இரண்டாவதாக ஓடி ரேசில் வென்ற ஸ்டீவ் ஜாப்ஸ் - சூப்பர் பிஸினஸ்மேன்

 

 

 

 

Steve Jobs by TomRutjens on DeviantArt

 

 

 

 

சூப்பர் பிஸினஸ்மேன்


அமெரிக்காவின் சிலிக்கன் வேலியில் சூப்பர் பிஸினஸ்மேன் என்று யாரையாவது கூற வேண்டுமெனில் யாரைக் கூறலாம்? பில்கேட்ஸ் அல்ல. பில் ஹியூலெட், டேவிட் பெக்கார்டு ஆண்டி குரோவ், கூகுளின் இரட்டையர்களை கூறலாம். ஆனால் பலருக்கும் மனதில் வரும் ஒரே பதில் ஆப்பிளை மக்களுக்கான எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான மாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ்தான். இப்போது டிம் குக், நிறுவனத்தின் லகானைப் பிடித்து செலுத்தினாலும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவது, அதனை எளிமைப்படுத்துவது ஆகியவற்றில் மாஸ்டர் ஸ்டீவ்தான். வாடிக்கையாளர் பயன்படுத்தும் ஆப்பிள் பொருட்கள், எளிதாக இருக்கவேண்டும். அதன் பயனர் கையேட்டை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட எளிதாக புரிந்துகொள்ளவேண்டும் என மெனக்கெட்டார்.


ஆப்பிளின் பொருட்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி விழாவைப் போல நடத்தப்படும். எப்படி பொருளை மார்க்கெட்டிங் செய்வது என்பதை ஸ்டீவ் தனது அனுபவங்கள் வழியாக கற்றிருந்தார். அதனால்தான் ஆப்பிள் என்றால் ஸ்டீவ், ஸ்டீவ் என்றால் ஆப்பிள் என்று இன்றுமே கூறப்படுகிறது.



1955ஆம் ஆண்டு தனது அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்து ்உலகை தரிசித்தார். தனியாக வாழ்ந்துகொண்டிருந்த அவரது அம்மா, ஸ்டீவை தத்து கொடுத்துவிட்டார். கலிபோர்னியாவில் வாழ்ந்துகொண்டிருந்த பால், கிளாரா ஜாப்ஸ் ஆகிய தம்பதிகள்தான் இவரை த த்து பெற்று வளர்த்தினர். அப்போது கலிபோர்னியாவின் வடக்குப் பகுதியில் கலாசார ரீதியான ஹிப்பிக்கள் ஆதிக்கம் பெற்றிருந்தனர். அதேநேரம் சிலிக்கான் வேலியில் தொழில்நுட்ப ரீதியாக மாற்றங்கள் நடைபெற்று வந்தன. இவற்றின் அடையாளங்கள் ஸ்டீவில் எப்போதும் நீங்கமாமல் இடம்பெற்றிருந்தன. வணிகத்தில் செல்வாக்கானவராக பெயர் பெற்ற பிறகும் ஸ்டீவ் மனதில் மேற்சொன்ன விஷயங்களின் தாக்கம் இருந்தது.


கலிபோர்னியாவின் குபெர்டினோவில் பள்ளிப்படிப்பை முடித்தார். அடுத்து, அறிவியல், இலக்கியம், கவிதைகளைப் பற்றி படிக்க போர்லேண்டிலுள்ள ரீட் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஒரு செமஸ்டர் மட்டுமே படித்தவர் திரும்ப வீட்டுக்கு வந்துவிட்டார். அடாரியில் தொழில்நுட்ப வல்லுநராக வேலை தேடிக்கொண்டு செலவுகளை சமாளித்தார். பின்னர் அங்குள்ள ஹோம்ப்ரியூ கணினி கிளப்பில் ஆர்வத்தில் இணைந்தார். அங்குதான் ஸ்டீவ் வோஸ்னியாக்கை சந்தித்தார். பின்னர் இந்தியாவுக்கு பயணித்து ஆன்மிக பயணத்தை அடைந்தவர், 1976இல் அமெரிக்காவுக்கு திரும்பினார். ஸ்டீவ் வோஸ்னியாக், ரோனால்ட் வேய்ன் ஆகியோருடன் இணைந்து தனது வீட்டு காரேஜில் ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினார். 1977இல் ஆப்பிள் கணினி உருவானது. இதில் கீபோர்டு, மானிட்டர் ஏதும் கிடையாது. ஆனால் மக்களிடையே வெற்றி பெற்றது.


அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆப்பிள் 2 வெளியானது. அப்போது ஜெராக்ஸ் நிறுவனம், கிராபிக்கல் யூசர் இன்டர்பேஸ் வசதியை முன்பே கண்டுபிடித்திருந்தது. ஆப்பிள் இதற்கான முயற்சியில் அப்போதுதான் ஆர்வம் காட்டி வந்தது. ஜெராக்ஸின் முயற்சியைப் பார்த்து ஸ்டீவ் தனது செயல்பாட்டில் வேகம் காட்டி, ஆப்பிள் லிசாவை உருவாக்கினார். அப்போது நிறுவனத்தில் இருந்த அரசியல் காரணமாக அந்த திட்டத்தில் இருந்து ஸ்டீவ் நீக்கப்பட்டார். லிசா வெளியீடு வரவேற்பை பெறாமல் போகவே, ஸ்டீவ் மேக்கின்டோஷ் திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டார். 1984ஆம் ஆண்டு வெளியான மேக்கின்டோஷ் மகத்தான வெற்றிபெற்றது. இதற்கு முன்னரே ஆப்பிள் பங்குவெளியீட்டிலும் இறங்கியிருந்தது. அடுத்த ஆண்டிலேயே ஆப்பிளின் இயக்குநர் ஜான் ஸ்கல்லிக்கு்ம ஸ்டீவுக்கும் முட்டிக்கொள்ள நிறுவனத்திலிருந்து ஸ்டீவ் வெளியேற்றப்பட்டார். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஸ்டீவின் பிடிவாதமும், முரட்டுத்தனமும் அலுவலகத்தில் பெயர் பெற்றவை.


அங்கிருந்து வெளியே போன ஸ்டீவ், கைகளை கன்னத்திற்கு முட்டுக்கொடுத்து உட்கார்ந்து விடவில்லை. நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். தொழில்நுட்பம், அழகு என அனைத்திலும் சூப்பராக இருந்த கணினியின் விலை மட்டும்தான் மக்களின் பர்சை சுட்டது. இதனால் கணினிகள் விற்பனை தள்ளாடியது. ஸ்டீவைப் பொறுத்தவரை பரிசோதனை முயற்சிகளை எப்போதும் செய்துகொண்டே இருந்தார். பல்வேறு திட்டங்களின் தனது முதலீட்டைப் போட்டார். அவை பெரும்பாலும் சோடை போகவில்லை. இன்று டிஸ்னியில் இணைந்துள்ள பிக்சாரை ஜார்ஜ் லூகாசிடமிருந்து பத்து மில்லியனுக்கு வாங்கினார். முதலில் அந்த நிறுவனத்தின் திறமையை வியந்தாலும் அவர்களை வைத்து என்ன செய்வதென அவருக்கு தெரியவில்லை. 1995இல் பிக்சார், டாய் ஸ்டோரி படத்தை உருவாக்கியது. இதன் மதிப்பும் புகழும் உலகிற்கு தெரிய வந்தபோது இதிலிருந்து ஸ்டீவின் பங்கு மதிப்பு 585 மில்லியனாக உயர்ந்தது. இன்றும் அழகான பாத்திர அமைப்பு, அற்புதமாக கதை சொல்லலுக்கும் பெயர் சொல்லும் நிறுவனமான பிக்சார் உள்ளது.


தொண்ணூறுகளில் ஆப்பிள் நிறுவனம் தொழில்நுட்ப வல்லுநர்கள் அல்லாமல் அதிகாரிகளால் நிரம்பியிருந்தது. இதனால் நிறுவனத்தின் புதிய பொருட்கள் வெளிவர தடுமாறின. சந்தையில் பங்குகளின் விலையும் கீழே விழுந்துகொண்டிருந்தது. தொண்ணூற்றாறில் ஸ்டீவ் தனது நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிளில் இணைத்து. தனது பணியாளர்களை முக்கியமான பொறுப்புகளில் அமர வைத்தார். அப்போது பத்திரிகைளில் வந்த செய்தி, ஆப்பிளைக் காப்பாற்ற கடவுள்தான் வரவேண்டும் என்பதுதான். ஸ்டீவ் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக வந்தவர், அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டு ஐமேக் மீது மட்டும் முழுக்கவனத்தை செலுத்தினார். நிறுவனம் இனி எந்த வழியில் செல்லவேண்டும் என்பதை தீர்மானகரமாக யோசித்து வழிநடத்தினார். 2001இல் இப்படித்தான் ஐபாட் வெ்ளியானது. 2007இல் ஐபோன் வெளியானது. 2010இல் ஆப்பிள் நிறுவனம் ஐபேட் டேப்லட்டை வெளியிட்டது. வெளியிட்ட காலத்தில் டேப்லட்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு பெரிய மதிப்பில்லை. ஆனால் ஆப்பிள் மீது இருந்த நம்பிக்கை அனைத்தையும் மாற்றியது.


அப்போது சந்தையில் மைக்ரோசாப்ட் அதிகளவு ஆதிக்கம் செலுத்தி வந்தது. கணினி சந்தையில் ஆப்பிளின் சந்தை அளவு 4 முதல் 8 சதவீதம்தான். ஆப்பிள் கணினிகளை கிராபிக் டிசைனர்கள், அனிமேஷன் துறையினர் ஆர்வமாக வாங்கினர். கணினி நிறுவனம் தனது கணினிகளை லைப்ஸ்டைல் சார்ந்ததாக மாற்றியதை அத்துறை சார்ந்த வர்களே எதிர்பார்க்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக போட்டி நிறுவனங்களை விட அதிக சந்தை மதிப்பைக் கொண்டிருந்தது. எம்பி3 பிளேயர் சந்தையில் 70 சதவீதமும், ஸ்மார்ட்போன் சந்தையில் 50 சதவீதத்தையும் தனது கையில் கொண்டுவந்துவிட்டது. ஆப்பிளைப் பொறுத்தவரை சிறப்பான கண்டுபிடிப்பை தாங்கள் கண்டுபிடித்ததாக அவர்கள் கூறவில்லை. ஐபாட், ஐபோன் ஆகியவற்றிலும் அவர்கள் இரண்டாவதாகவே வந்தார்கள். ஆனால் பொருட்களின் கட்டுமானம், அதற்கான மார்க்கெட்டிங் விஷயங்களில் முன்னோடியாக இருந்தார்கள்.


ஐபாட்டிற்கு முன்னரே மார்க்கெட்டில் சேகான் நிறுவனத்தின் எம்பிமான் எஃப்10 என்ற எம்பி3 பிளேயர் வந்துவிட்டது. இதில் மக்கள் எளிதாக பயன்படுத்தும்படியான வசதிகள் இல்லை. இதற்குப்பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஐபாட் வெளியாகிறது. எளிமையான வடிவமைப்பு, கொரிய நிறுவனம் செய்த தவறுகளை களைந்த டிஜிட்டல் பொருள். எனவே, வெற்றி என்பது எளிதாகிறது. ஸ்மார்ட்போன் விவகாரத்திலும் இதேதான் அப்படியே தொடர்கிறது. இதை நிறுவனத்தின் மீதான விமர்சனமாக கொள்ளலாம்.


வணிகத்தை நடத்துவது எப்படி, மக்களுக்கு பிடித்தது போல பொருட்களை வடிவமைப்பு, அதனை எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்பதைப்பற்றி ஒருவர் அறிய விரும்பினால் ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிக்கதை அவருக்கு நிச்சயம் உதவும்.



ka.si.vincent


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்