தீவிரவாதிகளை கருவறுத்து பணயக்கைதியை மீட்கும் மாடஸ்தியின் குழு! - கானகத்தில் கண்ணாமூச்சி
கானகத்தில் கண்ணாமூச்சி
முத்து காமிக்ஸ்
விலை. 2.50
லேடி மாடஸ்தி, வில்லி கார்வின்
இணைந்து கலக்கியுள்ள காமிக்ஸ்.
வில்லி கார்வின் மாடஸ்தியின்
சொல்படி தன் நண்பருடன் உல்லாச சுற்றுலா சென்றிருக்கிறார். மாடஸ்தி கௌரேம்போ எனும் சிறிய
நாட்டில் இருக்கிறார். அவரது நண்பரின் பெண் தோழி டயானா, பிரிட்டிஷ் தூதரின் மகள்.
எப்போதும் சூழ்நிலையைப்
புரிந்துகொள்ளாமல் உளறி வைத்து எரிச்சல் படுத்தும் குணம் கொண்டவள். அவளை அந்நாட்டு
தீவிரவாதிகள் பணயக் கைதியாக பிடித்துக்கொண்டு போய்விடுகிறார்கள். எப்படி நாட்டின் அதிபரின்
துணையுடன் மாடஸ்தியும், வில்லி கார்வினும் அப்பெண்ணை மீட்கிறார்கள் என்பதே கதை.
கறுப்பு வெள்ளை காமிக்ஸிலும்
மாடஸ்தியின் கவர்ச்சிகரமான உடைகளும், உடலும் மயக்குகிறது. இங்கிதமாக நடந்துகொள்ளும்
அவரது தன்மை பல்வேறு ஆண்களை அவரைச் சுற்றிவரச்செய்கிறது. அந்நாட்டில் முன்னமே ரவுடிகளை
வைத்து தனி குழுவை இயக்கி வந்த மாடஸ்தியை திடீரென அதிபர் சந்திக்கும்போதே நிச்சயம்
அதிபரைச் சுற்றித்தான் கதை திரும்ப போகிறது என ஊகிக்க முடிகிறது. தீவிரவாதிகள் ஆணவக்காரியான
டயானாவை கடத்தியவுடன் ஏறத்தாழ அவர்கள் அதிபரை மிரட்டுவார்கள் என்பது தெரிந்துவிடுகிறது.
இதில் திருப்பம், மாடஸ்தியும் வில்லி கார்வினும் எப்படி தீவிரவாதகளை திட்டம் போட்டு
வீழ்த்துகிறார்கள் என்பதுதான். அதிக சண்டைக் காட்சிகள் இல்லை. தீவிரவாதிகள் தலைவன்
கோமேஸ் மிகவும் பலவீனமாக திட்டம் போடுவதால் அனைத்தும் மாடஸ்தியின் கைக்கு வந்துவிடுகிறது.
கதை, ஓவியம் ஸ்டைலீஷாக இருக்கிறது. படிக்க பெரிய சுவாரசியம் இல்லைதான். படங்களை நேர்த்தியாக
வரைந்திருக்கிறார்கள்.
மரணப்பாலம்
பத்தொன்பதாம் நூற்றாண்டு
இந்தியாவில் மூடநம்பிக்கைகள் நிறைந்த வட இந்தியாவில் நடைபெறும் கதை. அங்கு கிராண்ட்
என்ற பொறியாளர் பாலம் ஒன்றை அமைக்க முயல்கிறார். அது தங்கள் தெய்வத்திற்கு ஆபத்தானது
என்று அங்குள்ள தக்ஸ் எனும் இனத்தார் செய்யும் வஞ்சனைகள், இடைஞ்சல்கள்தான் கதை. அதை
எப்படி முறியடித்து கிராண்ட் பாலத்தை கட்டுகிறார் என்பது இறுதிப்பகுதி.
இந்தியாவில் ஆக்கிரமிப்புகளை
அரசு அகற்றாமலிருக்க அங்கு சாமி சிலையைக் கொண்டு வந்து வைத்துவிட்டால் போதும். அதை
அகற்ற அரசு வந்தால் உடனே பிற்போக்கு உதிரி அமைப்புகளாக ஆர்எஸ்எஸ் உதிரிகள் வந்து நிற்கும்.
ஆக்கிரமிப்புகள் அப்படியே தொடரும். மக்கள் நடைபாதையில் நடக்க முடியாமல் சாலையில் நடக்கும்படி
ஆகும்.
இங்கும் அப்படித்தான். நீர்வீழ்ச்சிஅருகே
உள்ள தங்களது கோவில் பாதிக்கப்படும் என தக்ஸ் கொள்ளைக்கூட்டம் பயப்படுகிறது. இதனால்
பாலம் அமைக்கும் பொறியியலாளரின் திட்டத்தை தகர்க்க பேய், பிசாசு, நரபலி என மூடநம்பிக்கை
திட்டத்தை உருவாக்குகிறது. இதனை கிராண்ட் எப்படி உறுதியுடன் சமாளித்து வெல்கிறார் என்பதே
இந்த காமிக்ஸ் கதை.
கருத்துகள்
கருத்துரையிடுக