காதலியைக் காப்பாற்ற தனது ஆன்மாவையே தியாகம் செய்யும் காதலன்! சீக்ரெட் கார்டன்
காதலர்களின் ஆன்மா இடம்மாறினால்…….
கிளாட்ஸ்ரோபோகிக் உள்ள தொழிலதிபருக்கு சினிமாவில் சண்டைபோடும் ஸ்டண்ட்கலைஞர்க்கு வரும் காதல்தான் மையக்கதை.
கிம் ஜூ போன், வம்சாவளியாக நிறுவனத்தை நிர்வகிக்க வந்தவர். இவரது நிர்வாகத்தில் வணிக மால் ஒன்று உள்ளது. இவரது அலுவலகத்தில் இவருக்கு உள்ள உளவியல் பிரச்னையைக் கண்டுபிடித்து ஊர்ஜிதம் செய்து அதை வைத்து நிறுவன இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்க சதி நடக்கிறது. இதனை நிறுவனத்தில் முப்பது ஆண்டுகளாக வேலை செய்துவரும் அவருடைய மாமாவே செய்கிறார். கிம்மைப் பொறுத்தவரை தினசரி வேலைக்கு போவதில் ஆர்வம் கிடையாது. வாரத்திற்கு மூன்று முறை அலுவலகம் வருபவர் மீது நேரம் எல்லாம், ஏராளமான நூல்களைப் படிப்பதற்கு நேரம் செலவிடுகிறார். அதுபோக நேரம் கிடைத்தால் இவரது குடும்பம் ஏற்பாடு செய்யும் பெண்களுடன் டேட்டிங் எனும் பெண் பார்க்கும் படலம் நடைபெறுகிறது. இப்படி வரும் பெண்களை முரட்டுத்தனமாக கேள்வி கேட்டு அவர்களை பீதியாக்கி ஓடவிடுவது கிம்முக்கு முக்கியமான ஹாபி.
கிம்முக்கு தன்னை ஆச்சரியப்படுத்தும் பெண்களே கிடைக்கவில்லை என்ற நிலை. இவரது அண்ணனும் பிரபலமான பாடகரான உஸ்காவுக்கு (வூங் யங்) எந்த பெண் கிடைத்தாலும் அவர்களுடன் ஜாலியாக கெஞ்சி கொஞ்சி சிறிது நாட்களுக்குப் பிறகு பிரேக்கப் கிஸ் கொடுத்து அனுப்பிவிடுவது வழக்கம். உஸ்கா என்ன செய்தாலும் அவருடன் போட்டிபோடுவது கிம்மின் முக்கியமான வேலை. உஸ்கா புதிய கார் ஒன்றை வாங்கினால் அதனை விநியோகிக்கும் டீலர்ஷிப்பை கிம் வாங்கிவிடுவார். பெண்கள் விஷயத்தைத் தவிர அனைத்திலும் இவர்கள் இருவரும் மோதிக்கொள்ள அனைத்திலும் கிம் ஜெயிக்கிறார். உஸ்கா ஏன் அனைத்திலும் தோற்கிறார் என்பதற்கு முக்கியமான பின்னணிக் கதை உள்ளது.
உஸ்காவின் காதலியும் டிவி தொடர் நடிகை ஒருவரை கூட்டி வர கிம் செல்கிறான். அவருக்கு பதிலாக அங்கு டூப் போடும் கில் ரா இம் என்ற பெண்ணை தவறுதலாக கூட்டி வந்துவிடுகிறான். அவளுடன் பேசும்போது கிம்மின் எந்த வார்த்தைகளும் அவளை பாதிப்பதில்லை. அவனை எந்தளவு கிண்டல் செய்யமுடியுமோ அந்தளவு செய்துவிட்டு முட்டாள் என்று நேரடியாக திட்டுகிறாள். அதோடு அவனது காரை மின்னல் வேகத்தில் ஓட்டி திரும்ப படப்பிடிப்புக்குச் சென்றுவிடுகிறாள். ஆனால் அவளது கை அடிபட்டிருக்கிறது. இதை கிம் கவனித்து அவளை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்க்கிறான். அதற்குப்பிறகு கில் ரா இம்மை யோசிக்காமல் அவனால் இருக்க முடியவில்லை.
இத்தனைக்கும் அவள் பள்ளி படிப்பை முழுமையாக முடிக்காதவள். பெற்றோர் இல்லாமல் கிம்மின் மால் ஒன்றில் வேலை செய்யும் தோழியுடன் உடைசலான அறை ஒன்றில் தங்கியுள்ளாள். சண்டை பயிற்சி பள்ளியில் ஒரே பெண்ணாக அவள் மட்டுமே உள்ளாள். அவளைப் பார்ப்பதற்காகவே அங்கு சென்று கிம் ராமை சந்திக்கிறான். அவனை கில் ரா இம் முதலில் அடிக்கிறாள், தூக்கி போட்டு மிதிக்கிறாள். ஆனால் அவன் பதிலுக்கு கை குணமாகிவிட்டதா என்று விசாரிக்கிறான். அவளை ஏதாவது சொல்லி வம்புக்கு இழுக்கிறான். மற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொள்பவள் மெல்ல கிம்மை உள்ளுக்குள் நேசிக்க தொடங்குகிறாள். ஆனால் அவளுக்கு வெகு நாட்களுக்கு பிறகே அவனது பணக்கார பின்னணி தெரிகிறது. தள்ளிப்போக முயன்றாலும் கிம் விடுவதில்லை.
இந்த இருவரும் உஸ்காவினை தீவு ஒன்றில் மால் விளம்பரத்திற்காக கூட்டிச்செல்லும்போது செல்கின்றனர். அங்கு மிஸ்டரி கார்டன் எனும் உணவகத்தில் கிம்மும் கில் ரா இம்மும் சாப்பிடுகிறார்கள். அப்போது அவர்கள் கொடுக்கும் பூக்களில் தயாரித்த மதுவை கில் ரா இம் பெற்றுக்கொள்கிறாள். அவளுக்கு உஸ்காவின் பாடல்கள் என்றால் அவ்வளவு இஷ்டம். அவரும் கிம்மும் சகோதரர்கள் என்பது அவளுக்கு பின்னாளில்தான் தெரிய வருகிறது. பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அப்பா இறந்தபிறகு எதிர்கொண்ட அனைத்து சவால்களையும் உஸ்காவின் பாடல்களை கேட்பதன் வழியாகவே அவள் கடந்து வந்திருக்கிறாள். கிம், உஸ்காவுக்கு கொடுப்பதாக வாங்கிய மதுவை அன்று இரவு குடிக்கிறான். கில் ரா இம்மும் மதுவை அதே நேரத்தில் குடிக்கிறாள். அந்த நேரத்தில் மழை பெய்கிறது. பிறகு இருவரும் தூங்க செல்கிறார்கள். அடுத்த நாள் விழித்தபோது கிம்மின் உடலில் கில் ரா இம்மின் ஆன்மா உள்ளது. கில் ரா மின் உடலில் கிம்மின் ஆன்மா உள்ளது. இருவரின் ஆன்மாவும் வேறு வேறு உடல்களில் இருப்பதால், அவரவர் வாழ்க்கையின் கஷ்டங்களை மெல்ல கற்றுக்கொண்டு காதலில் மேலும் ஆழமாகிறார்கள்.
கிம், கில் ரா இம்மின் காதலை கிம்மின் அம்மா ஏற்றுக்கொள்வதில்லை. இருவரையும் பிரிக்க முயன்று கொண்டே இருக்கிறார். இந்தநிலையில் ஆன்மா மாறிய சூழலை இருவரும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை காமெடி, நிறைய காதல், நிறைய நெகிழ்ச்சி என அற்புதமாக கூறியிருக்கிறார்கள்.
தொடரின் முக்கியமான கிம் பாத்திரத்தில் ஹியூன் பின் அற்புத்மாக நடித்திருக்கிறார். கிளாஸ்ட்ரோபோபியோ உள்ள புத்திசாலியாக, தனது அண்ணன் உஸ்காவை எப்போதும் மிரட்டி காரியம் செய்துகொள்பவராக, கில் ராமிடம் அடி வாங்கினாலும் காதலை கைவிடாதவராக, அலுவலகத்தில் தனது மாமாவை அடிக்கடி அவமானப்படுத்துவதும் என பின்னி எடுக்கிறார்.
சீக்ரெட் கார்டன் தொடரில் ஏழை, பணக்காரன் வேறுபாடு தீவிரமாக பல காட்சிகளில் காட்டப்படுகிறது. வசனரீதியாகவும், கில் ராம் தனக்கென பேக் ஒன்றைக் கூட வாங்க முடியாமல் கிம்மின் கடனைக் கொடுக்க பப் வரும் காட்சி, கிம்மின் அம்மாவைப் பார்க்க செல்லும்போது் பழம் வாங்கிச் செல்வது, அதை அவர் தூக்கியெறியும்போது கிம்மிடம் அவர் பேசும் வசனங்கள் எல்லாமே சிறப்பாக வந்திருக்கின்றன. கிம்மின் குடும்பத்திற்கு கில் ராமின் அப்பா பெரிய தியாகத்தையே செய்தும் கூட அதனை பணம் வைத்து மதிப்பிட்டு பேசுவது, அவளது ஒழுக்கம் பற்றியும் பேசுவது சொத்தும் அந்தஸ்தும் மனமகிழ்ச்சியை விட எந்தளவு முக்கியம் என செல்வந்தர்கள் நினைக்கிறார்கள் என்பதை காட்டும் காட்சிகள்.
உஸ்காவைப் பொறுத்தவரை கிம்மின் அண்ணனாக பல விஷயங்களில் முதிர்ச்சி பெற்றிருந்தாலும் உண்மையாக காதலில் நடந்துகொள்வதை அவர் பின்னாளில்தான் கற்றுக்கொள்கிறார். கிம் தனது காதலிக்காக தனது ஆன்மாவை இடம் மாற்றிக்கொள்வதை நினைவுகூர்ந்து தனது காதலியிடம் மது அருந்தியபடி பேசும் காட்சி அருமையானது. கிம், கில் ரா இம், உஸ்கா, அவரின் காதலி சியூல், உஸ்காவை காதலிக்கும் இசைக்கலைஞர் லீ ஜங் சுக் என எல்லோருமே பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். இதில் கடைசிக் காட்சியில் சன் யே ஜின் கேமியோ காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். ஹியூன் பின்னுக்காகவா என கேள்வி கேட்காமல் ரசிக்கவேண்டும்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக