சதியால் அக்காவை கொன்றவர்களை மறுபிறவி எடுத்து வந்து பழிதீர்க்கும் தங்கத் தம்பியின் கதை! அன்டேம்டு- சீன தொடர்
அன்டேம்டு
சீன தொடர்
51 எபிசோடுகள்
எம்எக்ஸ் பிளேயர்
சதிக்குள்ளாகி தனது குடும்பத்தை தொலைத்த வீரன் பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு வந்து எதிரிகளை அடித்து நொறுக்குவதுதான் கதை.
சீனாவில் புகழ்பெற்ற நடிகர்களாக வாங் யிபோ, ஷியாபோ ஷான் ஆகிய இருவர்தான் தொடரை பார்க்கவேண்டும் என ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள். இவர்களைச் சுற்றியுள்ள நட்பும், அதைத்தாண்டிய நம்பிக்கையும், பெண்களே பொறாமைப்படும் அழகும் தொடரை 2019ஆம் ஆண்டின் முக்கியமான தொடராக மாற்றியுள்ளது.
தொடர் தொடங்கும்போது மூ என்ற மூகமூடி அணிந்த ஒருவனின் உடலில் ஆவி ஒன்று அனுமதி கேட்டு நுழைகிறது. அதனை கண்டுபிடிக்கும் கோசு குல சீடர்கள் அதனை விரட்ட நினைக்கின்றனர். மூவின் உடலில் ஏராளமான ரத்தக்காயங்கள் உள்ளன. அதனை குணமாக்க அதற்கு காரணமானவர்களை பழிவாங்கவேண்டும். எனவே வே வூ ஷனின் ஆவி அதற்கான வேலையில் இறங்குகிறது. அப்போதுதான் சீடர்களின் பணிக்கு உதவியாக கோசு குலத்தைச் சேர்ந்த லான்சன் வருகிறான். அவன் வேறு யாருமில்லை. இப்போது மூ உடலில் ஆவியாக வந்துள்ள வே வூ ஷனின் நெருக்கமான அதிகம் பேசாத உயிருக்குயிரான தோழன்தான். உண்மையில் வே வூ ஷன் ஆவியாகி இன்னொருவரின் உடல் வழியாக எதற்கு வந்துள்ளான், அவனுக்கும் லான்சனுக்கான நட்பு ஆகியவற்றைப் பற்றி தொடர் விவரிக்கிறது.
சீனாவில் வென், ஜியாங், நெய், கோசு ஆகிய குலங்கள் உள்ளன. இவற்றில் மிக மோசமான சர்வாதிகாரத் தன்மை கொண்ட குலம் வென் குலம்தான். இந்த குலத்திற்கு யின் உலோகம் எனும் ஆபத்தான சக்தி கிடைக்கிறது. ஆனால் பாதிதான் கைக்கு கிடைக்கிறது. மீது எங்கே இருக்கிறது என தேடிக்கொண்டிருக்கிறார்கள். அது கைக்கு கிடைத்தால் நாமே உலகை கட்டி ஆளலாம் என்பது வென் குலத்தலைவரின் பேராசை. பேராசை என்று சொல்லிவிட்டோம் பின்னே அது எப்படி நிறைவேறும்? இந்த யின் உலோக பிரச்னைக்கு தொடக்கப்புள்ளி கோசு குலத்தின் முன்னோர்களிடம் உள்ளது. அதில் வரும் பெண் ஒருவர்தான் இதற்கு காரணம். அவர் அந்த யின் உலோகம் ஆபத்தானது அதனை பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்று சொல்லி கோசு குலத்தின் லான்சன், ஜியாங்க் குலத்தின் வே வூ ஷன் ஆகியோரிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.
இந்த இருவரும் இதனை காப்பாற்ற நினைக்கும்போது, இவர்களிடம் உலோகம் இருக்கிறது என வென் குலத்தினர் தெரிந்துகொண்டு இவர்களை கொல்ல முயல்கின்றனர். இதனால் பல்வேறு குலங்களிடையே கடுமையான வாழ்வா சாவா போராட்டம் நடக்கிறது. இந்த சண்டையில் சிலர் பயன்பெறுகிறார்கள். ஒருகட்டத்தில் வே வூஷன், லான்சன் போன்றோர் சதியில் தங்களுக்கு தெரியாமல் உள்ளே காய்களாக நகர்த்தப்பட்டு பாதிக்கப்படுகிறார்கள். வே வூ ஷன், அவனது அண்ணன் சென் ஜிங், அக்கா என அனைவருமே தங்கள் குடும்பத்தை இழக்கிறார்கள். வே வூ ஷனின் அண்ணனின் சித்திரவதை செய்யப்பட்டு ஆன்ம பலத்தை இழக்கிறான். இவனுக்கு பழைய பலம் திரும்பி வர, வென் குலத்தின் வென் குயின், வென் இங் என்ற இருவரைப் பயன்படுத்திக்கொள்கிறான். வே வூ ஷனின் முடிவால் அவன் தனது வாழ்நாள் முழுக்க வாளை பயன்படுத்த முடியாமல் போகிறது. பலவீனமான நேரத்தில் அவனை அடித்து உதைத்து அனாதை பிணங்களை எரியும் புதையல் குழி எனும் இடத்தில் தூக்கி எறிகிறது வென் குலம். அங்கு வே வூ ஷனுக்கு தீயசக்திகளின் ஆதரவு கிடைக்கிறது. அதனை தனது உடலில் ஏற்றுக்கொள்கிறான். ஆன்ம சக்தியை இழந்துவிட்ட அவனுக்கு வேறு வழி ஏதுமில்லை.
மூன்று மாதங்களுக்கு பிறகு திரும்பி வருபவன் தீய ஆன்ம சக்திகளின் மூலம் தனது எதிரிகளை கொல்கிறான். அனைத்துமே கொடூரமான கொலைகள், தீய மந்திரத்தை பயன்படுத்தி அனைவரையுமே பரலோகம் அனுப்புகிறான். அந்த கொலைகளைப் பார்த்ததும் லான்சனுக்கு தனது நண்பன் திரும்பி வந்துவிட்டான் என புரிகிறது. ஆனால் அவன் ஏன் வாளை எடுக்காமல் புல்லாங்குழலைப் பயன்படுத்துகிறான் என்பது அவனுக்கு புரியவில்லை. பலரும் அவனது சக்தியை புகழும்போது, லான்சன் மட்டுமே தீயசக்தி உடலுக்கும் மனதுக்கும் ஆபத்தானது. நான் உனது மனதை கட்டுப்பாட்டில் வைக்க இசையைக் கற்றுத்தருகிறேன் என்று சொல்லுகிறான். யின் உலோகத்தில் புலி முத்திரையை வரைந்து வைத்துள்ள வூஷன் அதெல்லாம் எனக்கு தேவையில்லை என்று கூறிவிடுகிறான்.
உண்மையில் அவனுக்கு ஆன்ம சக்தி இல்லை என்பதால் வீரனாக இருக்க முடியாது என்பதை லான்சனுக்கு கூறுவதில்லை. இதனால் தீய சக்தி மட்டுமே வே வூஷனுக்கு உறுதுணையாக உள்ளது. வென் குலத்தை அனைவரும் ஒன்றுதிரண்டு எதிர்த்து வெல்கிறார்கள். இதனால் அனைவருக்கும் அமைதியாக வாழும் வாய்ப்பு கிடைப்பதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால் வென் குலத்தின் இடத்தில் ஜின் குலம் பேராசையுடன் உட்கார்கிறது. ஜின் குலத்தை சேர்ந்தவருடன் வே வூ ஷனின் அக்காவுக்கு திருமணமாகிறது. இது அவனுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அக்காவின் மனதிற்காக ஏற்கிறான். அதற்கு முன்னரே அவனிடன் புலி முத்திரை இருப்பது அவனது சக குலத்தாருக்கும் பிறருக்கும் தெரியவர பொறாமை அதிகரிக்கிறது. அவனது சக்தி நமக்கு ஆபத்து என ஜின் குலம் பிரசாரம் செய்கிறது.
வென் குலத்தில் பிடிபட்டு முகாமில் அடைக்கப்பட்டவர்களை கொல்ல ஜின் குலம் உத்தரவிடுகிறது. அதனைத் தடுக்க வென் குயினுடன் வே வூஷன் செல்கிறான். அங்கு வென் குயின் என்ற பெண்ணின் தம்பி வென் இங் படுகொலை செய்யப்பட்டு கிடக்கிறான். கோபமாகிற வே வூ ஷன் வென் இங்கை பயன்படுத்தி வீரர்களை அடித்து உதைக்கிறான். ஆனால் வென் இங் அவனது கட்டுப்பாட்டில் இல்லாதது பிறகுதான் அவனுக்கு தெரிகிறது. இதற்கு காரணம், அவனது புல்லாங்குழல் இசையைப் போலவே கொந்தளிப்பு இசையை துரோகி ஒருவன் உருவாக்குவதுதான். இதனால் ஒட்டுமொத்த குலங்களுமே வே வூ ஷன் மேல் கோபம் கொள்கிறது. அவன் பிழைத்திருக்கும் மக்களை கூட்டிக்கொண்டு புதையல்குழிக்கு செல்கிறான். அம்மக்களோடு தனியாக வாழ்கிறான். இதற்கிடையே அவனிடம் இருக்கும் யின் உலோகத்தை கைப்ற்ற ஜின் குலத்தினர் முயல்கின்றனர். அதில் துரதிர்ஷ்டவசமாக அக்காவின் கணவர், அவரது தம்பி வென் இங் மூலம் கொல்லப்படுகின்றனர். இதனால் வே வூ ஷன் மீது குற்றம்சாட்டப்படுகிறது. அவனை இதிலிருந்து காப்பாற்ற அவனை பிரியமாக காதலிக்கும் வென் குயின், அவளது தம்பி வென் இங் மற்றும் பிற மக்கள் அனைவருமே அரசிடம் சரண்டைகின்றனர். ஜின் குலம் , அவர்களை சித்திரவதை செய்து தூக்கிலிட்டு கொல்கின்றனர். இது வே வூ ஷனை கடுமையாக கோப ப்படுத்துகிறது. எந்த பாவமும் செய்யாத மக்களை எதற்கு கொல்கிறீர்கள்? என்னிடமுள்ள யின் உலோகத்திற்குத்தானே என அனைத்து குலத்தின் வீரர்களுடன் தனியாக தீயசக்தி பலத்துடன் சண்டை போடுகிறான். லான்சன் அவனை சமாதானப்படுத்த முயல்கிறான். ஆனால் முயற்சி தோல்வியடைகிறது. இந்த நேரத்தில் வே வூ ஷனை சமாதானப்படுத்த அவனது அக்கா அங் கு வருகிறாள். ஜின் குலத்திலுள்ள சில சதிகார ர்களால் தீய சக்தி தூண்டப்பட வே வூஷனின் அக்கா கொல்லப்படுகிறாள்.
இதனால் வே வூ ஷன் மனமுடைந்து யின் உலோகத்தை தூக்கி எறிந்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறான். மலையிலிருந்து கீழே குதிப்பவனை லான்சன் கைகொடுத்து காப்பாற்ற முயல்கிறான். அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே வே வூஷன் கீழே விழுகிறான்.
அவனது இந்த நிலைக்கு காரணம் யார் என எப்படி வே வூ ஷனும், அவனது நண்பன் லான்சனும் எப்படி கண்டுபிடித்து தீயசக்தியை அழிக்கிறார்கள், யின் உலோகத்தை காக்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.
இருவேறுபட்ட துருவங்களாக உள்ள நண்பர்கள் தங்களுக்குள் எப்படி நம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்பது லான்சன், வே வூ ஷன் மூலம் காட்டியிருக்கிறார்கள். வே வூ ஷனைப் பொறுத்தவரை மனசாட்சிப்படி நடக்கும் குறும்புக்காரன். அதேசமயம் வாள், வில், மந்திர பயன்பாடு ஆகியவற்றில் திறமை கொண்டவன். அவனது மாமா தத்தெடுத்து வளர்க்கிறார். அவனது அண்ணன் சென்னை விட மனிதநேயமாக நடந்துகொள்வதோடு பிறருக்கு ்உதவி என்றால் முன்பாக நிற்பவன். துணிச்சலும் மனதில் ஈரமும் கொண்டவன். இதனால் கோசு குலத்தின் இறுக்கமான மனம் கொண்ட லான்சனும் மெல்ல அவனை நண்பனாக ஏற்கிறான். வாழ்க்கை முழுவதும் வே வூ ஷனின் பேச்சை நம்புகிறான். பிறர் கூட வே வூ ஷனைப் பற்றி தவறாக பேசும்போது அதை எப்போதுமே லான்சன் நம்புவதில்லை.
வென் குலமக்களை காப்பாற்றி குதிரையில் அழைத்துச் செல்லும்போது, மக்களை காப்பாற்றுவதே எனது லட்சியம். அதை எதிர்த்தால் நேர்மையான மனசாட்சி கொண்ட உனது வாளினால் நான் இறந்துபோவது எனக்கு மகிழ்ச்சி என பேசும் காட்சி பிரமாதமாக எடுக்கப்பட்டுள்ளது. லான்சன் தனது வாழ்நாளில் அம்மாவின் பிரிவுக்குப்பிறகு நண்பன் எடுக்கும் முடிவுக்காக, கண்ணீர் விடுவான். பிறகு புதையல் குழி அருகே வே வூ ஷனைப் பார்க்க செல்லும்போது அவனிடம் பணம் இல்லாமல் குழந்தைக்கு தேவையான பொருளை கூட வாங்கிக்கொடுக்க முடியாமல் இருப்பதை மெல்ல புரிந்துகொண்டு மனதிற்குள் வருந்தும் காட்சி. லான்சனை அனுப்பி வைத்துவிட்டு குழந்தை அய்வானுடன் ஒற்றை வழித்தடத்தில் பாட்டுப்பாடியபடி நடந்துசெல்வதை லான்சன் பார்க்கும் காட்சி.
வே வூ ஷனைப் பொறுந்தவரை விளையாட்டுத்தனமாக இருந்தாலும் யாருக்கும் கெடுதல் செய்யாதவன். கேலியும் கிண்டலுமாக இருந்தாலும் தனக்கு உதவி செய்தவர்களை அவன் எப்போதுமே மறப்பது இல்லை. அப்படித்தான் அவனது தம்பியாக காதலி வென் குயினின் தம்பி வென் இங மாறுகிறான். ஒருவகையில் முதல் வாழ்க்கையில் அவனது வாழ்க்கை திசைமாறி போக அவனும் முக்கியமான காரணம். ஆனால் சுயநினைவில் இருக்கும்போது, வே வூ ஷனுக்கு ஏற்படும் அனைத்து ஆபத்தையும் அவனே முன்வந்து தடுக்கிறான். எதிரிகளை பந்தாடுகிறான். இத்தனைக்கும் அவனது வாழ்க்கையை ஒரே ஒரு முறை வே வூ ஷன் காப்பாற்றுவான். இதனால் தனது வாழ்க்கையையே அவன் வே வூ ஷனுக்கு விட்டுக்கொடுத்துவிடுகிறான். வே வூ ஷன், அவனது பயத்தை விரட்ட கொடுக்கும் மந்திர தாயத்தை அவன ஜின் குலத்தினரால் கொல்லப்படும்போது கூடவே வைத்திருப்பான். அதைப் பார்த்தபிறகுதான் வே வூ ஷனுக்கு கட்டுப்படுத்தமுடியாத வருத்தமும், இயலாமையும், கோபமும் ஆக்ரோஷமும் ஏற்படும்.
உலகமே எதிராக நிற்கும்போது ஆன்ம பலமாக லான்சனும், உயிர் காக்கும் பலமாக வே வூ ஷனுக்கு வென் இங்கும் இருப்பார்கள். இந்த இருவரின் உளவியலும் ஆச்சரியகரமான தன்மை கொண்டது. இருவரின் வாழ்க்கையிலும் வே வூ ஷன் வந்தபிறகுதான் பல்வேறு மாற்றங்களையும் நம்பிக்கையையும் காணத் தொடங்குவார்கள்.
லான்சன், வே வூ ஷன் உறவைப் பொறுத்தவரை பார்வையாளர்களுக்கு அது நட்பைத் தாண்டியது என உணர அதிக நேரமாகாது. அந்தளவு நெருக்கமானதாகவும், உணர்ச்சிகரமானதாகவும், நேர்மையானதாகவும் அந்த உறவு அமைந்துள்ளது. பிரமாதமாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. இறுதிப்பகுதியில்தான் லான்சன், தனது வாழ்க்கையைய வே வூஷன் அண்ணனின் வாழ்க்கைக்காக பணயம் வைத்துள்ளான் என்பதை அறிந்துகொள்கிறான். வே வூ ஷன் ஒப்பீட்டளவில் தனது நண்பன் லான்சனுக்காக பெரிய தியாகங்களை செய்யவில்லை என்றாலும் இருவரும் தெடுங்காலம் நட்பாக இருப்பது கடினம் என்பதை மதிப்பிட்டிருக்கிறான். ஆனால் லான்சனைப் பொறுத்தவரை வே வூ ஷனைப் போல நேர்மையாகவும், தனது கருத்தை துணிச்சலாக சொல்லும் மனதைக் கொண்டவனை அவன் சந்தித்ததில்லை. இதனால் நிறைய இடங்களில் வே வூஷனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு துணையாக நிற்கிறான். மூன்று ஆண்டுகள் மலையில் வாழும் தண்டனையைக் கூட ஏற்கிறான். இதனை அறியும்போது வே வூ ஷன் மனம் நெகிழ்கிறது. வெளிப்படுத்தப்படாத அந்த அன்பு, அவனை குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது. ஏனெனில் அவன் இறக்கும்போது வென் இங்கை காப்பாற்ற முடியாததும், அக்காவை தானே கொன்றுவிட்டோம் என்ற வேதனையும் மட்டுமே மனதில் இருந்தது.
இசையும் வாளுமாக இரண்டாம் பகுதி மனதை அமைதிபடுத்துகிறது. புல்லாங்குழல் இசையும் பாடல்களும் தொடரின் தரத்தை உயர்த்தியுள்ளது. குடும்பம், இசை, பாசம், நேசம், பொறாமை, துரோகம் என அனைத்து உணர்ச்சிகளும் தொடர் முழுக்க சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இரு நண்பர்களுக்கு இடையிலான அசைக்க முடியாத நம்பிக்கையும் அன்பும்தான் இறுதியில் நமது மனதில் உள்ளது. அதுவே தொடரின் வெற்றி எனலாம்.
கோமாளிமேடை டீ்ம்
கருத்துகள்
கருத்துரையிடுக