இந்தியருக்கு லண்டனில் அறிவியல் பரிசு!


கானுயிர் விஞ்ஞானிக்கு லண்டன் அறிவியல் பரிசு!- .அன்பரசு



Image result for drkamaljit singh bawa

இந்திய கானுயிர் ஆராய்ச்சியாளர் டாக்டர் கமல்ஜித்சிங் பாவாவுக்கு லண்டனிலுள்ள லின்னியன் சங்கம், லின்னியன் மெடல் பரிசளித்து கௌரவித்துள்ளது. இவ்விருதைப் பெறும் முதல் இந்திய சூழலியல் விஞ்ஞானி கமல்ஜித் என்பதுதான் இதில் வியப்பூட்டும் செய்தி.

அமெரிக்காவின் போஸ்டனிலுள்ள மசாசூசெட்ஸ் பல்கலையில் உயிரியல் பேராசியராகவும், பெங்களூருவிலுள்ள ஏடிஆர்இஇ(Ashoka Trust for Research in Ecology and the Environment)  அமைப்பின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார் டாக்டர் கமல்ஜித் பாவா. 1888 ஆம் ஆண்டு தொடங்கிய லின்னியன் பரிசின் 130 ஆண்டு வரலாற்றில் இந்தியரான கமல்ஜித்சிங் பாவா இதனைப் பெறும் முதல் இந்தியர் என்பது இந்தியாவுக்கு பெருமை. "சூழலியலைக் காப்பாற்றும் பணியில் லின்னியன் பரிசு எங்கள் குழுவுக்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம். மறைந்து வரும் இயற்கை வளங்களை காப்பதிலும் ஆவணப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்தவேண்டிய நேரம் இது"  என விருது பெற்ற பரவசம் குறையாமல் பேசுகிறார் டாக்டர் கமல்ஜித்.

பெங்களூருவில் செயல்பட்டும் வரும் ஏடிஆர்இஇ எனும் கமல்ஜித்தின் தன்னார்வ அமைப்பு சூழலியல் சார்ந்த ஆய்வுகளுக்காக ஆசியாவில் இரண்டாவது இடமும், உலகளவில் பதினெட்டாவது இடம் பிடித்துள்ள முக்கிய ஆய்வு நிறுவனமாகும். இமாலயம், மேற்குதொடர்ச்சி மலை, மத்திய அமெரிக்கா ஆகிய பகுதிகளிலுள்ள பருவக்காடுவளர்ப்பு, காடுகள் அழிப்பு, காடுகளிலிருந்து கிடைக்கும் மரமற்ற பிற வணிகப்பொருட்கள்., பல்லுயிர்த்தன்மை ஆகியவை குறித்த கமல்ஜித் பாவாவின் பல்லாண்டுகால ஆராய்ச்சி சேவைக்காக லின்னியன் பரிசு வழங்கப்பட்டுள்ளது

"அசோகா அறக்கட்டளையை தொடங்கியதே பருவச்சூழல் மாறுபாடு தொடர்பான மேம்பாட்டு ஆராய்ச்சிகளை செய்வதற்குத்தான். காடுகளிலுள்ள இயற்கை வளங்களை மனிதகுலத்திற்கான நலனிற்காக எப்படி பயன்படுத்துவது, அதன் விளைவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ளவே ஆராய்ச்சியில் ஈடுபடுகிறேன். நிலத்தை பல்வேறு பயிர்கள் பயிரிடுமாறு மாற்றி மாறிவரும் சூழல் சவால்களை எதிர்கொள்ள முயற்சித்து வருகிறோம் " என்கிறார் டாக்டர் கமல்ஜித்சிங் பாவா.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் 1939 ஆம் ஆண்டு பிறந்த கமல்ஜித் சிங் பாவா, 1967 ஆம் ஆண்டு சண்டிகரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் படிப்புகளை நிறைவு செய்தார்.

மரியா மூர்ஸ் மற்றும் சார்லஸ் புல்லார்டு உள்ளிட்ட ஃபெல்லோஷிப்களை ஹார்வர்டு பல்கலையில் பெற்ற கமல்ஜித், 1974 ஆம் ஆண்டு மசாசூசெட்ஸ் பல்கலையில் உயிரியல் துறையில் துணை பேராசிரியராக பணிக்கு சேர்ந்து 1981 ஆம் ஆண்டு பேராசிரியராக பணி உயர்வு பெற்றார். கின்னரெஸ் சூழல் விருது உள்ளிட்ட சர்வதேச விருதுகளை தனது சூழல் ஆராய்ச்சிகளுக்கு வென்றுள்ளார் கமல்ஜித் பாவா. 180 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பத்து நூல்களையும் சூழல் தொடர்பாக எழுதி வெளியிட்டுள்ளார்.


லின்னியன் சூழல் பரிசு!

உலகின் தொன்மையான லின்னியன் சொசைட்டி, சர்.ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித் என்பவரால் 1788 ஆம் ஆண்டு உருவானது. ஸ்வீடனைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி கார்ல் லின்னாயஸ் என்பவரே லின்னியன் என்ற பெயர் உருவாக காரணம். லின்னியன் தங்க மெடலிலும் முன்பக்கம் கார்ல் லின்னாயஸின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இயற்கை சூழல் சார்ந்த கட்டுரைகள், ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு 1888 ஆம் ஆண்டுமுதல் இச்சங்கம் நிதியளிப்பதோடு சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கு விருதும் வழங்குகிறது. ஆண்டுதோறும் மொத்தம் பதினொரு விருதுகள், ஐந்து ஆராய்ச்சி உதவித்தொகைகளை வழங்குகிறது லின்னியன் சொசைட்டி.