குடும்பத்தை, காதலை காப்பாற்றுவதை விட நாடே முக்கியம்! ஸ்டோர்ம் ஐ - சீன தொடர்

 

 

 

 

 

 

 

ஸ்ட்ரோம் ஐ


சீன தொடர்

யூட்யூப்



தீவிரவாத அமைப்புகளுக்கு விற்கப்படும் கனிம விற்பனையை உளவு அமைப்புகளை எப்படி கண்டுபிடித்து தடுக்கின்றன என்பதுதான் மையக்கதை.


தேசிய பாதுகாப்பு, நாடு என்று வந்துவிட்டால் தனிப்பட்ட நபர்களுக்குள் காதலோ, நட்போ இருக்கக்கூடாது என உறுதியாக வலியுறுத்தும் தொடர். சீனாக்காரர்கள் என்பதால் இப்படி கூறப்பட்டிருக்கலாம்.


தேசிய உளவு அமைப்பின் தலைமையகம்(பெய்ஜிங்), ஜின்குவா என்ற மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனத்தை கண்காணிக்கிறது. இதன் வணிகம் சார்ந்த நடவடிக்கைகள் சந்தேகமாக இருப்பதால், தனது இரண்டு திறமையான அலுவலர்களை சாங்குவான் நகருக்கு அனுப்புகிறது. சாங்குவான் நகரில் உள்ள உளவு அமைப்பின் கிளைப்பிரிவு உளவாளி ஒருவரை பின்தொடர்கிறது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. ஆனால் அந்த உளவாளியை பின்தொடர்ந்து எங்கே இருக்கிறது என கண்டுபிடிப்பதில் மேற்சொன்ன இரண்டு திறமைசாலிகள் உதவுகின்றனர்.


கிளை அமைப்புடன் தலைமையக ஆட்கள் இருவரும் இணைந்து ஜின்குவாவின் மர்மங்களை தோண்டி எடுக்கின்றனர். இதற்கிடையே தேசிய உளவு அமைப்பான என்எஸ்எம்மின் கிளைபிரிவு துணைத்தலைவர் ஆன் ஜிங், தலைமையகத்திலிருந்து வந்த டிடெக்டிவ் மா ஷாங் என இருவருக்கும் இடையே ஏதோ உறவு ஓடுகிறது. இருவரும் முடிந்தவரை ஒருவரையொருவர் நேரடியாக பார்த்துக்கொள்வதையே தவிர்க்கிறார்கள். இதற்கிடையே ஆன் ஜிங்கின் குழுவில் உள்ள ஜூனியர் டு மெங் ஆன் ஜிங்கை விரும்புகிறார்.


ஆன் ஜிங் பெரும்பாலும் வீட்டிற்கு செல்வதையே மறுக்கிறார். காரணம், அவரின் அப்பா விபத்தில் இறந்துபோனதிலிருந்து அதனை கொலை என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்துவரும் மனநிலை பாதிக்கப்பட்ட அம்மா. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட இந்த நிலை மாறவே இல்லை. ஆன் ஜிங் என்எஸ்எம் அமைப்பில் இருந்தாலும் கூட தனது அப்பா தொடர்பான வழக்கை விசாரிக்க முடியவில்லை. பல்வேறு தேக்கங்கள் நிலவுகின்றன.


அதோடு ஜின்குவா நிறுவனத்தில் நடைபெறும் கொலைகள் என்எஸ்எம் அமைப்பை வேகமாக வேலைசெய்யத் தூண்டுகின்றன. அதற்கும் பத்து ஆண்டுகளுக்கு முன் ஆன் ஜிங்கின் அப்பாவிற்கு நடந்த விபத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பதை தொடரின் இறுதிப்பகுதி விளக்குகிறது.



தொடரை பார்க்க அசாத்தியமான மனவலிமை தேவைப்படுகிறது. இருபது அத்தியாயங்களுக்கு மேல்தான் கதை தனக்கான ரூட்டை கண்டுபிடிக்கிறது. அதுவரை வட்ட மேஜை மாநாடுதான். பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். முப்பது வயது கடந்துவிட்ட டிடெக்டிவ் ஆட்கள்தான் மா சாங், ஆன் ஜிங். கல்லூரியில் காதலித்தார்கள் என்பதெல்லாம் ஓகே. அதற்காக தனிப்பட்ட நேரத்தில் கூடவா வேலையைப் பற்றியே பேசுவார்கள். இருவருக்கான காதல் காட்சிகளை வேண்டாவெறுப்பாக எடுத்திருக்கிறார் இயக்குநர். மா சாங்கின் அப்பாவை என்எஸ்எம் விசாரிக்கப்போகிறது. இந்த தகவலை மாசாங்கிடம் தெரிவிக்க வேண்டும். இதற்கு கம்பியைப் பிடித்தபடி துள்ளிக்குதித்து சிரித்தபடி இருக்கிறார். இந்த வினோத காட்சியைப் பார்த்து மா சாங் விபரம் கேட்கிறார்.


ஆன் ஜிங்காக யாங் மியை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் இவரின் நடிப்பிற்கான இடம் தொடரில் எங்கே என்றுதான் தேடவேண்டியிருக்கிறது. எப்போதுமே இறுக்கமாகவே இருக்கச்சொல்லியிருக்கிறார்கள். இதனால் காதல் காட்சிகள் என்று நினைத்து எடுக்கப்பட்டவை கூட உருப்படியாகவில்லை. மா சாங்கிற்கு குறும்பான காட்சிகள் பொருந்துகின்றன. ஆன் ஜிங் மா சாங்கிங்கிற்கான காம்பினேஷன் காட்சிகள் ஏனோ சரியாக இல்லை.


தொடரில் நல்லவர்களை விட கெட்டவர்கள்தான் திறமையாக இருக்கிறார்கள். சிறப்பாக செயல்படுகிறார்கள். சூ ஹே என்ற பெயரில் வயதானவராக வரும் ஹெர்மெஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆள். இவர்தான் தொடரின் நாயகன் என்றே சொல்லலாம். அனைத்து காட்சிகளிலும் தனது முத்திரையைப் பதிக்கிறார். காதலி ஜூலியான் இறந்தபிறகு அனைத்து ஆட்களையும் எப்படி சாமர்த்தியமாக மாட்டிவிடுகிறார் என்பது பார்க்க நன்றாக இருக்கிறது. சண்டைக்காட்சிகள் குறைவு. பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதால் சன்டிவி சீரியல் நினைவுக்கு வந்துவிடுகிறது.


ஸ்லோமோஷனில் தேசபக்தி பாடம்!


கோமாளிமேடை டீம்

  • Title: 暴风眼 / Bao Feng Yan
  • English Title: Storm Eye
  • Genre: Crime, Spy
  • Episodes: 46
  • Broadcast network: Dragon TV, Zhejiang TV
  • Broadcast period: 2021-Feb-23

 


கருத்துகள்