கிளப் ஹவுஸ் வரவால் அதிகரிக்கும் ஆடியோ சமூக வலைத்தளங்கள்! - கட்டுப்பாடுகள் கூடுகிறதா? குறைகிறதா?
கிளப் ஹவுஸ் என்பது வெறும் கேன்வாஸ்தான். இதில் பயனர்கள் இல்லையென்றால் அதன் பயன் ஒன்றுமே இல்லை என்று அதன் துணை நிறுவனர் பால் டேவிட்சன் கூறினார் . கடந்த ஆண்டு மார்ச்சில் ஆப்பிள் ஐஓஎஸ்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட கிளப்ஹவுஸ் பின்னர் ஆண்ட்ராய்டிலும் வெளியானது. கடந்த மேயில் அறிமுகமாகி மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது. உலகம் முழுக்க இருபத்தைந்து மில்லியன் பேர் இந்த ஆப்பில் இணைந்துள்ளனர். இந்த ஆப்பில் ஒருவர் இணைந்து தனக்கென ஒரு அறையை உருவாக்கிக்கொண்டு என்ன வேண்டுமோ அதனைப் பேசலாம். பிறர் பேசும் விஷயங்களை பின்பற்றலாம். அரசியல், சினிமா, செக்ஸ், ஆன்மிகம் என எதையும் இங்கே பேசலாம். பல்வேறு துறை ஆட்களும் இங்கே குழுமி தங்களது துறை சார்ந்த விஷயங்களை பகிரலாம். பத்திரிகையாளர்கள் இதிலுள்ள அறைகளைப் பயன்படுத்தி செய்திகளைக் கூட திரட்ட முடியும்.
கிளப் ஹவுஸ் மட்டுமே ஆடியோரூம் வசதியைக் கொண்டிருக்கவில்லை. வேறு நிறுவனங்களும் இதேபோல வசதியை தங்களது சேவையில் கொண்டு வரவிருக்கின்றன. பேஸ்புக்கில் லைவ் ஆடியோ ரூம் வசதி வரவிருக்கிறது. ட்விட்டரில் ஸ்பேசஸ் எனும் வசதி உள்ளது. ஸ்பாட்டிபை, க்ரீன்ரூம் எனும் வசதியைக் கொண்டுள்ளது. டிஸ்கார்டு, ரெட்டிட் ஆகியவையும் இதுபோன்ற ஆடியோரூம்களை உருவாக்கி வருகி்ன்றன.
ஆடியோரூம் என்பதால் சர்ச்சைகளும் குறைவிருக்காது. பேஸ்புக் ட்விட்டரில் எழுதினால் வரும் சர்ச்சைகள் இங்கு மிக எளிதாக பேசினாலே ஏற்படும். ஏற்கெனவே மதரீதியான பிரவினைகள் வெறுப்பு பேச்சினால் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. கிளப்ஹவுசில் இதுபோன்ற உரையாடல்களும் அதற்கான பின்னூட்டங்களும் எளிதாக பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் பலரும் என்ன எப்படி பேசவேண்டும் என்பதை குறிப்பிட்டே தங்களது ஆடியோரூம்களை நடத்துகின்றனர். கிளப்ஹவுசில் போலிச்செய்திகள், குப்பைகளை தடுக்கும் அமைப்பு உள்ளது. க்ரீன் ரூமில் பாலியல் ரீதியான செய்திகளை, பிறரை அவதூறு செய்யும், வெறுப்புவாதங்களை தடுக்கும் கண்காணிக்கும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
ஸ்வெல் எனும் தளமும் ஆடியோரூம் வசதியை வழங்குகிறது. இதில் ஒருவர் பேச விரும்பினால். தனது பொதுவிவாத முகவரியைக் கூட பயனருக்கு வழங்கலாம். கிளப்ஹவுசில் பேசுவது நேரடியாக எந்த நேரமும் பேசும் வசதி உள்ளது. ஸ்வெல் ஆப்பில் புகைப்படம், லிங்குகளை பகிரலாம். ஆடியோஆப்களுக்கான ஆர்வம் என்பது இப்போது தொடங்கவில்லை. பெரும்பாலும் வாட்ஸ்ஆப்பில் கூட நேரடியாக ஆடியோவாக பேசி அனுப்புவது வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இதில் பேசுவதை உடனே மற்றவர்கள் கேட்கலாம். ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் கூட செய்திகளை பதிவிட்டு உடனே அழித்துவிடலாம். ஆனால் இவற்றில் அது சாத்தியமில்லை.
எழுத்தை விட பேச்சில் இருக்கும் உணர்ச்சி மக்களுக்கு பிடித்திருக்கிறது. அது ஒருவகையில் மக்களுக்கு நேரடியாக உரையாடும் உணர்வைத் தருகிறது என்றுகூட கூறலாம். அதனால்தான் ஏராளமான ஆடியோ சமூகவலைத்தளங்கள் இப்போது உருவாகி வருகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக