தீவு மக்கள் மீது திடீரென கோபம் கொண்டு வேட்டையாடும் தொன்மை கடவுள்! - அலோகா ஸ்கூபி டூ
அலோகா
ஸ்கூபி டூ
ஹவாயிலுள்ள அழகான தீவுதான் அலோகா. அங்கு அரசுக்கு முக்கியமான வருமானம் சுற்றுலா பயணிகளும், கடலில் மீன் பிடித்து விற்பதும்தான். இப்படி இருக்கையில் திடீரென அ்ங்குள்ள தொன்மையான கடவுளின் ஆன்மா அம்மக்களை தாக்க தொடங்குகிறது. விரைவில் அங்கு கடலில் அலைச்சறுக்கு போட்டி நடக்கவுள்ளது. இதனால் அந்த நகரின் மேயர் பதறுகிறார். அங்கு நிலங்களை விற்று கட்டிடங்களை கட்டி எழுப்ப நினைத்தவர்களும் தொழிலை இழக்கின்றனர்.
உண்மையில் திடீரென நடக்கும் அந்த தாக்குதலின் பின்னணி என்ன? சிறு மனிதர்களை அனுப்பி சுற்றுலா பயணிகளை அடித்து உதைத்து விரட்டும் நோக்கம் என்ன? வெளியாட்களை மெல்ல உள்ளூர் மக்கள் வெறுக்கும் அளவுக்கு சூழல் மாறுகிறது. இந்த சூழ்நிலையை எப்படி மிஸ்ட்ரி மெஷின் குழு கண்டுபிடிக்கிறது என்பதுதான் கதை.
ஹவாய் மக்களின் கலாசாரம், அவர்களின் நம்பிக்கை, உணவு என நிறைய விஷயங்களை அனிமேஷன் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். மக்களிடையே உள்ள நம்பிக்கையை வைத்து எப்படி சிலர் அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர் என்பதை ஃபிரெட், டெப்னி, வெல்மா, சேகி, ஸ்கூபி டூ குழு கண்டுபிடிக்கிறது. ஹவாயின் கடற்புறம் நடக்கும் கதை என்பதால் நீச்சல் உடை, அத்தீவு மக்களின் வினோதமான நடனம், கலாசாரத்தை சொல்லும் பாடல்கள், இயற்கையை வெளிப்படுதும் கட்டிட அமைப்புகள், குகைகள், உடைகள் என பார்த்து ரசிக்க இந்த படத்தில் நிறைய விஷயங்கள் உள்ளன.
படத்தில் ஃபிரெட் குழுவினர் குகைக்குள் சென்று ஸ்னூக்கியைப் பார்த்ததும் கதை ஓரளவு பிடிபட்டு விடுகிறது. ஆனால் வெல்மா போன்ற புத்திசாலிகள் கூட ஸ்னூக்கியை உடனே சந்தேகப்படவில்லை. இறுதியில்தான் அவரைப் பற்றிய விஷயங்களை சொல்கிறார். ஆனால் பார்ப்பவர்களுக்கு ஸ்னூக்கி பற்றிய பின்னணி தெரியாவிட்டாலும் கூட அவர் கடத்தப்பட்டதில் ஏதோ வினோதமான தன்மை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். கடத்தப்பட்ட இடத்தில் ஸ்னூக்கி மிகவும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருப்பார். ஃபிரெட் குழுவினர் வரும்போதுதான், பழைய தமிழ்ப்பட கதாநாயகி போல புறங்கையால் வாயை மூடி அலறுகிறார். இதில் அவருக்கு யார் கூட்டாளி என்பது இறுதிக்காட்சியின் திருப்புமுனை.
இறுதியில் அலைச்சறுக்கு போட்டியில் வெற்றிவாகை சூடி பேராசை வில்லனை வீழ்த்துவது வேறுயார்? ஸ்கூபி ஸ்னாக்ஸிற்காகவே உயிரைக் கொடுக்கும் ஸ்கூபி டூதான்.
விடுமுறையை காட்சிரீதியாக அனுபவித்தபடி பார்க்க சரியான படம்
கோமாளிமேடை டீ்ம்
2015
கருத்துகள்
கருத்துரையிடுக