மகனின் இறப்பில் தொடங்கும் பழிக்குப்பழி வன்மம்!
ரேத் ஆப் தி மேன்
கய் ரிட்சி
பிரெஞ்சில் வந்த படனத்தை ஆங்கிலத்தில் ரீமேக் செய்திருக்கிறார்கள். படத்தின் கதை எளிமையானதுதான். அமெரிக்காவில் உள்ள கேங்ஸ்டர் ஒருவரின் மகனை முன்னாள் கொள்ளையர்களின் குழு கொன்றுவிடுகிறது. இதற்கு கேங்ஸ்டர் தந்தை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் மீதிக்கதை.
படத்தின் கதையை நகர்த்தி செல்வதில் ஒளிப்பதிவும் இசையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மென்மையாக தொடங்கும் கிடார் கம்பிகளின் மீட்டலே படத்தின் ரத்த வேட்கையான சண்டைக்காட்சிகள் மற்றும் பழிவாங்கும் உணர்ச்சிகளை பார்வையாளர்களின் மனதிற்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கிறது. ஜேசன் ஸ்டாதம் இருக்கிறார் படத்தில். அப்புறம் வேறென்ன வேண்டும் என இயக்குநர் நினைத்திருக்கிறார். அதுதான் படத்திற்கு பலவீனமாகிறது. அனைத்து சண்டைக்காட்சிகளுமே மிகவும் ஜென்டில்மேன்தனமாக உள்ளது. துப்பாக்கியில் சுட்டு வரவு செலவு தீர்ப்பதாக இருப்பதால், சில சமயங்களில் ஆக்சன் காட்சிகளில் ஈர்ப்பு குறைகிறது. நேருக்கு நேரான மோதல்களே இல்லாமல் இருப்பது ஜேசன் படங்களை பார்ப்பவர்களுகு இழப்பாக தோன்றும்.
போர்டிகோ என்ற செக்யூரிட்டி கம்பெனியில் கதை தொடங்குகிறது. அங்குதான் ஹில் என்ற பெயரில் வேலைக்கு சேருகிறார் புதிய நபர். அவர்தான் நாயகன் ஜேசன். எப்போதும் இறுக்கமாகவே இருக்கிறார். வங்கிகளுக்கு சென்று பணத்தை கொடுக்கும் சேவைகளை போர்டிகோ நிறுவனம் செய்துவருகிறது. ஆனால் நிறுவனத்தின் உள்ளே இருக்கும் யாரோ ஒரு துரோகியால் நிறுவனம் அடிக்கடி சிக்கலில் மாட்டி பணத்தை இழக்கிறது. ஹெச் அப்படி ஒருமுறை போகும்போது கொள்ளை முயற்சி நடக்கிறது. அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் ஒருவரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக்கொண்டு பணத்தை கேட்கிறார்கள். ஹெச்சைப் பொறுத்தவரை மிரட்டல், அதட்டல் எல்லாம் சும்மா என்று நினைப்பவர். துப்பாக்கியை லோட் செய்பவர், தனது சகாவின் உதவியைக் கூட கேட்பதில்லை. படபட வென துப்பாக்கியை முழக்குபவர், அத்தனை கொள்ளையர்களையும் அங்கேயே போட்டுத்தள்ளுகிறார்., அவரது சகாக்களே அவர் கொல்லும் வேகத்தைப் பார்த்து திகைத்து போகிறார்கள். பின்னர் போலீஸ் கம்பெனிக்கு வந்து விசாரிக்கிறது.
பணத்தை கொள்ளையடிக்க முயன்றதால் சுட்டேன் என்றாலும் அவர்களுக்கு மனதில் ஏதோ தவறு உள்ளது என தட்டுகிறது. பயிற்சியில் சொதப்பினாலும் நேரடியாக பயன்படுத்தும் போது துப்பாக்கி குறி ஏதுமே தப்பவில்லை என காவல்துறை கண்டுபிடிக்கிறது. முறையாக இப்படி தாக்குதல் நடைபெற்றால் அவர்களை சில மாதங்களுக்கு வேலை இல்லை என்று அனுப்பிவிடுவார்கள். மனநலன் சார்ந்த சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்கான ஏற்பாடு. ஆனால் ஹெச்சைப் பொறுத்தவரை அதெல்லாம் எனக்கு தேவையில்லை. நீங்கள் தண்டனை கொடுத்தால் அது உங்கள் விஷயம். பணத்தைக் காப்பாற்ற சொன்னீர்கள். நான் விதிப்படி பணத்தைக் காப்பாற்றிவிட்டேன் அவ்வளவுதான் என்று சொல்ல, அந்த ஒட்டுமொத்த நிறுவனமே யார் சாமி இந்த சைக்கோ என பதறுகிறது. ஆனால் கம்பெனி முதலாளி ஆஹா… நேர்மையானவன் என அவனுக்கு கொடுக்கும் தண்டனையைக் கூட வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.
உண்மையில் ஜேசன் அங்கு ஹில் என்ற பெயரில் போலி ஆவணங்களை தயாரித்துக்கொண்டு வந்திருக்கிறார். அப்படி அவர் இந்த நிறுவனத்திற்கு வருவதற்கான காரணம் என்ன என்பதுதான் முக்கியமான ட்விஸ்ட். ஆண்களே போதும் என நினைத்து இயக்கியுள்ள படத்தில் பெண் அரிதாக படுக்கைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். படத்தின் காட்சிகளை விட அதற்கு இசைக்கப்பட்டிருக்கும் பின்னணி இசையை பார்வையாளர்களால் மறக்கவேமுடியாது. அப்படியொரு வலியையும் வன்மத்தையும் இசை மெல்ல நமது நாடி நரம்புகளில் தேளின் விஷம் போல ஏற்றுகிறது.
துப்பாக்கி முழக்கம்!
கோமாளிமேடை டீம்
Music by | Chris Benstead |
---|---|
Cinematography | Alan Stewart |
by Nicolas Boukhrief
கருத்துகள்
கருத்துரையிடுக