திருடர்களுடன் கைகோத்து நாட்டை வல்லரசாக்குவோம் மக்களே! - பன் பட்டர் ஜாம்

 

 

 

 

 

 

 

 

 



அன்புள்ள மெகந்தியா மக்களே!

அனைவருக்கும் வணக்கம். அனைவரும் நோய்த்தொற்று பரவிய சூழலிலும் வரி கட்டி வந்தீர்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்போதுதானே, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும். அரசு ஊதியம் ஆண்டுதோறும் உயர்ந்து வந்தது கடந்த காலம். இனிமேல் ஆண்டுதோறும் அவர்களின் சம்பளம் குறைக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு மக்கள் சேவகர்கள் என்ற இயல்பு பழக்கமாகும். அரசு இயந்திரங்கள் ஊழல் செய்வதில் முன்னிலை வகிப்பதாக உலக அமைப்புகள் தனியாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

எனவே இப்படி சம்பாதிக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகம் கூட்டிக் கொடுப்பது எந்த நலனையும் ஏற்படுத்தாது. எனவே, அவர்கள் தங்கள் சாமர்த்தியத்தை மக்களிடம் காட்டி பணத்தைப் பெறட்டும். இதனை அரசு மனப்பூர்வமாக ஏற்கிறது. ஆனால் அவர்கள் ஒரு லட்சம் சம்பாதித்தால் இரண்டாயிரம் ரூபாயை உறுதியாக வரியாக கட்டவேண்டும். அப்போதுதான் அரசு அவர்களைப் பாதுகாக்கும். அரசு சேவைகள் அனைத்தும் மக்களுக்கானவை. ஆனால் அனைத்தும் கட்டண சேவை என்பதை இனி உணர்ந்துகொள்வது அவசியம். அப்போதுதான், இந்த ரோதனைக்கு நாமே உழைத்து தேவையானதை செய்துகொள்ளலாம் என அவர்கள் நினைப்பார்கள். அரசு ஊழியர்கள் அதிகம் சம்பாதித்து அரசுக்கு வரிகட்டாமல் இருந்தால், அதனைப் பற்றி புகாரின் பேரில் அரசு நடவடிக்கை எடுக்கும். புகார் கொடுப்பவர்களுக்கு காவல் நாய் என்ற வெண்கல பட்டயத்தை அரசு வழங்கும். கூடவே நேர்மையால் நேரும் குத சூட்டைப்போக்க செக்கு விளக்கெண்ணெய் 250மி.லி. சாஷேவும் அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை மொந்தா எனும் எனது தாய்மொழி வழிகாட்டி ஏடும் கூடுதலாக வழங்கப்படும்.

நம் நாட்டை அயல்நாட்டு கொள்ளையர்களிடமிருந்து விடுவித்து மெகந்தியா நாட்டு கொள்ளையர்களிடம் ஒப்படைத்த ஜூனத் இதைப்பற்றி தனது நூலில் எழுதியுள்ளார். பிறரை வருத்தி உனது கடமையை செய்ய வைத்து பயனை அறுவடை செய் என. அவரது வாக்கை நாம் நூல்களில் அச்சிட்டுள்ளோம். அவரது வார்த்தைகளை நாட்டின் அதிபரான நான் இதயத்தசையில் டாட்டூவ்வாக பதித்துள்ளேன். எனவே யாரும் எங்களுக்கு முன்னதாகவே மக்களை ஏமாற்றமுடியாது. நாங்கள்தான் அதில் முதல்வனாக இருப்போம்.

இப்போது என் கவனத்திற்கு சில செய்திகள் வந்துள்ளன. எனது மாநிலங்களில் சிலைகள் பல, திருட்டு போயுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இப்படி விலையுயர்ந்த சிலைகள் இருப்பது எனக்கு இப்போதுதான் தெரிய வந்துள்ளது. முன்னமே தெரிந்தால், இதற்கென தனி அமைப்பை உருவாக்கி நல்ல விலைக்கு விற்றிருபேன். ஆனால் அதற்குள் அந்த சிலைகளை வெளிநாட்டிற்கு விற்ற திருடர்களை நான் பாராட்டுகிறேன். எங்களுக்கு முன்னதாகவே யோசித்து திட்டத்தை வேகமாக செயல்படுத்தியிருக்கிறார்கள். இதிலும் அரசுக்கு கட்டும் கமிஷன் அதாவது வரி தடைபட்டுவிட்டது. இப்படி முன்னோடியான ஐடியாக்களை எனது அதிபர் அலுவலகக்குழுதான் கூறியிருக்கவேண்டும். ஆனால் பியூசிஎஸ் படித்தும் கூட இதுபோல திருட்டுதொழிலை எப்படி செய்வது என இந்த முட்டாள்களுக்கு தெரியவில்லை. எனவே, இவர்களின் ஒரு வார சம்பளத்தை என் கேர் திட்ட கணக்கிற்கு திருப்பிவிட உத்தரவிட்டுள்ளேன்.

வரியை முறையாக கட்டாததால் திருடர்களுக்கு தினமும் ஒருவேளை பார்லி கஞ்சியைத் தர உத்தரவிடுகிறேன். இப்படியொரு அருமையான ஐடியாவை செயல்படுத்தியதற்காக இவர்களின் நெட்வொர்க்கை அரசு கையகப்படுத்தி இவர்களுடன் இயங்கவிருக்கிறது. இதன் மூலம் அரசுக்கு கோவில்களில் உள்ள விக்ரகங்கள் மூலம் நிறைய பணம் கிடைக்கும். இவை வைத்து நாட்டில் நிறைய கஞ்சித் தொட்டிகளைத் திறக்க முடியும். அதில் உணவுக்காக மிருகங்களும் மனிதர்களும் முட்டி மோதுவதைப் பார்க்கவே சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்.

இந்த நேரத்தில் ஜூரைன் நாட்டில் வேறு  போர் தொடங்கியுள்ளது. எனது நண்பரும், ஆயுதவியாபார நாடுமான பூனியன் தான் ஜூரைனைத்  தாக்கியுள்ளது. இதற்கு நாம் என்ன கருத்தை தெரிவிப்பது. தயாரித்த ஆயுதங்கள் வேலை செய்வதா என சோதித்து பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்,. இதிலென்ன தப்பு இருக்கிறது? நாமும் கூட இப்படி நிறைய ஆயுதங்களை காட்டிலுள்ள பழங்குடிகள்  மீது குறிப்பிட்ட இடைவெளியில் பயன்படுத்தித்தானே அதனை மெருகேற்றுகிறோம். இந்த நேரத்தில் ஜூரைன் நாட்டில் மெகந்தியா நாட்டு மாணவர்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் நலமோடு இருக்க அவரவர் சாதி, இனத்தின் குல தெய்வம் பற்றிய தகவல்களை சேகரிக்கச் சொல்லியிருக்கிறேன். இதன்மூலம் நாம் செய்ய முடிந்த எளிய காரியமாக பிரார்த்தனை செய்யலாம். இதுதான் எனது அதிகபட்ச செயல்பாடும் முயற்சியும் கூட. கூடுதலாக பக்தி இதழ்கள் முங்கா நீரை வாசகர்களுக்கு தருவதைப் போல, நான் மாட்டின் மூத்திரத்தை சிறப்பாக சாஷே அடித்து விமானம் வழியாக அனுப்பி வைக்க நினைக்கிறேன்.

 ஜூரைன் நாட்டிலுள்ள நமது அரசின் அடிமை உழைப்பு அலுவலகத்தினர், தொடர்பு கொண்டனர். மெகந்தியாவுக்கு மாணவ்ர்கள் வர நினைக்கிறார்களாம். அதற்கு அவர்கள் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். முடியுமா? அவர்கள் வரவேண்டுமானால், நம் முன்னோடி தலைவர் ஜூனத் போல நடந்து வர சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.

மெகந்தியாவை விட்டு சென்று மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடலாம் என்று சென்றவர்கள், நாட்டிற்கு அவசியமில்லை. உழைப்பவர்கள் அனைவரும் வரி கட்டவேண்டுமென்று சொன்னதை ஏற்காத துரோகிகள் அவர்கள். குறைந்தபட்ச மனிதநேயமாக, எனது அரசு அண்மையில் அதிக விலைக்கு விற்ற விமான நிறுவன சேவை வழியாக, மார்க்ககெட்டுகளில் குப்பையாக சேகரிக்கப்பட்ட பூக்களை அனுப்பி வைக்க நினைக்கிறேன். இந்த பூக்களை எனது அன்பு பரிசாக அங்குள்ள மெகந்தியா நண்பர்கள் பெறட்டும். இவர்களுக்கு என்னால் இந்தளவுக்கு கருணை காட்ட மனம் இசைகிறது. பூனியன் நாட்டைப் பொறுத்தவரை ஆறு பொய்கள், நான்கு உண்மைகள் என்றுதான் வியாபாரம் செய்து வந்திருக்கிறோம். அதைத் தாண்டி, பூனியனின் வலிமைக்கு முன்னாடி மெகந்தியா சாதாரணம். ஏற்கெனவே அவர்களின் எனது காலை தலையில் வைத்தனர். நானும் விசுவாசமாக இருப்பேன் என நாக்கை வெளியே எந்தளவு முடியுமோ நீட்டி மூச்சு விட்டு காட்டி சத்தியம் செய்துள்ளேன். எனவே, ஜூரைன் அழிந்தாலும் சரி என்னால் அதனை பெரிய தலைவர் எனும் ரியாலிட்டி நிகழ்ச்சி போல வேடிக்கைதான் பார்க்க முடியும். வேறு எதையும் செய்ய முடியாது. வேண்டுமானால் பூனியன் நிறுவன டிவி சேனல்களை ஒருவாரத்திற்கு மக்கள் பார்க்க கூடாது என உத்தரவிடுகிறேன். கைனா நாட்டினர் என்னுடைய மாநிலத்தை ஆக்கிரமித்தபோதும் கூட அவர்கள் நாட்டு ஆபாச தளங்களை நம் நாட்டு மக்கள் பார்க்க முடியாதபடி ஒரு வாரம் தடுத்தது நினைவிருக்கும் என நினைக்கிறேன். இதனை நான் விபிஎன் வழி பார்த்தது தனிக்கதை. இதுபோல கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிரி நாடுகளுக்கு சரியான பதிலடி கொடுக்கமுடியும். எனவே மக்களும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து விளக்கேற்றி மெகந்தியா வாழ்க என்று சொல்ல வேண்டும். காலை ஒருமுறை, மாலை ஒருமுறை என இப்படி செய்யவேண்டும். மேலும் நாட்டை முன்னேற்ற நிறைய விஷயங்களை நான் வைத்திருக்கிறேன். அதனை கழிவறையில் உட்கார்ந்து முக்கும்போது கண்டுபிடித்தேன். அடுத்தமுறை அதனைப் பற்றி பேசுகிறேன். வாழ்க மெகந்தியா, வளமுடன்  என் நண்பர்கள் ....



பன் பட்டர் ஜாம் 

பின்டிரெஸ்ட்

 




 



 

கருத்துகள்