருந்தபோது, மக்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள், பிற நாடுகள் இதைப்பற்றி என்ன நினைத்தன என்பது பற்றிய கேள்விகளுக்கு நூல் சரியான வகையில் பதில் தந்திருக்கிறது. வலதுசாரி தத்துவத்தைப் பின்பற்றியதால் மக்கள் கஷ்டப்பட்டாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்துள்ளது. ஆனால் மக்களின் வாழ்க்கை பெரும் இருட்டிலும் பயத்திலும் மூழ்கிவிட்டதை வலியுடன்தான் வாசிக்க வேண்டியிருக்கிறது.
அரசியல், வரலாறு, பல்வேறு தந்திர நுட்பங்கள், பிரசார யுக்திகள் என அனைத்து வழிகளிலும் ஹிட்லர் வலிமையாக இருந்துள்ளார். ஆனால் இவற்றை அவர் தானே வடிவமைக்கவில்லை. பலவற்றையும் தனது கருத்தியல் எதிரிகளான கம்யூனிஸ்டிகளிடமிருந்து கற்றுக்கொண்டு அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறார் என்பது ஆச்சரியமூட்டுகிறது. இவரின் எண்ணங்களை உடனே செயல்படுத்த கெப்பல்ஸ் கிடைத்தார் என்பதால் அனைத்தும் சாத்தியமாகியிருக்கிறது.
இன அழிப்பு பற்றிய பகுதி உண்மையில் மனம் கலங்க வைக்ககூடியது. நாஜிப்படை எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் யூதர்களை பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்து கொன்றிருக்கிறார்கள். இதுபற்றிய ஏராளமான புள்ளிவிவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. சித்திரவதை முறைகளை எளிமையாக்க இதன் பொறுப்பில் உள்ளவர்களே நினைக்கும்படியாக கொடுமையாக இருந்துள்ளன. விஷ வாயு முறை கண்டுபிடிக்கப்பட்டு மக்களை அதிக குற்றவுணர்ச்சியின்றி கொல்ல முடிந்தது பற்றிய மகிழ்ச்சியும் நாஜியினருக்கு ஏற்பட்டுள்ளது.
ஹிட்லரை
எப்படி ஆய்வுப்பூர்வமாக
அணுகுவது என்பதை இந்த நூல்
படித்து அறிந்துகொள்ளலாம்.
இன்றுவரையிலும்
பயத்துடன், பக்தியுடன்,
பெருமையுடன்
யாராவது ஒருவர் எனது போராட்டம்
எனும் ஹிட்லரின் நூலை படித்து
வருகிறார். ஆனால்
அவரின் வாழ்க்கை எப்படியானது,
அவரது
கருத்தியல் எப்படியானது
என்பதை மருதனின் நூலைப்
படிப்பவர்கள் தெரிந்துகொள்ளலாம்.நூலின் இறுதிப்பகுதியில் ஹிட்லர் பற்றி அறிந்துகொள்ள தேவையான நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.அதனைப் படித்து ஹிட்லர் பற்றி ஒருவர் மேலும் அறிந்துகொள்ளலாம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக