நூற்றாண்டுகளாக காதலியைக் கரம் பிடிக்க காத்திருக்கும் காதலன்! மூன்ஷைன் அண்ட் வேலன்டைன்
மூன்ஷைன் அண்ட் வேலன்டைன்
சீன டிவி தொடர்
யூட்யூப்
பூமியில் வாழும் நரிக்குலம் வடக்கு, தெற்காக பிரிந்து தனியாக வாழ்கிறது. இதில் தெற்கில் வாழ்பவர்கள் வடக்கில் இருப்பவர்களை விட சிறப்பாக மனிதர்களுடன் இணக்கமாக வாழ்கிறார்கள். வடக்கில் வாழ்பவர்கள் மனிதர்களுடன் அதிக இணக்கமின்றி தனியாக இருக்கிறார்கள். ஒட்டுமொத்த குலத்திற்கும் தலைவராக சதிகள் நடக்கின்றன. இதில் ஜிங்டிங் என்ற பார்வையில்லாத தெற்கு குல தலைவரின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதுதான் கதை.
கதையை மேலே சொன்னபடியும் சொல்லலாம். பல நூறாண்டுகளாக தொடரும் காதல் உறவை எப்படி நவீனத்திலும் காப்பாற்றி மண உறவில் முடிக்கிறார்கள் இரண்டு காதலர்கள் என்றும் கூறலாம்.
தெற்கு நரிக்குலத் தலைவராக இருப்பவர் ஹெலன் ஷி. இவரின் அதிகாரப்பூர்வ பெயர், ஜிங்டிங். இவருக்கும் இவரது தந்தைக்கும் திருமண விஷயத்தில் நடக்கும் பிரச்னையால் குலமே இரண்டாகிறது. ஹெலன் அப்பாவை அதிகம் விமர்சிக்காமல் அமைதியாக தனது வா்ழ்க்கையை நடத்துகிறார். இவர் நரிக்குலத்திற்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவில் பிறந்தவர். இதனால் என்னவோ பிறந்ததிலிருந்து கண்பார்வை இல்லாமல் இருக்கிறார். இதனால் இவருக்கு இளம் வயதில் சிறுமி ஒருவரை அழைத்து வந்து நட்போடு பழக வைக்கிறார்கள். ஆனால் அந்த சிறுமிக்கு ஒரு தனி விஷேசம் இருக்கிறது. அவளை ஹெலன் மணம் செய்துகொள்ள நினைக்கிறார். ஆனால் அவரது அப்பா, அந்த பெண்ணை பயன்படுத்தி மகனது பார்வை குறைபாட்டை சரி செய்ய நினைக்கிறார். இதுபற்றி தெரியாத ஹெலன் அவரது வலையில் மாட்டிக்கொள்கிறார்.
அவரது அப்பாவின் துரோக திட்டத்தால் ஹெலனின் பார்வை மீள்கிறது என்றாலும் அவரது காதலியின் உயிரை காப்பாற்ற முடியாமல் போகிறது. இதனால் மீண்டும் தன் காதலியை அடுத்த பிறவியில் சந்தித்து அவரை மணம் செய்து வாழ நினைக்கிறார். ஆனால் நவீனத்தில் அவரது காதலி எங்கே பிறந்திருக்கிறார் என்பதை தனது ஆட்கள் மூலம் தேடுகிறார் ஹெலன். அப்போதுதான் குவான் பிபீ என்ற பெயரில் தனது காதலி பத்திரிகை ஒன்றில் வேலை செய்வது தெரிகிறது. ஆனால் அவள், தனது காதலனுடன் உறவில் இருக்கிறாள் என்பதை அறிகிறார் ஹெலன். எனவே, அவளை சந்தித்து அவளுடன் பழக நினைக்கிறார். இதற்கு இடையே இவரை கலப்பு ரத்தம் என வடக்குப்புற சொந்தங்கள் கரித்துக்கொட்டி கொல்லுவதற்கான திட்டத்தை சொந்த தம்பியை வைத்தே தீட்டுகின்றனர். நூறாண்டுகளுக்கும் மேலாக ஹெலன் தனது பார்வைக் குறைபாட்டுடன் இருக்கிறார். ஒருமுறை காதலியை இழந்துவிட்டதால் இனி தனது சுயநலனுக்காக காதலியை பயன்படுத்தக்கூடாது என அவளை மணம் செய்துகொண்டால் போதும் என நினைக்கிறார். அதேசமயம் ஹெலனுக்கு அதிகாரப்பூர்வமாக தியான்சுன் குலத்தில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணும் அவரை மனதில் நினைத்துக்கொண்டே இருக்கிறார். காரணம், ஹெலனை விட நல்ல மனிதர் அந்த குலத்தில் யாரும் இல்லை என்று நினைக்கிறார். ஹெலன் மனிதகுலப் பெண்ணை விரும்பினாலும் கூட அவள் இறந்துவிட்டால் தன்னை அவர் நேசிக்க வாய்ப்புள்ளது என அன்பிற்காக காத்திருக்கிறாள். ஆனால் அவள் ஏராளமான உதவிகளை ஹெலனுக்கு செய்கிறாள். இது ஹெலனுக்கு தெரிந்தாலும் கூட அவர் குவான் பீபியை மட்டுமே நேசிக்கிறார்.
ஹெலன் குவான் பீபியை எந்த தந்திரங்களும் இல்லாமல் காதலிக்க நினைக்கிறார். ஆனால் அவளோ, அவளை காதலிக்காத பள்ளிப்பருவ தோழனை நினைத்துக்கொண்டு இருக்கிறாள். இவள் ஏழை, அவன் படிப்பிலும் பணத்திலும் உயரத்திலும் இருப்பவன். பார்வை இல்லாத ஹெலன், தனது காதலி இருபத்தைந்து வயதில் இறந்துவிட வாய்ப்பு உள்ளதால், அவளை எப்படி காப்பாற்றுவது என அதற்கான ஆவணங்களை தேடிக்கொண்டிருக்கிறான். முந்தைய வாழ்க்கையில் நடந்தது போன்ற அசம்பாவிதங்கள் நடக்க கூடாது என்பதற்காக அவளை காப்பாற்ற நினைக்கிறான். ஆனால் குவான் பிபீக்கு ஹெலனின் அன்பு வினோதமாக தெரிகிறது. அவளால் தான் நினைத்த இடத்தில் இருந்து அன்பு கிடைக்காத நிலையில் ஹெலனின் அன்பை ஏற்றுக்கொள்ளவும் தயங்குகிறாள். ஆனால் அவனின் மனப்பூர்வமான அன்பும், காயப்படுத்தாமல் நடந்துகொள்ளும் குணமும், நேர்மையும் மனதைக் கவர்கிறது. ஆனால் அவனது பேச்சும், உணவும், அவனது நண்பர்களும் ஏதோ சரியில்லை என அவளுக்கு எச்சரிக்கை தருகிறது.
இந்த பிறவியில் இருவரும் ஒன்றாக சேர்ந்தார்களா இல்லையா என்பதை இறுதிக்காட்சியில் பார்க்கலாம்.
ஜானி குவாங், விக்டோரியா சாங் என இருவரும் ஹெலன், குவாங் பிபீ பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தொடரில் அதிக சண்டைகள் கிடையாது. நிறைய காட்சிகளில் காதலும், தங்களது உணர்வை எப்படி வெளிப்படுத்துகிறார்கள், எங்கே தடுமாறுகிறார்கள், காதலுக்காக தன்னையே தியாகம் செய்வதுமாக காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். எனவே, காதல் மனதில் பெருக பெருக தொடரைப் பார்க்கலாம். கடைசி எபிசோடுகளில்தான் படுக்கை அறை காட்சிகளும், திடீர் சண்டைகளும் வருகின்றன. ஹெலனின் தம்பிதான் வில்லன். ஆனால் அவனும் கூட தனக்கு தேவைப்பட்ட காதலி கிடைத்தவுடன் இறப்பதற்கு சம்மதிக்கும் காட்சி நெகிழ்ச்சியானது. காதல் மட்டும் இல்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் அறுவைசிகிச்சை நிபுணர்களாக வரும் ஒருவரை ஒருவர் விட்டுத்தராத நண்பர்களின் காட்சி, முதலில் நகைச்சுவையாக இருந்தாலும் இறுதியில் கண்களை கலங்க வைக்கிறார்கள். முதலில் ஒருவரை காதலிக்கும் பேக்கரிப் பெண் இருவரின் நட்பை அறிந்து இருவரையும் கைவிடாமல் தன்னோடு இணைத்துக்கொள்வது உண்மையிலேயே புதுமையானது. மின்சாரம் இல்லாத இரவில் இரு நண்பர்களுக்கும் இடையிலான உறவை குவின் பீபியின் தோழி அறிந்துகொண்டு கண்கலங்கும் காட்சி சிறப்பாக உள்ளது.
தனது காதலி ஹியாயூன், குவான் பீபியாக பிறப்பது, சிறுமியாக வளர்வதை ஹெலன் பார்ப்பது, மகிழும் காட்சிகள் நன்றாக காட்சிபடுத்தப்பட்டுளன.
படத்தின் இறுதிக்காட்சி மாயம் போல நடக்கிறது. நிபந்தனையற்ற அன்பு காயப்படுத்தினாலும் அதனை பொறுத்துக்கொண்டால் எப்படி ஒன்றாகிறது என்பதை தொடர் காட்சிபடுத்தியுள்ளது.
நிலவொளியில் காதல் செய்வோம்!
கோமாளிமேடை டீம்
The series was directed by Leste Chen,
and stars Victoria Song and Huang Jingyu. It airs on Tencent Video from May 9, 2018 and ends on June 13, 2018.
கருத்துகள்
கருத்துரையிடுக