முரடன், சாமுராய், துறுதுறு பெண் என மூன்று பேரும் இணைந்து சாமுராயைத் தேடிச்செல்லும் பயணம்! - சாமுராய் சம்புலு - அனிமேஷன்
சாமுராய் சம்புலு
அனிமேஷன் தொடர்
இருபத்தி ஆறு எபிசோடுகள்
குருவைக் கொன்றுவிட்டு சுற்றும் சாமுராய் வீரனும், ரைகு தீவில் வளர்ந்த குற்றவாளி ஒருவனும் நண்பர்களாகி, இளம்பெண் ஒருவளுக்கு அவளது தந்தையைக் கண்டுபிடிக்க உதவுகிறார்கள்.
தொடரின் டைட்டிலிலேயே ஜின் என்ற சாமுராய் வீரன் எப்படி, முகன் என்பவன் எப்படி, இவர்களை தனது பாதுகாவலர்களாக கொண்டு தந்தையைத் தேடும் ஃபு என்ற பெண்ணின் குணம் எப்படி என சொல்லிவிடுகிறார்கள்.
இருபத்தி ஆறு அத்தியாயங்களில் சிறுகதை போல ஒரு கதையைச் சொல்லுகிறார்கள். இவற்றில் ஜின், முகன் என இருவருமே தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொண்டு சண்டைபோடுகிறார்கள், நகைச்சுவை செய்கிறார்கள், காதலிக்கிறார்கள், தங்களை நிழல் போலத் தொடரும் இறந்தகாலத்தை நினைத்து வருந்துகிறார்கள், புதிய விஷயங்களைக் கற்கிறார்கள்.
இரண்டு ஆண்கள், ஒரு பெண் என்றால் முக்கோண காதல் இருக்குமே என்றால் அதில்தான் வேறுபாடு காட்டுகிறார்கள். முகன், காசு கொடுத்தால் எதையும் செய்யும் முரடன். அதிகம் யோசித்து செயல்படுவது இவனுக்கு சரிவராது. கோபம் வந்தால் உடனே அந்த இடத்திலேயே சண்டைக்கோழியாகி வாளை எடுத்து வீசிவிடுவான். முகனுக்கு நேர்மாறானவன் ஜின். நீரில் நீந்தும் மீன் போன்ற மனநிலை கொண்டவன். எதிரியின் மூச்சுக்காற்று தனது உடல் மீது படும் நேரத்திலும் கூட வேகமாக செயல்பட்டு அவனை வீழ்த்தும் மனதிடமும், வலிமையும் கொண்டவன். ஃபுவைப் பொறுத்தவரை தன்னையும் நோயாளி அம்மாவையும் கைவிட்டு சென்ற தந்தையைப் பார்த்து ஏன் இப்படி தன்னை கைவிட்டீர்கள் என்று கேள்வி கேட்கவேண்டும். இவளது குணம் என்பது ஏறத்தாழ முகனைப் போன்றதுதான். ஆனால் பெண்ணல்லவா? பேசிக்கொண்டே இருப்பாள். சோறும் பேச்சும்தான் இவளுக்கு மிக முக்கியம்.
ஃபுவின் உணவகத்தில் அமைச்சரின் மகனை எதிர்த்து நடக்கும் சண்டையில் முகன் ஃபுவுக்கு உதவுகிறான். ஆனால் இடையில் ஜின் உள்ளே வர இருவருக்கும் இடையில் நீயா, நானா போட்டி நடக்க உணவகம் தீயில் எரிந்துபோகிறது. இதனால் உருவாகும் எதிரியை அழிக்கும முயற்சியில் கடத்தப்பட்டிருக்கும் ஃபுவை மீட்பது முகன்தான். இறுதி எபிசோடில் கூட ஃபுவை கட்டி வைத்து சித்திரவதை செய்யும் ஒற்றைக்கண் வில்லனை சமாளிக்க வருவது முகன்தான். ஆனால் ஃபு தான் விரும்புவதாக ஜின்னிடம் தான் கூறுகிறாள். இவள் இப்படி கூறுவதை முகன் தூங்குவது போல கவனித்துக்கொண்டே இருக்கிறான்.
காதல் போன்ற உணர்ச்சிகளை வாழ்க்கை முழுக்க தொடர முடியாது என முகனும், ஜின்னும் மனதளவில் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். ஜின், கணவன் வாங்கிய கடனுக்காக விலைமாதாகும் பெண்ணை தற்கொலையிலிருந்து காப்பாற்றி காதலில் விழுகிறான். அப்போது மட்டுமே தன்னை காதலிக்கும் பெண்ணுக்காக இழக்க முனைகிறான். நிறைய அடிபடுகிறான். ஆனால் இறுதியில் அந்த பெண்ணின் மனதிலிருப்பது தன் மேல் உள்ள காதல் அல்ல. சுதந்திரம்தான் என்பதை உணர்ந்து அவளை சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து விடுவித்து அனுப்புகிறான். உண்மையில் அந்த காட்சி பிரமாதமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த வகையில் முகனுக்கு வரும் காதல், அவனது குணம் போலவே கரடுமுரடாக இருக்கிறது. கண்பார்வை இல்லாத பாடகி ஒருவளைப் பார்க்கிறார்கள். அவர்களிடம் வம்பு செய்பவர்களை அடித்து உதைக்கிறான். பாவம் பார்த்து உதவாதீர்கள் என்று அந்த பெண் கூற, அதற்காக அவர்களை உதைக்கவில்லை என்று கூறு்ம் மூவர் இணை அப்பெண்ணை பாதுகாத்து பதிலாக உணவைப் பெறுகின்றனர். அந்த பெண்ணுக்கு பார்வை இல்லை என்றாலும் பிறரது உணர்வுகளை புரிந்துகொள்ளும் தன்மை உள்ளது. இதனால் முகனது மனதில் உள்ள வெறுப்பையும், தன் மீதுள்ள விருப்பத்தையும் உணர்கிறாள். இதனை அவள் குளத்தில் குளிக்கும்போது சொல்லும் காட்சியும், இவர்களது நெருக்கத்தை பார்த்து ஃபு பொறாமை கொள்ளும் காட்சியும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
நிறைய செக்ஸ் காட்சிகள், கொட்டும் ரத்தம் என தொடர் எடுக்கப்பட்டாலும் ஜப்பானில் உள்ள கலாசார சூழல், பிரச்னைகளை நவீனத்தன்மையுடன் சொல்ல முயற்சித்துள்ளனர். இதில் ஐந்து இசையமைப்பாளர்கள் பணிபுரிந்துள்ளனர். தொடரின் இடையிடையே வரும் பாடல்களை கேட்டால் உங்களையே மறப்பீர்கள். வாழ்க்கை அனுபவங்களை தேடி நாடோடியாக பயணிக்கும் மனிதர்களின் மனதைக் காட்டும் பாடல்களாக இவை அமைந்துள்ளன.
பயணித்துக்கொண்டே இருங்கள்
கோமாளிமேடை டீம்
thanks
meeka aka michael
Written by | Masaru Gotsubo |
---|---|
Published by | Kadokawa Shoten |
English publisher | |
Magazine | Monthly Shōnen Ace |
Demographic | Shōnen |
Original run | January 26, 2004 – September 25, 2004 |
Volumes | 2 |
https://en.wikipedia.org/wiki/Samurai_Champloo
கருத்துகள்
கருத்துரையிடுக