வாளின் முனையால் விதியுடன் போரிட்டு காதலனை வெல்லும் வீராங்கனை! - லெஜெண்ட் ஆப் ஃபெய்

 

 

 

 

 

 


 

 

 

 

 

லெஜண்ட் ஆப் ஃபெய்


சீன தொடர்


51 எபிசோடுகள்


யூட்யூப்


விஷம் கொடுத்து கொல்லப்பட்ட தனது முன்னோர்களுக்காக தற்காப்புக்கலையைக் கற்று துரோகிகளை வீழ்த்தும் மாபெரு்ம் வீரப்பெண்ணின் கதை.


48 ஸ்ட்ராங்ஹோல்ட் என்ற வம்சத்திற்கும் அதன் பரம எதிரியான திஷா மேனர் என்ற வம்சத்திற்கும் எப்போதும் பகை நிலவி வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், திஷாவைச் சேர்ந்த ஷென் தியான்சு என்ற பழுப்பு ஓநாய் தலைவர், சில பொக்கிஷங்களை அபகரிக்க தந்திரமாக விஷத்தைப் பயன்படுத்தி 48 ஸ்ட்ராங்ஹோல்டைச் சேர்ந்த லீ செங், அவரது நண்பரான யின் குலத்தைச் சேர்ந்த யின் வெனலான் ஆகியோரையும் வீழ்த்துகிறார். இதனால் அந்த வம்சங்களில் திஷாவைச் சேர்ந்த ஆட்கள் என்றாலே கத்தியை எடுத்து தொண்டையில் செருகும் ஆத்திரமும் வன்மமும் உள்ளது.


இப்போது அனைத்து பொறுப்புகளும் இளைய தலைவர்களிடம் வருகிறது. 48 ஸ்ட்ராங்ஹோல்டை மூத்த தலைவர்களுடன் சேர்ந்து வழிநடத்துவது பெண் தலைவரான லீ. இவரது மகள்தான் தற்காப்புக்கலையைக் கற்கும் வேட்கை கொண்ட ஸூ ஃபெய். பிடிவாதமும், கோபமும், துன்பம் என்றால் உடனே கரைந்தழும் இயல்பு கொண்டவள். இவளுக்கு அப்படியே நேர்குணம் கொண்ட மாமன் மகனாக லீ ஷெங் உள்ளான். இவனைப் பொறுத்தவரை தற்காப்புக்கலை என்பது பெருமைக்கானது ஷூ ஃபெய்யை எப்படியாவது கவர்ந்து அவளை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்பதுதான் அவனது வாழ்நாள் லட்சியம். இவர்களது வம்சம் வாழும் இடத்தை ஆக்கிரமித்து முன்னர் நடந்த அவமானத்திற்கு வஞ்சம் தீர்ப்பது திஷா வம்சத்தின் கனவு. ஆனால் இதற்கு தடையாக 48 ஸ்ட்ராங்ஹோல்ட்ஸின் தடுப்பு அமைப்புகள் உள்ளன்.


குறிப்பாக ஆற்றுக்கு நடுவில் அதனை யாரும் கடக்க முடியாதபடி இவர்கள் அமைத்திருக்கும் ஆபத்தான வலை அமைப்பு. இந்த நிலையில் இதனை தனியாக கருப்பு உடை அணிந்த மர்ம நபர் கடக்கிறார். உடனே 48 ஸ்ட்ராங்ஹோல்ட் வம்சத்தினர் மர்ம மனிதனை வேட்டையாட கிளம்புகின்றனர். ஃபெய்யைப் பொறுத்தவரை அவளுக்கு அந்த அமைப்பை எப்படி கடந்திருப்பான் என்பதை அறிய ஆசையாக இருக்கிறது. இந்த நேரத்தில் லீ செங்கிற்கு, ஃபெய்யை நம்மால் ஈர்க்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் எப்படி வம்சத்தின் தலைவராவது என தயக்கம் வர, அங்கிருந்து ஆற்றைக் கடந்து மர்ம மனிதனைப் பிடிக்க நினைக்கிறான். ஆனால் அவனால் குயிஞ்சி எனும் மாறும் பாதுகாப்பு அமைப்பின் முன் தாக்குபிடிக்க முடியவில்லை. அவனைக் காப்பாற்ற ஃபெய் அங்கு வருகிறாள். தற்காப்புக்லையில் ஓரளவு சிறப்புடையவளாக இருந்தாலும் கூட பாதுகாப்பு அமைப்பின் திறனுடன் மோத முடியாமல் மாமன் மகனை காப்பாற்ற தெரியாமல் தடுமாறுகிறாள். அந்த நேரத்தில் மரத்தில் அமைதியாக உட்கார்ந்திருக்கும் மர்ம நபர், டாஸ் போட்டு பார்த்துவிட்டு சாகும் நிலையில் உள்ளவளை காப்பாற்றுகிறான்.


ஃபெய்யுக்கு அவன் யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் ஏற்படுகிறது. பாதுகாப்பு அமைப்பை உடைத்தான் என்றாலும் தன்னையும் மாமன் மகன் லீயையும் காப்பாற்றியவன் என்பதால் அவன் மீது மரியாதையும் ஏற்படுகிறது. மர்ம நபரை பிடித்து விசாரிக்கு்ம்போது அவன் அவன் பெயர் ஷி மெய்மெய் என்பதும், அவன் மன்னரின் ராணுவத் தளபதி மூலம் இங்கு அனுப்பப்பட்டவன் என்பதும் தெரிய வருகிறது. வம்சதலைவர் திருமதி லீக்கும், மன்னரின் ராணுவத்தளபதிக்கும் முற்காலத்தில் மோதல் இருக்கிறது. எனவே, ஷியை தண்டிக்க நினைக்கிறார். அதற்குள் ஃபெய் சின்ன நாடகம் போட்டு அவனை தப்பிக்க வைக்கிறாள். இதனால் அவளுக்கு சாட்டையில் அனைவரின் முன்னிலையில் தண்டனை அளிக்கப்படுகிறது.


இதனை ஷி மரத்திலிருந்துகொண்டு பார்க்கிறான். தன்னைக் காப்பாற்றியவள் மீது அவனுக்கும் ஆர்வம் வருகிறது. இருவரும் குகைப்பகுதி பாதையில் சந்தித்து பேசுகிறார்கள். ஃபெய்யைப் பொறுத்தவரை அவளது வீடும் தற்காப்பு கலையைக் கற்கும் இடம் மட்டும்தான் அனைத்துமே. ஷியைப் பொறுத்தவரை குறிப்பிட்ட இடத்தில் தங்கியிருப்பது சலிப்பூட்டுவது. பாடல், நாடகங்களை எழுதுவது, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சாப்பிடுவது, பிச்சைக்காரர்களோடு அலைவது என திரிபவன். இந்த இருவரின் வாழ்க்கையும் இணைந்து செல்லும்படி சூழல்கள் மாறுகின்றன. ஃபெய் தனது முன்னோர்களின் கலையைக் கற்றுக்கொண்டு எதிரிகளை வீழ்த்தினாளா, மலையை விட்டு கீழிறங்கி சென்று அவளது வம்சத்திற்கு ஏற்படவிருக்கும் வில்லங்கங்களை அடையாளம் கண்டாளா, உண்மையில் அவள் மீது அக்கறை காட்டும் ஷி என்பவன் யார், எதற்கு அவள் மீது கரிசனம் காட்டுகிறான் என்பதுதான் மீதிக்கதை.


தொடரை பெரும்பாலும ஸ்டூடியோவில் எடுத்திருக்கிறார்கள். அழகு, நளினம் கொண்டு திருமணத்திற்கானவள் என்ற நம்பிக்கை கொண்டுள்ள சமூகத்தில் பெண் எப்படி தற்காப்புக்கலையைக் கற்று முன்னேறுகிறாள், தனக்கான துணையைத் தேடிக்கொள்கிறாள் என்பதுதான் தொடரின் முக்கியமான மையம். வூ ஃபெய் பாத்திரத்தில் ஸாவோ லியிங் பிரமாதமாக பொருந்தியிருக்கிறார். எப்போதும் பிடிவாதமும் கோபமும் கொண்டபடி வலம் வருபவர், கோபம் வந்தால் காதலன் என்றாலும் எட்டி உதைத்துத்தான் அக்கறை காட்டுகிறார். தாத்தாவின் மீதான பெருமையும், தாயின் மீதான கோபமும், காதலன் மீதான அக்கறையும், மக்களைக் காப்பாற்ற உயிரையே பணயம் வைப்பதுமாக இவரது பாத்திரம்தான் தொடரையே தூக்கி நிறுத்துகிறது. இதனுடன் ஒப்பிடும்போத ஷி பாத்திரம் கண்ணன் போன்றதுதான். அவர் எப்படி போர்க்களத்தில் அர்ஜூன்னை நல்வழி படுத்தினாரே அப்படித்தான் ஷி(wang yibo) குறும்பும், காதலும், ஆசிரியருமாக ஃபெய்யை பார்த்துக்கொள்கிறார். இதனால் மெல்ல ஃபெய் அவன் மீது ஈர்ப்பு கொள்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதாக நேரடியாக எங்கும் சொல்வதில்லை. ஆனால் ஒருவரையொருவர் உயிரைக் காப்பாற்றுவதில் தங்களையே பணயம் வைக்கின்றனர்.


நெருக்கடியான பல நேரங்களில் ஷி வாசிக்கும் புல்லாங்குழல் இசை மனதை இலகுவாக்குகிறது. ஃபெய்யுக்கு மட்டுமல்ல நமக்கும் மனதை நெகிழ்ச்சிபடுத்த இசை உதவுகிறது. குயோ லிண்டானோவின் சீடராக வரும் வெர்மில்லன் எனும் மூ ஷியாபோ பாத்திரம் வசீகரமானது. மாற்றுப்பாலினத்தவர் பாத்திரம் இது. இசையை மீட்டி எதிரிகளை தாக்கும் திறன் கொண்டவர். பார்க்க கரடுமுரடானவராக இருந்தாலும் அன்பிற்கும் அங்கீகாரத்திற்கும் ஏங்கும் மனம் கொண்ட மனிதர். இதைப்போலவே தொடரில் இன்னும் நிறைய பாத்திரங்கள் உள்ளன.


மாஸ்டர் கங் டங் இந்த வகையில் முன்னர் தான் செய்த பிழைக்காக தனது உடலை தானே ஊனப்படுத்திக்கொண்டு அதுதான் அறம் என்று வாழ்கிறார். எது விதியோ அதனை ஏற்றுக்கொள்கிறேன் என்று நினைக்கிறார். இவருக்கு எதிராக இருக்கும் ஷென் தியான்சோவும் கூட தனது கரத்தை முழுமையாக தானே வெட்டிக்கொள்கிறார். இருவருக்குமான அறம் சார்ந்த வாதம் பிற்பகுதியில் மனதை ஈர்க்கிறது. நல்லவர், கெட்டவர் என பிரித்து பார்ப்பதில் பலரும் செய்யும் தவறு, கெட்டவரின் வாதங்களை எப்போதும் கேட்பதில்லை.


இதில், தியான்சுவுக்கான வாதம் அவருக்கு தான் செய்யும் செயல்களை நியாயப்படுத்த உதவுகிறது. இதனால் அவர், தனக்கு நம்பிக்கையாக இருந்த அனைவரையுமே விட்டுக்கொடுக்கிறார். புத்திசாலித்தனமும் குரூர தந்திரமும் கொண்டு தனது எதிரிகளை வீழ்த்துகிறார். ஆனால் இளைய தலைமுறையினராக வூ ஃபெய், லீ செங், லின் யாங், ஸ்னேக் சார்மர், சுசூ, ஷி மெய்மெய் ஆகியோர் வளர்ந்து வரும்போது, அவர்களின் திட்டங்களை அவரால் சமாளிக்க முடியவில்லை. காதலியின் நோய்க்காக ஓசேன் ஸ்கை தேவைப்படுகிறது என கூறினாலும் கூட உண்மையான காரணமாக நாடு பிடிக்கும் பேராசை அவரை நிர்க்கதியாக்கி வீழ்த்துகிறது. ஃபெய்யின் தாத்தா லீ ஷெங்கை காதலிக்கும், மரியாதை வைத்துள்ள பெண்கள் அனைவருமே அவளுக்கு உதவி புரிகின்றனர். சிலர் தங்களது உயிரையே அவளுக்காக விட்டுதருகின்றனர்.


தொடரில் ஆண்களை விட பெண்களின் பாத்திரத்திற்கு அதிக இடம் கொடுத்திருக்கிறார்கள். அதுவே தொடரின் பலமாக உள்ளது. வாளை முன்னெடுத்து அனைத்து சவால்களையும் கடந்து முன்னேறிச்செல்லும் பெண்ணின் கதைதான் லெஜெண்ட் ஆப் ஃபெய். இதைத்தான் ஃபெய் தனது மனதில் நினைப்பதாக இறுதிப்பகுதியில் கூறப்ப்டுகிறது.


விதியை நம்பாத சாதனைப் பெண்!


கோமாளிமேடை டீம்








Legend of Fei

Based on Bandits (有匪) by Priest
Directed by Wu Jingyuan
Starring Zhao Liying
Wang Yibo

https://www.youtube.com/watch?v=cicnrAjE5eU&list=PL6xVgUZ4UP2MFsYIrcO9Eq2-Jc756RfZh






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்