இந்தி, ஓடிடி தளத்தில் பிரபலமாகி வரும் புதிய நடிகர்கள்!

 

 

 

 

 

 

 

 

 https://img.theweek.in/content/dam/week/news/entertainment/images/2019/5/8/Aahana-Kumra.jpg

 

புதிய நடிகர்கள் - மாறும் திரையுலகம்


2004ஆம் ஆண்டு வெளியான ரன் என்ற படத்தில் விஜய் ராஸ் பிரியாணி கடையில் உட்கார்ந்து ஐந்து ரூபாய் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அப்போதுதான் அவருக்கு சந்தேகம் எப்படி ஐந்து ரூபாய் பிரியாணி சாத்தியம் என கடைக்கார ரிடம் கேட்க அதற்கு அருகிலிருப்பவர் காக்காவைத்தான் பிரியாணி செய்திருக்கிறார்கள்என உண்மையை உடைப்பார். நம்மூரில் விவேக் செய்த அதே காமெடிதான். இந்தியில் இப்படி மாறியிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது பிரியாணியை அல்ல காக்கா பிரியாணி என்ற உண்மையைச் சொன்ன துணைநடிகர் எப்படி வளர்ந்துள்ளார் என்பதைத்தான்.


இப்படி நடித்த படம் கூட சரியாக ஓடவில்லை. ஆனால் அவரது நடிப்பு பேசப்பட்டது. பிறகு 14 ஆண்டுகள் சிறிய பாத்திரங்களில் நடித்தவருக்கு ஸ்த்ரீ படம் பெரிய வெற்றியைக் கொடுத்தது. இப்போது யூகித்திருப்பீர்கள். அந்த நடிகர் யார் என்று. மிர்சாபூரில் இரண்டு சீசன்களாக நடித்து பட்டையைக் கிளப்பிய பங்கஜ் திரிபாதிதான் அவர். கஞ்சன் சக்சேனா, நியூட்டன், கேங்க் ஆப் வாசிப்பூர், பரெய்லி கி பர்பி, மாசான் என ஏராளமான படங்களில் நடித்துவிட்டார். இத்தனைக்கும் இவரது சிக்ஸ்பேக் உடம்பு கிடையாது. குடும்ப பாரம்பரியம் கிடையாது. தயாரிப்பாளராக அப்பாவும் இல்லை. ஆனால் கனவு இருந்தது. நடிக்கும் வேட்கை இருந்தது. நாயகன் என்றால் சிவப்பாக, நாயகி என்றால் வேக வைத்த கிழங்காக இருக்கவேண்டும் என்ற ஜாதக அம்சங்கள் மெல்ல திரையுலகில் மறைந்து வருகின்றன. இதனால்தான் பங்கஜ் திரிபாதி, இர்பான் கான், நவாசுதீன் சித்திக், சயானி குப்தா, ரசிகா துகல், ராஜ்குமார் ராவ், பூமி பட்னேகர், ஆயுஷ்மான் குரானா ஆகியோர் படங்களில் புதிய பாத்திரங்களில் நடித்து நம்மை யோசிக்க வைக்கிறார்கள். அழ வைக்கிறார்கள். அத்தனைக்கும் மேலாக நம்மில் ஒருவராக திரையில் வாழ்கிறார்கள். அதனை நமக்கும் காட்சிகள் வழியாக உணர்த்துகிறார்கள்.


நாயகன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வந்து கற்பை இழந்துகொண்டிருக்கும் நாயகியை காப்பாற்றும் காட்சிகள் இப்போது குறைந்துவிட்டன. புதிய நடிகர்களுடன் இளைஞர்கள் கைகோத்து புதிய கதைகள் முயன்று வருகிறார்கள். அவல நகைச்சுவை, வல்லுறவு, பாலியல் சீண்டல், பெண்களின் சுதந்திரம் என நிறைய விஷயங்களை பேசத் தொடங்கியுள்ளனர். இப்படிப்பட்ட நம்பிக்கையளிக்கும் நடிகர்களின் பட்டியலில் ராஜ்பால் யாதவ், தேவ்யேந்து என உள்ளனர்.



ஜெய்தீப் அக்லாவத்


ஓடிடியில் இவர் நடித்த பாதாள்லோக் பெரும் வரவேற்பைப் பெற்றது. ராசி, பார்ட் ஆப் பிளட், அஜீப் தஸ்தான் ஆகியவையும் கவனிக்கப்பட்டன.


எனக்கு புகழைக் கொடுத்து கவனிக்க வைத்த படங்கள் என்றால் கேங் ஆப் வாசிப்பூர், காமாண்டோ, விஸ்வரூபம், ராசி, பாதாள்லோக் ஆகியவற்றைச் சொல்லலாம். மக்களிடையே நமது சினிமா விமர்சிக்கப்பட்டு பாராட்டப்படுவது எப்போதுமே நல்ல விஷயம் என்றார் ஜெய்தீப்.


ஒரு நடிகராக குறிப்பிட்ட விஷயத்திற்குள்ளேயே இருக்ககூடாது என நினைக்கிறேன். பாதாள் லோக்கில் வரும் ஹாதி ராம் சௌத்ரிக்கு பல்வேறு உணர்ச்சிகள், முகங்கள் உண்டு. வானவில்லின் நிறம்போல அத்தனை விஷயங்களையும் நடிப்பில் வெளிப்படுத்துவதுதான் எனது லட்சியம், காதல் செய்யவும், காமெடியாகவும், சண்டை போடவும் எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். சில விஷயங்களை நாம் திட்டமிட முடியாது என்றார் ஜெய்தீப்.



ராஜேஷ் டைலாங்


2020ஆம் ஆண்டின் தொடக்கமே ராஜேசுக்கு சிறப்பாக தொடங்கியுள்ளது. இவர் நடித்த டெல்லி கிரைம் தொடர் எம்மி விருதை வென்றிருக்கிறது. மிர்சாபூரின் இரண்டாவது பாகத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. இவர் 1989ஆம்ஆண்டு தூர்தர்ஷனில் வெளியான தாய் அக்சார் எனும் தொடரில் முதல்முதலாக நடித்தார். என்னைப் பொறுத்தவரை எந்த பாத்திரமாக இருந்தாலும் அதன் நேரம் குறைவோ, நீளமோ அந்த பாத்திரத்தின் பார்வையில் அவனது வாழ்க்கைக்கு அவன்தான் நாயகனாக இருக்கமுடியும். நான் அப்படித்தான் புரிந்துகொண்டு நடிக்கிறேன் என தனது நடிப்பின் இலக்கணத்தை சொல்லுகிறார் ராஜேஷ். ஹசார் சௌராசி கி மா எனும் தொடரில் 65 வயது முதிர்ந்தவராக நடித்தார். இப்பாத்திரத்தில் நடிக்கும்போது இவருக்கு வயது 26 தான்.


என்னைப் பொறுத்தவரை கலையை சிறப்பாக செய்ய நினைக்கிறேன். முதலில் இருந்ததைவிட இன்று நாயக, நாயகி பாத்திரத்தை விட பிற பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்கிறது. அப்பாத்திரங்களுக்கான தொடக்கம், முடிவு ஆகியவையும் சிறப்பாக தீர்மானித்து எழுதப்படுகிறது. இன்று படிக்கும் பல்வேறு திரைக்கதைகள் இந்த அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது.


ஆஹானா குமாரா


இவர் நடிப்பில் வெளிவந்த லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா படம் இவரை பலருக்கும் அறிமுகப்படுத்தியது. சிறந்த நடிகை என்றாலும் இவர் சென்ற பல்வேறு டிவி தொடர்களில் வாய்ப்பே கிடைக்கவில்லை. இருநூறுக்கும் மேற்பட்ட தொடர்களில் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டிருப்பார். ஏஜெண்ட் ராகவ் தொடரில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்றால் அதில் நடிக்கவேண்டிய நடிகர் வெளியேறியதால்தான் என்றார்.


சினிமா பின்னணியில் இல்லாத என் போன்றவர்கள் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் செய்துகொண்டு வருவதுதான் நல்லது. வேறுவழியே இல்லை என்றார்.. திரைப்பட பள்ளியில் படித்து வளர்ந்தவர்கள் திரையுலகில் இருப்பதைப் பற்றி பெருமையுடன் பேசுபவர். நடிப்பவர்களும் அதற்கான பயிற்சியோடு வருவது முக்கியம் என்றார்.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்