தொன்மையான ரத்தக்காட்டேரி உயிர்பெற்று வந்து திருமணம் செய்ய முயற்சித்தால்.... துப்பறியும் ஸ்கூபி டூபி டூ குழு
ஸ்கூபி டூ மியூசிக் ஆப் தி வாம்பயர்
அனிமேஷன்
வார்னர் பிரதர்ஸ் அனிமேஷன்
பேய்களையும், குற்றவாளிகளையும் பிடித்து களைப்பில் இருக்கும் மிஸ்டரி மெஷின் குழு, ஓய்வெடுக்க நினைக்கிறது. இதற்காக அவர்கள் ரத்தக்காட்டேரிகள் உள்ள ஊருக்கு செல்கிறது. அங்கு வின்சென்ட் என்பவர், பரம்பரை வழியில் ரத்தக்காட்டேரிகள் பற்றி கதைகளை எழுதி வருகிறார். இதற்கென தனது அருங்காட்சியகம் ஒன்றை நிறுவியிருக்கிறார். ஆண்டுதோறும் ரத்தக்காட்டேரிகளை பெருமைப்படுத்தும் விழாவும் அவரது ஊரில் நடத்தப்படுகிறது. ஆனால் ரத்தக்காட்டேரிகளைப் பற்றிய காதல் நூல்களை எழுதிவரும் காலத்தில் அவரின் திகில் எழுத்துகள் விற்கமாட்டேன்கிறது. இந்த நிலையில் அவரது அருங்காட்சியகத்தில் உள்ள ரத்தக்காட்டேரிக்கு உயிர் வருகிறது.
மக்களைக் கொல்லுவதற்காக துரத்துகிறது. குறிப்பாக, ரத்தக்காட்டேரி நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் புதுமையான தொன்மை ரத்தக்காட்டேரியின் சக்திக்கு அடிமையாகிறார்கள். அதேநேரம் அங்குள்ள நகர மேயர் ரத்தக்காட்டேரி என்ற வார்த்தையை வெறுப்பவர. அவர் மக்களைத் திரட்டி ரத்தக்காட்டேரி அருங்காட்சியகம், விழா ஆகியவற்றைத் தடுக்க நினைக்கிறார். உண்மையில் யார் அந்த உயிர்பெற்று வரும் ரத்தக்காட்டேரி. அவர்களால் மிஸ்டரி மெஷின் குழுவினர் எப்படி பாதிக்கப்பட்டார்கள், ஸ்கூபி டூவும் சேஜியும் எப்படி இந்த களேபரத்தில் மாட்டிக்கொண்டு அல்லாடுகிறார்கள் என்பதை அனிமேஷனில் சொல்லியிருக்கிறார்கள்.
தொழில்நுட்பம் எப்படி தில்லாலங்கடி வேலைகள் செய்து மக்களை பயமுறுத்தி பணம் பறிக்கலாம் என்பதை ஜாலி கேலியாக சொல்லியிருக்கும் கதை. அருங்காட்சியகத்தை பார்வையிட மக்கள் வருவதில்லை. ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவிலும் நூல்கள் விற்பதில்லை. இதனால் வான்ஹெல்சிங் வம்சாவளி வாரிசு அங்குள்ள சொத்துக்களை விற்க நினைக்கினார். மனதில் ஒரு பாதி இப்படி நினைத்தாலும், தனக்கு உள்ள திறமையை அனைவருக்கும் வெளிக்காட்டவும் நினைக்கிறார். இவற்றை அவர் எப்படி சாதித்தார் என்பதை பார்க்கலாம். இதில் உள்ள முக்கியமான ட்விஸ்ட் தொன்மை ரத்தக்காட்டேரி நிஜமாகவே உயிர்ப்பெற்று வந்து தனக்கான மணப்பெண்ணை கண்டுபிடித்ததா என்பதுதா்ன். இதனை பார்வையாளர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி இரண்டு பாத்திரங்கள் மூலம் சிறப்பாக முட்டுக்கட்டை போடுகிறார்கள். ஒன்று, படத்தின் தொடக்கத்தில் வரும் அட்டைப்பூச்சியை தின்னும் தொழில்நுட்ப வல்லுநர், அடுத்து ஆண்டுதோறும் விழாவை நடத்தும் பெண்மணி. இவர்களைப் பார்க்கும் யாருக்குமே சந்தேகம் தோன்றும். இவர்களுக்கான நேரமும் படத்தில் அதிகமாக உள்ளது. இதனால் பிற பாத்திரங்களின் மீது அதிக கவனமே செல்வதில்லை. குறிப்பக எழுத்தாளர் மீது.
வெக்கேஷன் டைமிலும் வேலை பார்த்து மிஸ்டரி மெஷின் டீமை காப்பாற்றுவது குட்டைப்பாவடை போட்ட கண்ணாடிக்காரியும் புத்திசாலியுமான வெல்மாதான். பிரெட் எப்போதும் போல வினோதமான கருவிகளை செய்துகொண்டு கோமாளித்தனங்கள் செய்ய டெப்னி தனக்கு ஏற்ற ரத்தக்காட்டேரி நகைகள் தனக்கே கிடைக்குமா என ஏங்கிப்போய் ரத்தக்காட்டேரியின் மணமகளாக மாட்டிக்கொள்கிறாள். இதோடு ரத்தக்காட்டேரியை அலறவைத்து தங்கள் பங்குக்கு அலறி பயந்து பீதியாகி நம்மை கொண்டாட்டப்படுத்துவது ஸ்கூபியும் சேகியும்தான்.
பெரும்பாலான காட்சிகளை இசைப்பாடலாக எடுத்திருக்கிறார்கள். எனவே ரிலாக்சாக அனிமேஷனை ரசித்துப் பார்க்கலாம். ஸ்கூபி அண்ட் மீ பாடல் பிரமாதமாக உள்ளது. அதனை ரிங்டோனாக கூட வைத்துக்கொள்ளலாம்.
கோமாளிமேடை டீம்.
கருத்துகள்
கருத்துரையிடுக