சிறுவயது தோழிக்காக ஆளுமை பிறழ்வில் சிக்கிக்கொள்ளும் தொழிலதிபர்! கில் மீ, ஹீல் மீ - கொரிய டிவி தொடர்
கில் மீ ஹீல் மீ
கொரியத் தொடர்
யூட்யூப்
டாக்டர் சா தொடருக்கு பிறகு லீ சங் நடித்துள்ள தொடர் இது. மனிதர் எப்படி சவாலான கதைகளை தேடிப்பிடிக்கிறார் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் டிவி தொடருக்கு ஆறு பாத்திரங்களாக மாறி நடிக்கவேண்டுமென்றால் எவ்வளவு கஷ்டம்? எதையு்ம் முகத்தில் காட்டாமல் தோளில் போட்டுக்கொண்டு முழுத்தொடரையும் பார்க்க வைப்பது லீ சங்தான்.
சிறுவயதில் குழந்தைகளை துன்புறுத்தினால் அந்த பாதிப்பு அவர்களின் உளவியலை எப்படி பாதிக்கிறது என்பதை செய்தியாக சொன்னதற்கு உண்மையாகவே இயக்குநரை பாராட்டவேண்டும். பாலியல் ரீதியான குழந்தையை கொடுமை செய்யும்படி காட்சிகள் இல்லையென்பது ஆறுதல்
சியூஜின் என்ற நிறுவனத்தின் அடுத்த தலைவராகப் போகும் ஒருவர், சா டியூ ஹியூன் . இவருக்கு சிறுவயதில் ஏற்பட்ட மோசமான சம்பவம் ஒன்றால் ஆளுமை பிறழ்வு கொண்டவராக இருக்கிறார். இதனை ஆங்கிலத்தில் முதலில் மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என்று சொன்னார்கள். இப்போது அதனை டிஸ் அசோசியேட்டிவ் ஐடென்டிட்டி டிஸார்டர் என்று கூறுகின்றனர்.
அமெரிக்காவில் இருந்து படித்துவிட்டு திரும்பியவருக்கு ஆளுமை பிறழ்வு இருப்பது குடும்பத்தினருக்கு தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை நிறுவனத்தை நடத்த தங்கள் வம்சத்தில் இருப்பது பேரன் மட்டுமே. அவன்தான் வேலைகளைக் கற்றுக்கொண்டு நிறுவனத்தை வேட்டையாட துடிக்கும் உறவினர்களையும் கட்டுப்படுத்த வேண்டும். சா டு ஹியூங்கின் பாட்டி இதைத்தான் நினைக்கிறார்.
யாராவது கடுமையான திட்டினால், அடித்தால் உடனே சா டு ஹியூனுக்கு தலைவலி வரும். அந்த சூழ்நிலையைப் பொறுத்து அவனது உடலிலிருந்து சே ஜி, ஆன் யோ நா, நானா, பெரி பார்க், யோ சப் என பல்வேறு குணங்களைக் கொண்ட மனிதர்கள் வெளியே வருவார்கள். வெளியில் இருப்பவர்களை அந்தரை சிந்தரையாக்குவார்கள்.
பெரி பார்க், வீட்டிலேயே குண்டு தயாரிக்கும் மூளைக்காரன். அதனை எதிரிகள் மீது பயன்படுத்துவான். கப்பல் வாங்கி அதில் சென்று மீன்பிடிப்பதுதான் அவனது ஒரே லட்சியம்.
சே ஜி, கண்களுக்கு மைதீட்டி காதுகளுக்கு கடுக்கன் போட்டபடி அடர் நிற மேற்சட்டைகளை போடும் ஆசாமி. அடிதடி என்றால் உடனே சா டு ஹியூனை தள்ளிவிட்டு அவன் உடலை பயன்படுத்தி எதிரில் இருப்பவர்களை அடித்து துவைப்பான். இவன்தான் சா டு ஹியூனின் சிறுவயது நினைவுகளை அறிந்தவன். இருக்கும் பாத்திரங்களிலேயே வலிமையானவன் இவன். உளவியல் டாக்டர் ஓரி ஜின்னைப் பார்த்தவுடனே தேதியைச் சொல்லி இப்போதிருந்து உன்னை காதலிக்கிறேன் என்று மிரட்டும் அலட்டல் ஆள்.
யோ சப், மூக்கு கண்ணாடி அணிந்த புத்திசாலி. படித்த கவிஞர்கள், தத்துவ வாதிகளின் மேற்கோள்களை சொல்லி பேசுவான். ஆனால் அத்தனை இருந்தாலும் கூட வாழ்க்கை மோசமாக இருக்கிறது. நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று பிடிவாதம் பிடிப்பவன். இவனோடு இரட்டையராக பிறப்பவள் ஆன் யோ னா. இவளுக்கு அழகான ஆண்கள் என்றால் உடனே மாமா இங்கேயா இருக்கீங்க என்று சொல்லி உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் ஒன்றை வைத்தபிறகுதான் பேசுவாள். உடையும், லிப்ஸ்டிக்கும் ஹேர்கிளிப்பும் அடையாளம்.
இவர்களோடு கரடியும் நானா என்ற பாத்திரமும் உண்டு. இருப்பதிலேயே பலவீனமான பாத்திரம் இது. ஏனெனில் சா டூ ஹியூனின் சிறுவயது பாத்திரம் இது.
இத்தனை பாத்திரங்களையும் தனது உடலில் வைத்துக்கொண்டு சா டு ஹியூன் என்பவர் எப்படி தனது நிறுவனப் பொறுப்புகளை சமாளிக்கிறார், கூடவே தனது சிறுவயது தோழியைக் கண்டுபிடித்து கைபிடிக்கிறார் என்பதுதான் கதை.
ஒருவர் தனது நிலையிலிருந்து மாறுபட்ட நடந்துகொண்டாலே அவர ஒரு மென்டல் என்று கூறும் நிலையிலிருந்து மெல்ல மாறி வருகிறோம். உடலுக்கு வரும் நோய்களைப் போலவே மனதிற்கு வரும் நோய்களையும் சிகிச்சை கொடுத்து தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையைத் தொடர் கொடுப்பது வரவேற்க வேண்டியது.
உளவியல் பிரச்னையை ஆழமாக ஆராய்ச்சி செய்து அதனை கதையின் போக்கில் விளக்கி, சிறுவயது குழந்தைகளுக்கு எந்தளவு முக்கியம். பெற்றோர்கள் அதனை எப்படி கையாள வேண்டு்ம் என்பதை பல்வேறு பாத்திரங்களின் உணர்ச்சிகளோடு நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள். தொடரில் முக்கியமான பாத்திரம் சா டூ ஹியூன்(ஜி சங்), உளவியல் மருத்துவர் ஓரி ஜின்(வாங் ஜங் இயும்), அவரது சகோதரரான ஓரி ஆன்(பார்க் சியோ ஜூன்).
பப் ஒன்றில் சே ஜி, ஓரி ஜினைப் பார்த்து அன்றைய தேதியைச்சொல்லி தனது காதலைக் கூற அவள் அதிர்ச்சியாவது, சா டு ஹியூனைப் பார்த்து அவரது பெயரைக் கேட்பது, அவரது உளவியல் குறைபாட்டை தெரிந்து அவருக்கு உதவ அமெரிக்காவுக்கு செல்வதாக கூறுவது, பல்வேறு ஆளுமை கொண்ட பாத்திரத்துடன் பழகி புரிந்துகொண்டு பிறகு அவர்களை பிரியும்போது அழுவது, நோயாளியாக பார்ப்பதா, காதலனாக பார்ப்பதாக என தடுமாறும் இடம் என வாங் ஜங் பிரமாதமாக நடித்திருக்கிறார். கோபமும், குழப்பமுமாக இருக்கும் முதல்பகுதியில் நகைச்சுவைக்கு அதிக இடம் கொடுத்திருக்கிறார்கள். இதற்கான பெரும்பகுதியை ஓரி ஆன், ஓரி ஜின் ஆகிய இருவருமே செய்கிறார்கள். இரண்டாவது பகுதியில் நினைவுகள் மீளும் இடங்களில் ஓரி ஜின் பாத்திரமும் குற்றவுணர்வும் காதலும் நிறைந்து பேசு்வதை வசனங்கள் காட்டுகின்றன.
ஓரி ஆனைப் பொறுத்தவரை தான் நினைத்த அன்பை ஓரி ஜின்னிடமிருந்து பெறமுடியாமல் அவளை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துகொண்டே இருக்கும் பாத்திரம். ஓரி ஜின்னின் கடந்தகாலம் பற்றி தெரிந்து அவளை காதலிக்க தொடங்கினாலும் கூட இருவருக்குமான உறவுமுறை தடையாக உள்ளது. ஓரி ஜின்னின் மனம் சோரும்போதெல்லாம் அவளது அண்ணனாக ஓரி ஆன்தான் துணையாக நிற்கிறான். கடந்த உண்மைகளை ஓரி ஜின் அறியும்போது, ஓரி ஜின்னுக்கான காதல் வாய்ப்புகள் குறைந்துவிடுகிறது. அப்போது அவன் சா டு டியூனோடு பேசும் காட்சி நெகிழ்ச்சியானது. அவனது வாழ்வில் அவனை பைத்தியமாக நேசிக்கும் ஒரு பெண் ஆன் யோ னா மட்டுமே. அதுவும் சா டு டியூனின் ஆளுமை பிறழ்வு பாத்திரம்.
பணக்கார குடும்பங்களில் திருமணம் என்பது மற்றுமொரு வணிக திட்டமாக நடைபெறுகிறது. அதில் இரக்கமே இல்லாமல் எப்படி பல்வேறு மனங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை பார்ப்பவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும்படி காட்சிகள், வசனங்கள் மூலம் சொல்லிவிடுகிறார்கள். சா டு ஹியூங்கோடு அவரின் அம்மா பேசும் காட்சி இதற்கு உதாரணம். ஓரி ஜின்னை கடத்திவைத்து அவளை சா மீட்டு வந்தபிறகு இருவருக்கும் நடக்கும் உரையாடல் மேற்சொன்னதை துல்லியமாக்கும். அடுத்து, ரத்த சம்பந்தமில்லாத குழந்தை என்பதால் சிறுமி ஆரி ஜின்னைக் கொடுமைப் படுத்துவது அனுமதிக்கும் சாவின் பாட்டி பாத்திரம் பேராசையும் பெருமையும் கௌரவமும் கொண்டது. குடும்ப பெருமை, வணிகம் இதற்குப் பிறகுதான் பாசம் எல்லாம் என்பதை வலுவாக உணர்த்துவது.
உளவியல் தொடர்பான பிரச்னை பேசுபொருளாக்கி, குழந்தைகளை துன்புறுத்துவதை முக்கியமான பேசுபொருளாக்கி அன்பு அனைத்தையும் குணப்படுத்தும் என நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள்.
அன்பே மருந்து!
komalimedai team
கருத்துகள்
கருத்துரையிடுக