அம்னீசியா பலவீனத்துடன் துரோகத்தை களையெடுக்கும் குற்றவியல் அதிகாரி! ரீபார்ன் - சீன தொடர்
ரீபார்ன்
சீனத்தொடர்
28 எபிசோடுகள்
நகரில் உள்ள புகழ்பெற்ற குற்றக்குழுவை ஒழித்துக்கட்டும் முயற்சியில் சிலர் செய்யும் துரோகத்தால் தனது சகாக்களை போலீஸ் அதிகாரி இழக்கிறார். உண்மையில் அந்த துரோகத்தின் பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்து அவர்களை அழிப்பதே கதை.
பொதுவாக உடலில் நோய், ஊனம் கொண்ட நாயகர்களை தொடரில் படத்தில் நடிக்கவைப்பது பார்வையாளர்களிடையே எப்படி இவர் வெல்வார் என எதிர்பார்ப்பை உருவாக்கும். இந்த தொடரில் நாயகனுக்கு அம்னீசியா பிரச்னை உள்ளது. தலையில் தோட்டா பாய்ந்து அதன் சில்லுகள் மூளையில் தேங்கி நிற்கின்றன. ஆபரேஷன் கூட செய்யமுடியாத நிலை. முழங்காலில் தோட்டா பாய்ந்ததில் தினசரி காலில் பதினைந்து மில்லி சீழை அகற்றிக்கொண்டே இருக்கவேண்டும். இந்த சிக்கல்களோடு குற்றவியல் பிரிவின் துணைத்தலைவராக குழுவை வழிநடத்தும் பொறுப்பு இருக்கிறது.
என்கவுண்டர் சம்பவத்தில் தனது அத்தனை சகாக்களையும் பலி கொடுத்துவிட்டு கோமாவிலிருந்து எழுந்து வருபவரை பலரும் கைதட்டி வரவேற்று பதவி உயர்வு கொடுக்கின்றனர். அதில் உரையாற்ற சொல்லும்போது, தனது விருதை துறையில் பணியாற்றும் அப்பாவிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிடுகிறார் குயின் ஷி. ஏனெனி்ல் தனது நெருக்கமான சகாக்களை பலிகொடுத்துவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சி அவரது மனதில் எப்போதும் இருக்கிறது. மேலும் அந்த சம்பவத்தில் தான் நேர்மையாக இல்லை என்றும் தன்னையே சந்தேகிக்கிறார். துறையில் வேலை செய்பவர்களும் அவர் மட்டுமே உயிர் பிழைத்திருப்பதால், அவர்தான் தனது சகாக்களை காட்டிக்கொடுத்து அவர்களைக் கொன்றுவிட்டு பதவி உயர்வை பெற்றிருக்கிறார் என புறம் பேசுகிறார்கள். அவ்வளவு ஏன் அவரை முன்னதாக விவகாரத்து செய்துவிட்ட முன்னாள் மனைவி கூட விசாரணையில் ஆதரவாக இருப்பதில்லை. தன் முன்னாள் கணவர் தவறானவராக இருப்பாரா என சந்தேகத்திலேயே சில உதவிகளை செய்கிறார்.
கோமாவிலிருந்து மீண்டு வந்தவரை துறைரீதியான விசாரணை செய்கிறார்கள். மேலும் அவரின் மனநிலை பற்றியும் சந்தேகம் இருப்பதால், உளவியல் தெரபிக்கு ஏற்பாடு செய்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் எதையும் கண்டுகொள்ளாதவராக இருக்கும் குயின் ஷி, தனது பிற வழக்குகளை தீர்க்க செல்கிறார். தெரபியை முதலில் மறுக்கிறார். பின்னர் டாக்டர் ஷியாவின் அக்கறையைப் புரிந்துகொண்டு சரி என்கிறார். இதற்கிடையே வழக்கு விசாரணை ஒன்றின்போது அவரை இளம்பெண் ஒருத்தி கத்தியால் குத்த வருகிறாள். அவளை அவர் தான் செல்லுமிடங்களில் எல்லாம் பார்க்கிறார்.
என்கவுண்டர் செய்தபோது அதில் இறந்த குற்றக்குழுவினரில் ஒருவரான சென்ஷியின் தங்கை என்பது தெரியவருகிறது. இதனால் அவருக்கு குற்றவு்ணர்வு உருவாக, அவளை தன்னோடு வைத்துக்கொள்கிறான். அவள் கோபத்தில் தனது கத்தியால் இடுப்பில் குத்தும்போது கூட ஷியாவின் உதவியால் காயத்திற்கு தையல் போட்டுக்கொண்டு இளம்பெண்ணை காட்டிக்கொடுக்கவில்லை. அவளை தனது மகள் போல பார்த்துக்கொண்டு தனது வீட்டில் தங்க வைத்துக்கொள்கிறார்.
விவாகரத்து செய்துவிட்டாலும் கூட குயின் ஷியின் மனைவி, ஃபெங்கிற்கு கணவர் மீது அக்கறை இருக்கிறது. தான் பல்விளக்க என சாதாரண பிரஷ் அல்லது எலக்ட்ரிக் பிரஷ் பயன்படுத்துவேனா என்று கேட்குமளவு நினைவு பாதிக்கப்பட்ட நிலையில் குயின் ஷி இருக்கிறார். இதனால் அவர் மீதுள்ள கோபத்தை மறந்துவிட்டு உதவுகிறார். குயின் ஷி, அம்னீசியா வந்தபிறகு அதிகம் பேசவில்லை என்றாலும் யாரையும் முன்னர் போல மோசமாக நடத்துவதில்லை. இவர்களின் உறவு மீண்டும் சரியாகும் நேரத்தில் கணவரது அறையில் சென் ரூய் என்ற பெண்ணைப் பார்த்ததும் ஃபெங்கிற்கு கோபம் உச்சமாகிறது. குயின் ஷி இதுபற்றி ஃபெங்கிற்கு எதையும் சொல்லுவதில்லை. அமைதியாக இருக்கிறார். இவர்கள் மூவருக்கும் இடையிலான காட்சிகளை நன்றாக எடுத்திருக்கிறார்கள். விவாகரத்து செய்தாலும் கூட குயின் ஷியின் மீதான காதலை அவர் முகத்தில் லிப்ஸ்டிக்கால ்வரைந்து வெளிப்படுத்துவது, துறை தலைவர் இவரது காதலை அறிந்துகொண்டு பேசும்போது மெல்ல வெட்கத்துடன் இல்லை என்பது, இறுதிக்காட்சியில் ஆபரேஷனுக்கு பிறகு பேசுவோம் என புன்னகையுடன் கூறுவது என ஃபெங்கின் நடிப்பு சில காட்சிகள் வந்தாலும் சிறப்பாக இருக்கிறது. சென் ரூயைப் பொறுத்தவரை குயின் ஷியின் மீது இருக்கும் கோபம் மெல்ல மாறி அவரை காதலிப்பதாக மாறும். வளரிளம் பருவத்தில் இருக்கும் பெண்ணின் மனநிலை, மாறிக்கொண்டே இருக்கும் மனநிலையை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். பெரிய ஹோட்டல்களில் ஏன் சாப்பிடுகிறேன் என்பதை அவர் கூறும் காட்சியைப் பார்த்தால் எளிதாக புரிந்துகொள்ளலாம்.
இதில் குயின் ஷியாக நடித்துள்ள யி ஷாங்கின் நடிப்பு முக்கியமானது. அம்னீஷியா பாதிப்பில் தினசரி தான் செய்யும் விஷயங்களிலேயே தடுமாறுபவர், ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் தனியாக வாழ்கிறார். மருத்துவமனையில் இருந்து குணமாகி வந்து அலுவலகத்தில் மனைவியைப் பார்த்து எந்த பிரஷ், ஷேவர் பயன்படுத்துவேன் என்று கேட்பது, டாக்டர் ஷியாவுடனான தயக்கமான உரையாடல், கத்தியால் குத்தும் சென் ரூயை மன்னித்து தனது வீட்டில் தங்க வைப்பது, அவளுடனான உறவை மனைவிக்கு விளக்குவது, போலீஸ் ஸ்டேஷனலில் சென் ரூயை தங்கவைத்து அவளது எதிர்காலம் பற்றி பேசிவிட்டு, தன்னோடு வாழமுடியுமா என்று அவள் கேட்பதற்கு பதில் பேசாமல் கதவை சாத்திவிட்டு செல்வது, அதிக நெருக்கம் இல்லாத தந்தையுடன் மனைவியை மீட்க செல்லும்போது உட்கார்ந்து பேசுவது, தனது உதவியாளர் லூவுடன் என்கவுன்டருக்ககு தயாராகும்போது எப்படி மனநிலை இருக்கவேண்டுமென கூறுவது என பல்வேறு காட்சிகளில் வசனம் குறைத்து உடல் மொழி மூலமே அழகாக நடித்திருக்கிறார்.
குற்றவுணர்ச்சியும், மனிதர்களை அந்நியப்படுத்திய பதவி வெறியைப் பற்றிய மன உளைச்சலுமாக நடித்துள்ள உடல்மொழியும், யோசித்து பேசும் வசனங்களும் குயின் ஷி பாத்திரத்தை நம்பகத்தன்மை கொணடதாக மாற்றுகிறது. தொடரில் எதிர்மறை பாத்திரம் போல வந்து குயின் ஷியை அனைத்து சிக்கல்களிலிருந்தும் பாதுகாக்கும் பாத்திரம் ஹூவினுடையது. இவருக்கும் குற்றவாளி ஜியான் குவாய்க்கும் நடக்கும் சண்டைக்காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. இறுதிவரையில் அனைத்து இக்கட்டுகளையும் நூடுல்ஸ், கறி சாப்பிட்டபடி எளிதாக எதிர்கொள்கிறார். மருத்துவமனையில் நடக்கும் சண்டைக்காட்சியில் சைக்கோ கொலைகாரனுடன் சண்டை போட்டு அவனை தூக்கி ஜன்னலுக்கு வெளியே வீசி கொன்றுவிட்டு அதற்கு உணர்ச்சிகரமாக விளக்கம் கொடுத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து உட்காரும் காட்சி அபாரம்.
லூவும், மேற்பார்வைப் பிரிவு தலைவர் க்யூவும் பணத்தை எடுத்துக்கொண்டு பில்டிங்கின் கார் பார்க்கிங்கில் இருக்கும்போது குயின் ஷி அங்கே வந்து லூவை அடிப்பார். அதனை காரின் பானட் அருகே நின்றபடி அமைதியாக பார்த்துக்கொண்டே இருக்கும் திமிர், லூவுக்கு விருது கிடைத்தபிறகு அது உங்களுக்கு கிடைத்திருக்கவேண்டும் என அவர் பேசும்போது ஹூ அதற்கு சொல்லும் பதில் என தேர்ச்சியான நடிப்பு. குயின் ஷியின் அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து அப்படி செய்தது யாருக்குமே தெரியாமல் பார்த்துக்கொண்டு நூடுல்ஸ், பார்பிக்கியூ சாப்பிட்டபடி அலட்டலாக சுற்றும் ஹூவின் நடிப்பு தொடரில் ஆச்சரியமான ஒன்று.
குயின் ஷியின் உதவியாளராக வந்து மெல்ல அவரை தனது ரோல்மாடலாக ஏற்றுக்கொள்ளும் லூ மின்ஜா மற்றொரு முக்கியமான பாத்திரம். துறையில் உள்ள அனைவருமே அவரது அப்பாவின் சிபாரிசுதான் வேலைக்கு காரணம் என்று கூற அந்த எரிச்சலிலேயே இருப்பவர். லாங்குவா சம்பவத்திற்கு பிறகு குயின் ஷியின் துணையாகவே வருகிறார். முதலில் அவரை சந்தேகப்பட்டு பிறகு அவரை முழுமையாக நம்பி தன்னையே வேலைக்கு பலி கொடுக்க கூட துணிபவர். முதலில் தன்னை அனைவரும் புகழ வேண்டும் என நினைப்பவர், சென் ரூயின் உயிரைக் காப்பாற்றிய சம்பவத்தில் தான் எப்படி வேலை செய்யவேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறார். இறுதிக்காட்சியில் தனது குருவான குயின் ஷியைப் போலவே மாறுகிறார். சென் ரூயைபை பார்த்து கண்கலங்கும் காட்சி இதற்கு உதாரணம்.
குற்றத்தை தகர்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக