பள்ளிக்கு செய்யும் நன்றிக்கடன்! - கடிதங்கள் - வினோத் பாலுச்சாமி
கடிதங்கள்
வினோத் பாலுச்சாமி
அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
சென்னையில் மழை வருவது போலவே சூழல் உள்ளது. நாள் தங்கியுள்ள அறை முழுவதும் மழை ஈரத்தால் நனைந்துவிட்டது. இதனால், அறையின் சுவர்களில் பூஞ்சைகள் கரும்பச்சை நிற பூக்களாய் பூக்கத் தொடங்கிவிட்டது. அருகர்களின் பாதை - ஜெயமோகன் இன்றுதான் படித்து முடித்தேன். சமணர்களின் வாழ்க்கை , வரலாறு, உணவு, தர்மச்சாலை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். ஆரியர், பாஜக, தேசியவாதம் தவிர்த்த பிற விஷயங்கள் நன்றாக உள்ளன.
எங்கள் இதழின் தயாரிப்பு இன்னும் தொடங்கவில்லை. பல்வேறு சூழல்களால் வேலை தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. வேலையை செய்வதற்குள் எனக்கு இன்னொரு வயது கூடிவிடுமோ என்று பயமாக உள்ளது. நான் தங்களுக்கு அனுப்பி வைத்த ஜென் கதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறேன். நான் பரிசாக முதல்முறையாக உங்களுக்குத்தான் நூலை அனுப்பி வைத்திருக்கிறேன். இப்படி அனுப்புவது பற்றி முதலில் நம்பிக்கை வரவேயில்லை.
குளங்களை தூர்வாரிய செல்ல பெருமாள் பற்றிய செய்தியை ஆனந்த விகடனில் படித்தேன். நல்லவேளை, அவர் தனது பணிக்கு ஊக்கம் தந்தது குக்கூ அமைப்புதான் என்று கூறவில்லை. ஆச்சரியம்தான். நல்ல விஷயங்களை அகத்தூண்டுதல் மூலமும் சிலர் செய்து வருகிறார்கள்தான்.
நன்றி!
அன்பரசு
13.11.2021
2
அன்புள்ள வினோத் அண்ணாவிற்கு, வணக்கம்.
நலமா? எங்கள் இதழ் வரும் ஜனவரி 3 முதல் தொடங்குகிறது என கூறியிருக்கிறார்கள். இன்னும் எழுத்து வேலைகள் முடியவில்லை. வேகமாக வேலை செய்து வருகிறேன். ஒருங்கிணைப்பாளராக இருந்து இப்போது பக்க பொறுப்பாளராக மாறியிருக்கிறேன். எனவே, பிரஷர் அதிகம்.
ஈரோட்டிலுள்ள நான் படித்த நடுநிலைப்பள்ளிக்கு, துளிர் எனும் அறிவியல் இதழ் சந்தாவைக் கட்டினேன். இது ஒருவித நன்றியுணர்வினால் செய்யப்படுவது. அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் யாரேனும் ஒருவரேனும் இதழைப் படித்து அறிவியல் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே எனது சுயநலமான பேராசை. கனி விளையும் வரை விதைகளை விதையுங்கள் என்று இயேசு தனது பழைய ஏற்பாட்டில் கூறுவார். அதுபோல பயணிக்க வேண்டியதுதான். மாநாடு படம் பார்த்தேன். சிம்புவை வைத்து இப்படி ஒரு சோதனைரீதியான படம் எடுப்பது கடினம்தான். நன்றி!
அன்பரசு
16.12.2021
----------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக