கல்லூரியில் தொழில் தொடங்கிய நம்பிக்கை தரும் இளைஞர்களின் கதைகள்! - ரஷ்மி பன்சல்- எழுந்திரு விழித்திரு
எழுந்திரு விழித்திரு
ரஷ்மி பன்சல்
வெஸ்ட்லேண்ட் பதிப்பகம்
இது தொழில்முனைவோர்கள் பற்றிய நூல். நூலில் பிராக்டோ நிறுவனம் முதல், புக்கட் எனும் உணவு நிறுவனம் வரையில் நிறைய இளைஞர்களின் கனவு தொழில்களை விளக்கியுள்ளார் ஆசிரியர்.
ரஷ்மி பன்சலின் எழுத்துமுறை, கனெக்டிங் டாட்ஸ் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை ஒத்துள்ளது. தொழிலதிபர்கள் பற்றிய சுவாரசிய ஒருபக்க அறிமுகத்தை தொடர்ந்து அவர்களின் கனவுத்தொழிலைப் பற்றிப் பேசுகிறார்.
இந்த முறை படிக்க சுவாரசியமாக இருக்கிறது. தொடக்க தொழில்கதையான பிராக்டோ உண்மையில் இன்றைய வேலை, சுயதொழில் ஆகியவற்றுக்கு இடையில் அல்லாடும் இளைஞர்களை சிறப்பாக பிரதிபலிக்கிறது. இப்போதே கிடைக்கும் வேலைக்கு செல்வதா அல்லது காத்திருந்து சுயதொழிலுக்கான வாய்ப்புகளை தேடுவதா என அலைபாயும் இடம் முக்கியமானது. இன்று பிராக்டோ நிறுவனம் சிறப்பாக வளர்ச்சி அடைந்துவருகிறது. இதுவே அவர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, வளர்ச்சிக்கு சான்று.
இதில் நடைமுறையாக இல்லாத விஷயங்களை செய்து பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடிக்கும் இளைஞர்களின் கதைகள் நிறைந்துள்ளன. தோசாமேட்டிக் நிறுவனம் அப்படிப்பட்ட ஒன்று. இதன் அமைப்புப்படி தோசை மாவு, தண்ணீர் ஆகியவற்றை சரியாக உள்ளீடு கொடுத்தால், தோசையை சுட்டுத்தந்துவிடும். ஆச்சரியமான கண்டுபிடிப்பு இது. ஹோட்டல்களில் தோசையின் விலை கூடுவது பற்றி யோசித்து இளைஞர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இன்னொரு வியப்பான தொழில்முயற்சியாக, கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான விடுதிகளை அமைத்துத் தருவதைக் கூறலாம். இதனை பலரும் அனுபவப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கான தீர்வை எத்தனை பேர் தேடியிருப்போம். ஆனால் விடுதியைத் தொடங்கிய தொழில்முனைவோர் இதனை சாதித்திருக்கிறார். இவர் மட்டுமல்ல நூலில் உள்ள இளைஞர்கள் பலரும் கல்லூரியில் படிக்கும்போதே தொழில்களை தொடங்கி பின்னர் அப்படியே வளர்த்து சென்றுள்ளனர்.
இதற்கு நிறைய முக்கியமான காரணங்களை அவர்கள் சொல்லுகிறார்கள். படிக்கும்போது பெற்றோரின் ஆதரவு இருக்கும். நிதி தேவையை ஓரளவு சமாளிக்கலாம். அப்போது உங்களுக்கு கல்லூரி, பல்கலைக்கழகத்தில் தொழில்சார்ந்த உதவி, வழிகாட்டுதல்களை பெறலாம். படிப்பு முடிந்து வேலை தேடும் மேற்படிப்பு படிக்கும் நேரத்தில் சுயதொழில் தொடங்கி அதற்கு உழைப்பது கடினமானது. மேலும் முப்பது வயதிற்கு மேல் திருமணம் ஆகியிருக்கும். அதற்கான பொறுப்புகள் தோளில் கவிழும்போது ஒருவரால் தொழிலில் கவனமாக செயல்படுவது மிகவும் சவாலானது. இதை பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் நூலில் சொல்லியிருக்கிறார்கள்.
சுயதொழில் தொடங்க நினைப்பவர்கள் உறுதியாக ரஷ்மி பன்சலின் நூலை வாங்கிப் படிக்கலாம். ஆசிரியர் உங்கள் கனவை எப்படி சாதிக்கலாம். சவால்கள் என்ன என்பதை பல்வேறு தொழில்முனைவோர்களின் கதை வழியாக விளக்கியுள்ளார். நூலை எடுத்தால் வேகமாகவும் ஆர்வமாகவும் படிக்கலாம் என்ற இயல்பு முக்கியமானது.
நம்பிக்கை வழிகாட்டும் தொழில்முனைவு நூல்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக