அமானுஷ்யத்தை அள்ளிவழங்கும் தேவமோகினி!- கோட்டயம் புஷ்பநாத் ஸ்பெஷல்
தேவமோகினி
கோட்டயம் புஷ்பநாத்
தமிழில் சிவன்
கேரளத்தின் பழமையான கோவிலகம் அது. நம்பூதிரிகள் வாழ்ந்த இடம். பாழ்பட்டு கிடக்கிறது. அதனை சந்திரமோகன் என்பவர் காசுகொடுத்து வாங்குகிறார். பல்வேறு இடங்களிலுள்ள கோவிலக சிலைகளை கொண்டு வந்து வீட்டில் கண்காட்சி போல அடுக்குகிறார். அப்போது அதன் கொடுமையான விளைவுகள் அவருக்கு தெரியவில்லை. ஆனால் பின்னர், தெரியவரும்போது அவற்றைக் காக்கும் பெரும் பொறுப்பு வந்து சேருகிறது. அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை.
முதல் அத்தியாயம் முதலே பரபரப்பு தொடங்கிவிடுகிறது. சந்திரமோகன், அமைதியாக வாழ விரும்புபவர். ஆனால் அங்குள்ள ராஜசேகரன் உள்ளிட்டோருக்கு அவர் புகழ்பெறுவது பிடிக்கவில்லை. எனவே, கிரகப்பிரவேசத்திற்கு அழைப்பிதழ் வழங்காத அவரை அங்கேயே கொல்ல நினைக்கிறார்கள். அந்த திட்டத்தை எளிமையாக தடுக்கிறாள் அங்கு வசிக்கும் தேவ மோகினி. இவள் மட்டுமல்ல அங்கு வசிப்பது.
சந்திரமோகனின் உயிரைப் பறிக்கும் வேகம் கொண்ட பைசாச சக்திகளை மிக எளிதாக விலக்கிக் காக்கிறது அங்குள்ள சில சக்திகள். அவை ஏன் அப்படிச் செய்கின்றன? அதன் பின்னாலுள்ள ரகசியங்கள் என படித்தால் கதை முடிந்துவிடும். அதற்குள் பத்ரன் நம்பூதிரி, அம்பிகாதேவி எனும் முன்னூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இளவரசி, ருத்ர மூர்த்தி, கொலைகள், அரசியல், காதல், காமம் என உள்ளே வரும் ஏராளமான சமாச்சாரங்கள் படிக்க ருசிகரமாக இருக்கின்றன.
தமிழில் மொழிபெயர்த்த சிவனின் மொழிவளம் அருமை. எளிமையாக எழுதியிருக்கிறார். திணறல் இன்றி வாசித்துச்செல்ல முடிகிறது.
- கோமாளிமேடை டீம்