ஜிஎம் மோட்டார்ஸை உயிர்ப்பித்த பெண்!
சக்தி!
மேரி பாரா
“பொறுப்பு குறித்த அக்கறையை காய்கறிவிற்கும்
கடையில்தான் உணர்ந்தேன். அப்போது என் தந்தை ஜிஎம் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார்.
40 ஆண்டுகளாக அங்கு பணிசெய்த தந்தை மற்றும் தாய்க்கு என்னைக் குறித்த கனவுகள் இருந்தன”
எனும் மேரி பாரா, ஜெனரல் மோட்டார்ஸின் பெருமைமிக்க முதல் பெண் இயக்குநர் மற்றும் தலைவர்.
அமெரிக்காவின் மிச்சிகனில்
1961 ஆம் ஆண்டு பிறந்த மேரி பாரா, 2014 ஆம் ஆண்டு ஜெனரல் மோட்டார்சின் இயக்குநர் பொறுப்பை
ஏற்றார். “மரபான தொழில்துறையான மோட்டார்துறையில் ஆண்களுடன் போட்டியிடுவது எளிதல்ல;
பெருமளவு வேலைப்பளுவை மனதில் சுமந்துகொண்டு பணிபுரிந்துள்ளேன்” என உற்சாக பதில் தருகிறார்
மேரி பாரா. வாட்டர்ஃபோர்ட் மாட் பள்ளியில் படித்தவர் எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படிப்பை
கெட்டரிங் பல்கலையில் நிறைவு செய்து ஜெனரல்மோட்டார்ஸ் உதவித்தொகையுடன் வணிக மேலாண்மை
படிப்பையும் முடித்தார்.
தன் பதினெட்டு வயதிலேயே ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றத்
தொடங்கியவர் மேரி பாரா. செவி போல்ட் இவி எலக்ட்ரிக் வாகனத்தை மேம்படுத்தி வருபவர் இயக்குநர்
பொறுப்பேற்றதும் 30 மில்லியன் கார்களை நாடெங்கும் திரும்ப பெற்று பாதுகாப்பு வசதிகளை
சரிசெய்து கொடுத்த தில் பெண்மணி.