அனைத்து இன மக்களையும் இணைத்து பொருளாதார ஏணியில் ஏற்றிய மாமனிதர் ! லீ குவான் யூ - எஸ்.எல்.வி மூர்த்தி
லீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி
எஸ்.எல்.வி மூர்த்தி
கிழக்கு
தீவு நகரமான சிங்கப்பூர் எப்படி பல்வேறு இன, மத தகராறுகளை சமாளித்து பொருளாதார வளர்ச்சி பெற்றது என விவரிக்கிறது இந்த நூல். சிறு நகரம்தானே என பலரு்ம் நினைத்தாலும் நாட்டில் ஒழுங்கை எப்படி லீ ஏற்படுத்தினார் என்பது நிர்வாகரீதியாக நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவுகிறது என்றே கூறவேண்டும்.
1819இல் உருவான சிங்கப்பூர் ராபிள்ஸ் என்ற ஆங்கில அதிகாரியால் வடிவமைக்கப்பட்டது. அவரைப் பற்றிய தகவலும், நகரைப் பற்றிய தொலைநோக்கு கொண்டவரை அரசியல் சதிகளால் எ்ப்படி வீழ்த்தினார்கள் என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது. இன்று சிங்கப்பூரில் ராபிள்ஸ் உரு்வாக்கிய பல்வேறு கல்வி, கலாசார நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது என்பது சிங்கப்பூர் மக்களின் நன்றியறிதலுக்கு சான்றாக உள்ளது என்ற தகவல் மட்டுமே ஆறுதலாக உள்ளது.
சிங்கப்பூர் வரலாற்றில் ராபிள்ஸூக்கு பிறகு அதேபோன்ற இடத்திற்கு வருபவர்தான் லீ. சீனராக இருந்தாலும் கூட அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம் தொடக்கத்திலேயே இருந்தது அவரின் பிரதமர் பதவிக்கு உதவியிருக்கிறது. தலைமைப் பதவிக்கான பல்வேறு விஷயங்களை தனது இளமைக்காலத்தில் எப்படி கற்றார் என்பதை நூல் ஆசிரியர் சிறப்பாக பதிவு செய்துள்ளார். குறிப்பாக குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக புதிய மொழியைக் கற்பது, பசை தயாரிக்கும் தொழிலை நண்பனுடன் சேர்ந்து செய்வது, கொடூரமான ஜப்பானியர்களின் மூன்றரை ஆண்டுகாகல ஆட்சியிலும் நல்ல விஷயங்கள் எவையென கற்கும் மனநிலை சாதாரணமல்ல.
லீயின் அரசியல் வாழ்க்கையை வடிவமைத்ததில் கேம்பிரிட்ஜ் கல்லூரி படிப்பு முக்கியமானது. இந்த காலகட்டத்தில் அவர் கேட்ட பல்வேறு அரசியல் உரைகள் அவரை செழுமையாக்கின. இவற்றை கோட்பாடு அளவில் எண்ணங்களை உருவாக்கின என்றாலும் நடைமுறை அளவில் 1959ஆம் ஆண்டு தேர்தலில் பெற்று பதவியில் அமர்ந்த பிறகுதான் பல்வேறு விஷயங்களை நடைமுறை செய்து தன்னை திருத்திக்கொண்டிருக்கிறார்.
மலேஷியாவுடன் இணையும் திட்டம்தான் லீ செய்து பார்த்து தோல்வியுற்ற திட்டம் எனலாம். இனவெறி அரசியலை ஊக்கப்படுத்தும் துங்கு போன்ற தலைவர்களை லீ எப்படி நம்பினார் என்று தெரியவில்லை. இது அவரது அரசியல் வாழ்க்கையில் பெரிய சறுக்கல் என்றே கூறலாம். அதற்குப்பிறகு, சிங்கப்பூரை தனியாக பிரித்து ராணுவத்தை அமைத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தி நிர்வாகம் பற்றி அறிய கல்லூரியில் படித்து வந்து என பல்வேறு சாதனைகளை செய்துவிட்டார்.
லீ சீனர்கள், மலாயாக்கள் தமிழர்கள் என அனைவருக்குமான மொழி உரிமையைக் கொடுத்தது முக்கியதானது. எந்த மதத்தையும், இனத்தையும் நசுக்காமல் பொருளாதார வளர்ச்சியை ஈட்ட முடியும் என்று நிரூபித்தது ஆச்சரியப்படுத்துகிறது. உண்மையில் குறிப்பிட்ட இயக்கம் சாராமல் அனைத்து மக்களோடும் கலந்து பழகி சரியான கல்வி அறிவு பெற்றவரால்தான் பன்மைத்துவத்தை புரிந்துகொள்ளமுடியும் என்பதற்கு லீ தான் சான்று.
கல்வியில் ஏற்படுத்திய மாற்றங்கள், திருமணச்சட்டங்கள், குடியுரிமை மாற்றங்கள், பன்னாட்டு நிறுவனங்களை சிங்கப்பூரில் கிளைகளை உருவாக்குவதற்கான சட்டங்கள், ஊழல் எதிர்ப்பு சட்டங்கள், ஏழை மக்களுக்கான வீடுகளை கட்டுதல், வாசிப்பு இயக்கங்கள் என லீ உண்மையில் உருவாக்கிய சட்டங்கள் அனைத்துமே அந்த நாட்டு மக்களிடையே மகத்தான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. சட்டங்களை செயல்படுத்தும் முறை விமர்சிக்கப்பட்டாலும் இன்று அந்நாட்டு மக்களின் இளம் தலைமுறைகள் லீயை போற்றிக்கொண்டாடுகின்றன என்பதை நூலின் இறுதியில் உள்ள கடிதம் சுட்டிக்காட்டுகிறது.
அதிகாரங்களை கையில் வைத்துக்கொண்டு நிர்வாகத்திறமை இல்லாமல் மக்கள் மீது அன்பு இன்றி பிறரை குறை சொல்லி, இனவாத அரசியல் செய்பவர்கள் லீயைப் பார்த்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது. தேவையான விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பதோடு, அதிக கவனம் செலுத்தும் விஷயங்களை தனது மேற்பார்வையில் வைத்துககொண்டு செயல்பட்டதால்தான் சிங்கப்பூர் இன்று முன்னேறிய நாடாகியுள்ளது.
வெற்று புகழாரம் சூட்டும் நூலாக இல்லாமல் சிங்கப்பூரில் உள்ள அடிப்படை பிரச்னைகள் என்ன, அதனை முந்தைய ஆட்சியாளர்கள் எப்படி பார்த்தார்கள், லீ அதனை எப்படி பார்த்தார் என்ற கோணத்தில் நூலை சிறப்பாக எழுதியுள்ளார் எஸ்.எல்வி. மூர்த்தி.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக