ஐவிஎஃப் அதிகரிப்பது ஏன்?
அதிகரிக்கும் சோதனைக்குழாய் குழந்தைகள்!
நொடிக்கு நொடி மாறும் வாழ்க்கை
முறை உணவு, டெக் நுட்பங்களால் நிகழ்கால வாழ்க்கை சுகம்தான். ஆனால் எதிர்கால தலைமுறைக்கு?
குழந்தைகளை இயற்கையாக பெற்றெடுக்கும் ஹார்மோன் வீரியம் மனிதர்களிடம் வீழ்ச்சியடைந்து
வருகிறது. காதல் ஹார்மோன் சுனாமியால் குழந்தைகள் உருவாவதை விட தற்போது ஆய்வகங்களில்
பாதுகாப்பாக உருவாகும் டெஸ்ட் ட்யூப் பேபிக்களே அதிகம். 15 சதவிகித இந்தியர்கள் இப்பிரச்னையில்
பாதிக்கப்பட்டாலும் சிகிச்சைக்கென வருவது 1 சதவிகித்தத்தினர்தான்.
கருத்தரித்தல் பிரச்னையில்
இந்தியாவில் மட்டும் 2 கோடிப்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இதன் அளவு 8 கோடி.
இந்தியாவின் முதல் சோதனைக்குழாய்
குழந்தை துர்கா, கொல்கத்தாவில் 1978 ஆம் ஆண்டு அக்.3 அன்று பிறந்தது. உலகிலேயே இரண்டாவது
சோதனைக்குழாய் குழந்தையான துர்காவின், மருத்துவ தந்தை டாக்டர் சுபாஷ் முகோபாத்தியாய.
அதிக காசு வாங்கினாலும் குழந்தையை கருச்சிதைவிலிருந்து காத்து தாயின் வயிற்றிலிருந்து
பிறக்கும்வரை மருத்துவர்கள் தீயாய் உழைத்தால்தான் ஐவிஎஃப் முறை எடுபடும். ஹார்மோன்
பிரச்னைகள், தாமதமான திருமணம், தொடர்ச்சியான கருச்சிதைவு, கருப்பை நீர்க்கட்டிகள்,
மன அழுத்தம், கருக்குழாய் சேதம் ஆகியவை சோதனைக்குழாய் குழந்தை உருவாக்கத்திற்கும்,
வளர்வதற்கும் முக்கிய தடைகள்.
பெண்ணின் கருப்பையிலிருந்து முதிர்ந்த
கருமுட்டைகளைப் பெற்று ஆய்வகத்தில் விந்தணுவை அதில் செலுத்துகின்றனர். கருவூட்டல் நிறைவுபெறும்
வரையில் அதனை இன்குபெட்டரில் வைத்து பராமரிக்கின்றனர். கரு உருவாகியபின்னர் பெண்ணின்
கருப்பையில் வைக்கப்படுகிறது. கண்காணிப்பில் மூன்று மாதங்கள் கடந்தால் குழந்தை வெற்றிகரமாக
பிறக்கும் என உறுதியாக நம்பும் மருத்துவர்கள் நமக்கு வாழ்த்துகள் கூறுவார்கள். அதேசமயம்
புற்றுநோய் பாதிப்புள்ளவர்களுக்கு முன்னரே கருமுட்டையை(விந்தணுக்களையும் கூட) உறையவைக்கும்
வசதி மூலம் குழந்தைப்பேற்றையும் அறிவியல் சாத்தியப்படுத்தியுள்ளது. குழந்தை பிறக்காததற்கு
பெண்களையே ஆண்கள் குற்றம்சாட்டினாலும் இப்பிரச்னையில் குழந்தைபேறு பிரச்னையில் ஆண்களின்
பங்கு 50%. ஐவிஎஃப் சிகிச்சை செலவு ரூ.75 ஆயிரம்- 2 லட்சம் வரையில் எகிறுவதால் இம்முறையை
தேர்ந்தெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 20%. இந்தியாவின் எட்டு பெருநகரங்களில் நடைபெறும்
55 சதவிகித ஐவிஎஃப் சிகிச்சையை நாட்டிலுள்ள 700 முதல் 1000 கருத்தரித்தல் வல்லுநர்கள்
செய்துவருகின்றனர்.
முதல் மற்றும் இரண்டாம்நிலை நகரங்களில்
வேகமெடுக்கும் சோதனைக்குழாய் சிகிச்சை மருத்துவமனைகளால் வெளிநாட்டினரின் மருத்துவச்சுற்றுலா
அதிகரித்துள்ளது மகிழ்ச்சி தரும் செய்தி. ஆனால் இம்மருத்துவமனைகள் பெரும்பாலும் இந்திய
விதிகளை கைவிட்டு இங்கிலாந்தின் HEFA ஆணைய விதிமுறைகளையே பின்பற்றுகின்றனர். 2020 ஆம்
ஆண்டில் 20 சதவிகித வளர்ச்சி பெறும் துறை என மருத்துவ வட்டாரங்கள் ஆரூடம் கூறியுள்ளன.
மழலையின் மகத்துவம் இதுதான்.
நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்