வாழ்க்கையை அழித்த வசை! - இனவெறி, கருப்பினத்தவர்களின் குற்றங்கள், பெண் கொலைகாரர்கள், சிறுவயது சைக்கோ கொலைகாரன் ...
மனதைக் கொல்லும் வார்த்தை!
உணர்ச்சிகளை பகிரங்கமாக வெளிப்படுத்துவது, கோபத்தை, பொறாமையை, விரோதத்தை, வன்மத்தை, பகையை நேரடியாக வெளிப்படுத்துவது அதற்கான விளைவுகளை கூடவே எடுத்துவரும். அதற்கான உதாரணம் எட்மண்ட் கெம்பர். இவரைப் பற்றி அசுரகுலம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது அவரது வாழ்க்கையை சுருக்கமாக பார்க்கலாம்.
அப்பாவின் வழிகாட்டுதல் இல்லாத குழந்தை. ஆறடி ஒன்பது அங்குல ஆளுமை. ஆனால் மனதளவில் அன்பும் அங்கீகாரமும் கிடைக்காத காரணத்தால் புறக்கணிப்பை எதிர்கொள்ள முடியாமல் பெண்களை கொல்வதே அவர்கள் தன்னை மறுக்காமலிருக்கும் வழி என முடிவுக்கு வந்தவர். இதற்கு ஒரே காரணம், அவரது அம்மா. தினந்தோறும் சித்திரவதையான வார்த்தைகள், தண்டனைகள் என அம்மாவிடம் இருந்து கிடைத்த அத்தனையும் மனதில் வன்முறையாக மாறத் தொடங்க, விலங்குகளை துன்புறுத்தி மகிழத் தொடங்கினார். கொன்று புதைப்பது, உயிரோடு புதைப்பது என தொடங்கிய பழக்கம் மெல்ல முன்னேறி இறந்த உடல்களில் அருகில் சுய இன்பம் அனுபவிப்பது வரை வளர்ந்தது.
பள்ளியில் பலரும் சூப்பர்மேன்களாக மாறி மக்களைக் காப்பாற்றத் துடிக்க தான் விஷவாயு அறையில் கொல்லப்படவேண்டும் என விரும்பியவர் கெம்பர். பள்ளி ஆசிரியை மீது சொல்ல முடியாத அன்பு பிறந்தது மட்டுமே சிறுவயது அதிசயம். இதனை மாணவர்கள் கிண்டல் செய்ய, அவரை உயிரோடு இருக்கும்போது முத்தமிட மாட்டேன். கொன்றபிறகு அதனைச் செய்வேன் என அன்றே சொன்னார். அதை எல்லோரும் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்கள்.
கெம்பர் சொன்னதை பின்னாளில் செய்தார். அவரது பாட்டியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பிறகு கத்தியால் சகட்டுமேனிக்கு குத்தினார். அவரை படுக்கையறைக்கு கொண்டு சென்றவர், அடுத்து வீட்டில் நுழைந்த தாத்தாவையும் துப்பாக்கியால் சுட்டு சரித்தார். பிறகு கொலை பற்றி அம்மாவிடம் சொல்லிவிட்டு அமைதியாக காவல்துறைக்காக காத்திருந்தார். அவர்கள் எதற்கு பாட்டியைக் கொன்றாய் என்று கேட்டதற்கு, துப்பாக்கியால் சுட்டால் எப்படியிருக்கும் என்று பார்க்க நினைத்தேன் என்று ரிலாக்ஸாக சொன்னார். தாத்தாவை எதற்கு சுட்டாய் என்றதற்கு, பாட்டி இறந்துவிட்டார் என்றால் அவர் கஷ்டப்படுவார் என பதில் சொன்ன தாராள மனசுக்காரர் கெம்பர்.
பதினைந்து வயதில் மனநல மருத்துவமனையில் சேர்ந்தவரை சோதித்த மருத்துவர்கள் கெம்பருக்கு பாரனாய்டு ஸிசோபெரோனிக் என்ற உளவியல் குறைபாட்டை கண்டறிந்தனர். சிகிச்சை கொடுத்தனர். ஆனால் அங்கு இவரைப் போலவே உளவியல் குறைபாடு கொண்ட கொலைகாரர்கள் இருந்தனர். இவர்கள் கெம்பரோடு நட்பாக பெண்களை சித்திரவதை செய்வது பற்றிய கற்பனை அவரின் மனதில் அபரிமிதமானது. பின்னர் பிணையில் வெளியானவர் ரத்தவெறியாட்டம் ஆடியவர், தனது வாழ்க்கையைக் கெடுத்த அம்மாவுக்கு ஸ்பெஷலான சிகிச்சை கொடுத்து கொன்றார். அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பதை எழுதுவது நெஞ்சை உறைய வைப்பதுபோலவே இருக்கும். ஆனால் கெம்பரைப் பொறுத்தவரை காவல்துறையை அலைய வைக்காமல் அவரே தான் இங்கு இருக்கிறேன் என்று தகவல் சொல்லி ்குற்றங்களை ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்தில் கொலைகளை நீதான் செய்தாய் என ஒப்புக்கொண்டாய், இதற்கு என்ன தண்டனை கிடைக்கும் என நினைக்கிறாய் என்றபோது கெம்பர், சித்திரவதை செய்யப்பட்டு இறக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நீதிமன்றம் அவருக்கு வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்கும்படி ஆயுள் தண்டனையை வழங்கியது.
அடையாளம் காண்பது எப்படி?
மனதை வேதனைப்படுத்தும் விஷயங்கள் ஒருவரது வாழ்க்கையில் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அவை உள்ளே அழுத்தி வைக்கப்பட்டு உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால் நிச்சயமாக அது எரிமலையாக பின்னாளில் வெடிக்கும் என்பது உறுதி. பிறப்பு, சாதி, பணம், தோற்றம், குணம் என ஒருவர் கேலி, கிண்டல், வசை பாடப்படுவது அவரது வாழ்க்கையை எப்படி மாற்றும் என யாருக்கும் தெரியாது.
இதற்கான அறிகுறிகளாக மூன்றை உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
1 அரிநியூரெசிஸ்(arreneuresis) படுக்கையில் சிறுநீர் கழிப்பது
2 பைரோமேனியா(pyromania) நெருப்பை பற்ற வைப்பது
3 பிரிகாசியஸ் சாடிஸம்(precocious sadism) விலங்குகளை துன்புறுத்துவது
படுக்கையை நனைப்பது
குடும்பத்தில் நடக்கும் சண்டை, பள்ளியில் கேலி, கிண்டல் செய்யப்படுதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இந்த அறிகுறியை வெளிப்படுத்துவார்கள்.நான்கு வயது வரை படுக்கையை நனைப்பது இயல்பானதுதான். பிறகும் இப்பழக்கம் தொடர்ந்தால் மனநல மருத்துவரின் உதவியை நாடுவது அவசியம். சீரியல் கொலைகாரர்களில் அறுபது சதவீதம் பேர் படுக்கையை நனைக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்று எப்பிஐ கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. ஆப்பிரிக்க அமெரிக்க கொலைக்குற்றவாளி கோல்மன் என்பவருக்கு பெரியவரானபிறகும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பதில் தூங்கும்போது படுக்கையை நனைத்துவிடுவாராம். இதனால் இவருக்கு பிஸ்ஸி என்று செல்லப்பெயரே உருவானது.
நெருப்பால் எரிப்பது
சீரியல் கொலைகாரர்களுக்கு நெருப்பின் அழிவு சக்தி எப்போதும் மகிழ்ச்சி தருகிறது. தந்துகொண்டிருக்கிறது. ஒருவகையில் இது அவர்களின் மனதிலுள்ள காமத்தை குறிக்கிறது என உளவியலாளர்கள் தகவல் தருகின்றனர். மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைக்கப்படும் இளம் வயது சீரியல் கொலைகாரர்கள் பலரும் கிடைக்கும் வாய்ப்பில் அதனை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் என்ன சந்தோஷம் கிடை்க்கிறது. செக்ஸை விட சந்தோஷம் கிடைக்கிறது என ஜோசப் கலிங்கர் கூறியுள்ளார். இவர் நெருப்பு தந்த சந்தோஷத்தால் தன் மீதே நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டார். இதற்குமேல் நெருப்பு மீதுள்ள காதலை, வேட்கையை ஒருவர் சொல்ல முடியுமா? டெமோவாக காட்டித்தான் இருக்க முடியுமா?
விலங்குகளை துன்புறுத்துவது
ஷேக்ஸ்பியரின் கிங் லையர் தொடங்கி மார்க் ட்வைனில் அட்வென்ச்சர்ஸ் ஆப் ஹக்கில்பெரி பின் கதைகள் வரை பட்டாம்பூச்சி முதல் நாய் வரை துன்புறுத்தும் மனிதர்களின் குணங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். மோசமான வறுமை, சிக்கலான குடும்ப உறவுகளைக் கொண்ட பின்னணியில் வளருபவர்கள் இப்படிப்பட்ட குணங்களை கொண்டிருப்பார்கள். பொதுவான விதி என்று கூறமுடியாதுதான். குற்றவாளிகளின் ஆவணங்களின் அடிப்படையில் இதனைக் கூறுகிறார்கள். பட்டாம்பூச்சி, பூனை, நாய், தவளை என குழந்தைப் பருவத்தில் தொடர் கொலைகாரர்கள், சித்திரவதை செய்து சிதைத்திருக்கிறா்ர்கள் இதனை முன்னரே அடையாளம் கண்டு தெரபி கொடுத்திருந்தால் சமூகத்தில் ரத்த ஆறு ஓடியிருக்காது என்பது உண்மை.
விலங்குகளை சித்திரவதை செய்பவர்கள் மெல்ல செல்லப்பிராணிகளை கொல்வார்கள். இப்படி நடப்பது உளவியல் குறைபாட்டின் அடுத்த நிலை அல்ல. இது அடுத்து நடக்கப்போகும் விபரீதத்திற்கான ஒத்திகை. விலங்குகளை துன்புறுத்தி அதில் இன்பம் காண்பவர்கள் அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் வீட்டிலுள்ள மனிதர்களின் பக்கமும் கவனத்தைத் திருப்புவார்க்ள. இதில் மாற்றமே இல்லை என்று கூறுகிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.
புத்திசாலியா, கோமாளியா
சாதாரண மனிதர்களை விட ஐக்யூ கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. அதை வைத்துத்தானே மனிதர்களை நுட்பமாக ஏமாற்றி கொல்கிறார்கள். ஆனால் மாட்டிக்கொள்வதைப் பார்த்தால் இவர்கள், இப்படி முட்டாளாக இருக்கிறார்களே என்றுதான் தோன்றும். பிணங்களை அமிலத்தில் கரைத்த ஜான் ஜார்ஜ் ஹெய், பெண்களை தாக்கி சித்திரவதை செய்து கொன்ற டெட் பண்டி, ஓரினச்சேர்க்கையாளர்களை கொன்ற ராண்டி கிராப்ட், கேரி ஹெய்ட்னிக் ஆகியோர் ஐக்யூ அளவில் பிற குற்றவாளிகளை விட கொஞ்சம் மேலாகத்தான் இருந்தார்கள். ஆனால் குற்றங்களை செய்து மாட்டிக்கொண்டபோது, அவர்களின் செயல்களைப் பார்த்தபோது புத்திசாலிகள் என்ற எண்ணத்தை மனதில் அழித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அப்படி முட்டாள்தனமாக செய்த குற்றங்களின் ஆதாரங்களோடு மாட்டிக்கொண்டனர்.
பெண்களின் வன்முறை
பெண்களில் தொடர் கொலைகாரர்களும் உண்டு. ஆனால் காவல்துறைக்கு கிடைத்த தகவல்படி பெரும்பாலும் இவர்களின் கொலை செய்யும் முறை ஆண்களைப் போல உறுப்புகளை வெட்டுவது, இறந்தவர்களின் உடல்களோடு வல்லுறவு கொள்வது ஆகிய விஷயங்களை பெண்கள் ஒப்பீட்டளவில குறைவாகவே செய்தார்கள். ஆனால் கொலைகளே செய்யவில்லை என்று கூறமுடியாது. பொதுவாக பெண்கள் மனதில் கொள்ளும் வன்மத்தை ஆண்களை வைத்தே செய்துகொள்ளவதால் அவர்களின் கையில் நேரடியாக ரத்தம் படிவதில்லை.
பெண்களைப் பொறுத்தவரை கொலை செய்யப்பட்டவர் துடித்துசாவதை அதிகம் விரும்பினார்கள். எனவே அவர்களுக்கு மெல்ல கொல்லும் விஷம் இதில் உதவியது. நேரடியான தாக்குதல் என்பதை அவர்கள் குறைவாகவே விரும்பினர்.
அமெரிக்காவைச் சேர்ந்த அய்லீன் வுவோர்னஸ் என்ற பெண், ஏழு ஆண்களை நேரடியாக தாக்கிக் கொன்றார். அவர்களின் உடல் உறுப்புகளை சிதைத்தார். ஊடகங்கள் பெண்களில் முதல் தொடர் கொலைகார ர் என பட்டம் கொடுத்து கட்டுரைகளை வெளியிட்டது. ஆனால் உண்மையில் வரலாற்றில் இப்படி நிறைய பெண் கொலைகாரர்கள் இருந்தனர்.
ஜேன் டோப்பன்
இவரை குற்றவியல் உலகம் ஜாலி சைக்கோபாத் என்று அழைக்கிறது. தனத் வாழ்க்கையை மனநல மருத்துவமனையில் கழிக்கும்போது கூட அ்ங்கு பணியாற்றுபவர்களிடம் மார்பினை எடுத்துக்கொண்டு வா. வெளியே சென்று மனிதர்களுக்கு அதைக் கொடுத்து அவர்கள் இறப்பதைப் பார்க்க வேண்டும் என சிரித்துக்கொண்ட பெண் இவர்.
ஐரிஷ் பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தை. தந்தை குடிநோய்க்கு அடிமையானவர். இதனால் தினசரி வீட்டில் அடி, உதை, அவமானம் என அனைத்துமே மெல்ல பழக்கமானது. குழந்தையாக இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். அப்பா கெல்லி, தனது மகளை பராமரிக்க கஷ்டப்பட்டார். தேவையில்லாத சுமையை இறக்கி வைக்க தனது அக்கா டெலியா வேலை செய்த பெண்களின் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து னனது கடமையை முடித்துக்கொண்டார். அதற்கு பிறகு தனது வாழ்நாளில் மகள் ஜேனை பார்க்கவேயில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லோவெல் நகரில் வாழ்ந்த ஆப்னெம் டோப்பன் என்பவரின் குடும்பத்தில் வேலைசெய்வதற்காக அழைத்து செல்லப்பட்டார். இவரது நிறத்தைப் பார்த்து அக்குடும்பத்தினர் வெளியிலிருந்து வந்த ஆளாகவே அவமானப்படுத்தி வந்தனர். ஆனால் அதையெல்லாம் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் ஜேன் வாழ்ந்து வந்தார். தினசரி அவரை அவமதித்தவர்களை நேரடியாக பழிதீர்க்க முடியாமல் பல்வேறு பொய்களை வதந்திகளை உருவாக்கி பழிவாங்கினார். வெளியில் அமைதியான முகம் அவருக்கு ஜாலி ஜேன் என்ற பெயரைக் கொடுத்தாலும் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த குரோதத்தை வெளிக்காட்டவும் வாய்ப்பு கிடைத்தது.
கேம்பிரிட்ஜ் மருத்துவமனையில் நர்ஸாக வேலைக்கு சேர்ந்தார். ஏராளமான அவமானங்களை சந்தித்து பழகியதால், நோயாளிகளின் வலி, பேச்சு என எதுவும் மலர் அம்புகளாக கூட அவரைத் தாக்கவில்லை. இதனால் அங்கு வேலை செய்த மருத்துவர்கள், நர்ஸ்களின் அன்புக்குரிய வராக மாறினார். இதற்கிடையே மருத்துவமனையில் உள்ள பல்வேறு மருந்துகளை சோதித்துக்கொண்டே இருந்தார். அதைப் பயன்படுத்தி நோயாளிகளை போட்டுத்தள்ள நினைத்தார். அட்ரோபைன், மார்பின் ஆகிய இரு மருந்துகளின் கூட்டணியில் புதிய விஷத்தை உருவாக்கினார். அப்புறமென்ன? நோயாளிகளுக்கு பலருக்கும் தெரியாமல் அதனை கொடுக்கத்தொடங்கினார். பலரும் வினோதமான முறையில் திடீரென இறந்துபோனார்கள். என்ன நடக்கிறது என்று யாருக்குமே புரியவில்லை. இப்படியே விஷம் கொடுத்து அவர்கள் தனது கையில் துடித்து சாவதை புன்னகையுடன் பார்ப்பது ஜேனுக்கு பிடித்த பொழுதுபோக்கு. இதனை உளவியலாளர்கள் பைரோமேனியாவின் முக்கிய அறிகுறியாக கூறுகிறார்கள். இறப்பை செக்ஸ் மகிழ்ச்சியுடன் ஒற்றுமைபடுத்துகிறார்கள். வயதானவர்களை மட்டுமே குறிவைத்துக் கொன்ற அன்னா மேரி ஹான், ஒருவரின் நம்பிக்கையைப் பெற்று விஷம் வைத்துக் கொல்லும் பிளாக் விடோஸ், கணவர்களை எலிக்கான விஷம் வைத்துக்கொன்ற நானி தாஸ் என பெண் கொலைகாரர்களின் பட்டியலை நீட்டினால் அதுபாட்டுக்கு சென்றுகொண்டே இருக்கும்.
இதுதொடர்பாக மேலும் அறிய கெர்ரி செகரேவ் எழுதிய வுமன் சீரியல் அண்ட் மாஸ் மர்டர்ஸ் எ வேர்ல்ட்வைல்ட் ரெபரென்ஸ் 1990 நூலைப் படிக்கலாம். இவரைப் போலவே டெரி மேனர்ஸ், மைக்கேல் நியூட்டன் ஆகியோர் எழுதிய பெண்களைப் பற்றிய நூல்களும் அவர்களின் குற்றங்கள், உளவியல் சார்ந்த தன்மையை வாசகர்கள் புரிந்துகொள்ள உதவும்.
இனவெறி
கொலையிலும் குற்றங்களிலும் கூட இனவெறி உண்டா என நிறையப்பேர் நினைக்கலாம். சாதி, நிறம், பொருளாதாரம் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் அனைத்து சமூகத்திலும் உண்டு. அவை வெளிப்பார்வைக்கு தெரியவர சிலகாலம் ஆகலாம். பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் அமெரிக்காவிலும் அப்படித்தான். அங்கும் வெள்ளையர்களுக்கு இணையாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கொலையாகிறார்கள். ஆனால் அதனைப் பற்றிய செய்திகளை பெரு்ம ஊடகங்கள் கவனம் கொடுத்து செய்தி வெளியிடுவதில்லை. ஆனால் வெள்ளையர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனே அதனை இதழின் அட்டைப்படத்திற்கு கொண்டு வந்துவிடுகிற பாகுபாடு உண்டு. பெரும்பான்மை சிறுபான்தை தொடர்பாக சமாச்சாரங்கள்தான் இதற்கு முக்கியமான ஆதாரக் காரணம்.
வெள்ளையர்கள் தங்கள் இனத்தைவர்களையே அதிகம் கொன்றிருக்கிறார்கள். கருப்பர்களும் அப்படித்தான். சிறுபான்மையினர் என்பதால் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வெள்ளையர்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதனால்தான் இன்றுவரை காவல்துறை அதிகாரி அவர்களை அனைவரின் முன்னிலையில் கழுத்தை அழுத்திப்பிடித்து கொல்ல முடிகிறது. மனமாற்றம் இல்லாத நிலையில் இப்படிப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை அளிப்பதால் என்ன செய்துவிடமுடியும்? ஆனால் இப்போதைக்கு கடுமையான தண்டனைகள் அப்பாவிகளின் இறப்பைத் தடுக்க உதவலாம். 2002ஆம் ஆண்டு சால்ட் லேக் சிட்டியைச் சேர்ந்த எலிசபெத் ஸ்மார்ட் என்ற சிறுமி காணாமல் போனார். உடனே அவரைத் தேட காவல்துறை தனது அனைத்து சக்திகளையும் பயன்படுத்தியது. நியூஸ்விக் என்ற பத்திரிகை சிறுமியின் படத்தை அட்டையில் வெளியிட்டது. இதற்கு நேர்மாறாக ஆப்பிரிக்க அமெரிக்க சிறுமி டன்னாரியா பின்லே திடீரென காணாமல் போய் ஒருமாதத்திற்குப் பிறகு கொலையானார். நான்கு வயது சிறுமிதான். ஆனால் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரை ஊடகங்கள் மட்டுமல்ல அமெரிக்க சமூகமே கைவிட்டுவிட்டது.
அந்தந்த இனத்தில் கொலைகள் நடக்கின்றன என்பதை மாற்றிய தொடர் கொலைகா ர்கள் ஜெப்ரி டாமர், ஆல்பர்ட் பிஷ் ஆகியோர். ஜெப்ரி, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், ஆசியர்கள் ஆகியோரை போட்டுத்தள்ளினார். ஆல்பர்ட்டைப் பொறுத்தவரை கருப்பின சிறுவர்களை குறிவைத்து சித்திரவதை செய்து கொன்றார். இந்த சிறுவர்கள் தெருக்களில் திரிந்தவர்கள் என்பது முக்கியமானது. இவர்கள் காணாமல் போனார்கள் என்று எழுதி வைத்துக்கொண்ட காவல்துறை நிம்மதியாக காது குடைந்துகொண்டிருந்தது. என்ன அவசரம், அவர்கள்தான் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்தானே என்ற அலட்சியம் ஏராளமான குடும்பங்களின் வாழ்க்கை அழித்துவிட்டது.
ஜார்விஸ் காட்டோ
இருபதாம் நூற்றாண்டில் கொலைக்கான முழுமையான திட்டத்தோடு களமிறங்கி ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கொன்று வல்லுறவு செய்த கொலைகார ர். வெள்ளை இனப் பெண்ணை கொலை செய்தபோதுதான் கா்வல்துறை தூக்கத்திலிருந்து எழுந்து கைது செய்தது. அதற்குள்ளாகவே பத்து பெண்களை வல்லுறவு செய்து கொன்று அவர்களின் குடும்பம் அவர்களுக்காக மோட்ச விளக்கும் ஏற்றவேண்டிய நிர்பந்ததை ஜார்விஸ் ஏற்படுத்தியிருந்தார். இவர்களை ஊடகங்கள் எளிமையாக நீக்ரோ பெண்கள் என்று எழுதி தனது பொதுநல அக்கற்றையைக் காட்டிக்கொண்டது. அரசு இவரை மின்சார நாற்காலியில் உட்கார வைத்துக் கொன்றது.
ஹென்றி லூயிஸ் வாலஸ்
ஆப்பிரிக்க அமெரிக்கரான இவர், தனது காதலிக்கு தெரிந்தவர்கள், தங்கைக்கு தெரிந்தவர்கள் என கணக்கு போட்டு ஒன்பது பெண்களை வல்லுறவு செய்து கொன்றார். சார்லெட், வடக்கு கரோலினா பகுதியில் நடந்த கொலைகளை பதிவுசெய்து தொடர்புகளை கண்டுபிடிக்க காவல்துறை அதிக காலம் எடுத்துக்கொண்டது. இதற்கு இனவெறிதான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டினர். ஆனால் இதனால் என்ன பயன் கிடைத்தது என்று தெரியவில்லை. ஒன்பது உயிர்கள் பலியாகிவிட்டன. ஹென்றிக்கு குற்றங்களை ஒப்புக்கொண்டபிறகு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
வேய்ன் வில்லியம்ஸ்
இவரும் ஆப்பிரக்க அமெரிக்கர்தான். அட்லாண்டாவில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்க சிறுவர்களை, சிறுமிகளை தேடிப்பிடித்து வேட்டையாடினார். 1979ஆம் ஆண்டு தொடங்கியத கொலைப்பயணம் 1981ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதுவரைக்கும் 21 பேர்களை பரலோகத்திற்கு அனுப்பியிருந்தார். எதிரும் தொடர் கொலைகாரர்களுக்கான அடையாளம் ஏதுமில்லை. சிலருக்கு துப்பாக்கிக்குண்டு, கழுத்தை நெரித்துக் கொல்வது, கத்தியால் குத்தப்பட்டு என பல்வேறு முறைகளில் கொலை செய்யப்பட்டனர். கருப்பினத்தவர்கள் என்பதால் விசாரணை பெரிதாக வேகம் பிடிக்கவில்லை. ஏகப்பட்ட உயிரிழப்புகளுக்கு பிறகுதான் அரசு எந்திரம் இதனை சவாலாக எடுத்துக்கொண்டது. கொலையாளியை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு நிதியுதவி, கருப்பின பிரபலங்களும் இதில் பங்கேற்று விசாரணைக்கு நிதியுதவி செய்தனர். காவல்துறை இருபதாயிரம் பேர்களை நேரிலும், போனில் ஐம்பதாயிரம் பேர்களையும் விசாரித்தததாம்.
இதன்பிறகு பாலம் ஒன்றில் காரில் வந்த வேய்ன் வில்லியம்ஸை எதேச்சையாக விசாரித்தனர். அவரின் விளக்கம் முரணாக இருக்க மாட்டிக்கொண்டனார். பிணங்களில் உடலில் இருந்த முடி, கொலை நடந்த இடத்தில் இருந்த காரின் டயர் அடையாளம் ஆகியவை வேய்ன் வில்லியம்சிற்கு எ்திராக அமைந்துவிட்டன. இவரை கைது செய்ததும் அங்கு நடந்த வந்த சிறுவர் கொலைகள் நின்றுவிட்டன. செய்த குற்றங்களுக்கு தண்டனையாக ஆயுள் தண்டனை கொடுத்து வேய்னை சிறையில் அடைத்தனர்.
லூயிஸ், வேய்ன் கடந்து இன்னும் நிறைய பேர்கள் பட்டியலில் இருக்கிறார்கள் ஆனால் அவர்களைப் பற்றிக் குறிப்பிட அதிக விஷயங்களிலில்லை. இப்போது சிறுவயது கொலைகாரர்களை சில சான்றுகளோடு பார்ப்போம். பொதுவாக சிறுவர்களாக இருக்கும்போது நேரடியாக மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தி தண்டனை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவு. பள்ளியில் துப்பாக்கியைக் கொண்டு வந்து சுடுவது, பள்ளி மணியை அடித்துவிட்டு வெளியே வரும் பள்ளி மாணவர்களை, நிர்வாகத்தினதை போட்டுத்தள்ளும் கோபம் எல்லாம் தொண்ணூறுகளில்தான் தொடங்கியது. இன்றுவரை வெற்றிகரமாக வேதனையைத் தரும்படி நடந்துகொண்டிருக்கிறது.
தொடர் கொலைகாரர்களில் சிறுவர்கள் உருவாவது அரிதுதான். அப்படியென்றாலும் அரிதான நபர் தேவைதானே? அப்படித்தான் ஜெஸ்ஸே ஹார்டிங் பொமராய் என்று சிறுவன் தனது குற்றங்களை தொடங்கினான். பாய் பியெண்ட் என்று அழைக்கப்படும் இவன், பனிரெண்டு வயதில் சிறுவர்களை தூரமாக அழைத்துச்சென்று அடித்து சித்திரவதை செய்தான். இதனால் சீர்திருத்த மையத்தில் அடைத்தனர். ஓராண்டுக்கு குறைவான காலம்தான் சீர்திருத்த மையத்தில் வைத்திருந்தனர். வெளியே வந்தவுடன் அடைத்து வைத்திருந்த கோபத்தை பத்து வயது சிறுமி, நான்கு வயது பையனிடமும் காட்ட அவர்கள் இறந்துபோனார்கள். பதினான்கு வயதிலேயே கொலையா என மிரண்ட நீதிமன்றம் மரணதண்டனையை விதித்தது. மைனர் என்பதால் மரணதண்டனை வேண்டாம் என பலரும் கூற, ஜெஸ்ஸேவை நாற்பது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைத்து வைத்திருக்கும்படி தண்டனை மாற்றப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக