பொருளாதாரத்தை கிரிப்டோ கரன்சி ஆளும்! - இங்கிலாந்து கவர்னர் யூகம்!
அமெரிக்க அரசின் டாலர் என்பது வர்த்தக பொருள் என்பதோடு அரசியல் அதிகாரமாகவும் உள்ளது. ரூபாயில் வர்த்தகம் செய்யும்போது, இந்தியாவுக்கு கிடைக்கும் லாபம் டாலரில் வணிகம் செய்யும்போது கிடைப்பதில்லை. ஆனால் அதை கைவிட முடியாத தற்கு காரணம், அமெரிக்க மீதான பயம்தான். இதில் முஸ்லீம் நாடுகள், மிக தைரியமாக அமெரிக்காவை எதிர்க்கின்றன. காரணம், அங்கு நிறைந்துள்ள எண்ணெய் வளம், பொருளாதார பலம்தான்.
டாலர், பௌண்டுகளுக்கு மாற்றாக டிஜிட்டல் பரிமாற்றத்தில் கிரிப்டோ கரன்சிகள் வந்தபின் அனைத்தும் மாறியுள்ளன. குறிப்பிட்ட பணத்தை வணிகத்தில் பயன்படுத்தவேண்டும் என்ற நிர்பந்தம் இனி இல்லை.
தற்போதைய பாங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னர் மார்க் கார்னி, எதிர்காலத்தில் ஃபேஸ்புக்கின் லிப்ரா போன்ற விர்ச்சுவல் கரன்சிதான் உலகை ஆளும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இன்றுவரை வெளிநாட்டு வர்த்தகத்தில் டாலர் மட்டுமே ஏகபோகமாக உள்ளது. 1944 ஆம் ஆண்டு பிரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தப்படி டாலர் உலகின் சக்திவாய்ந்த கரன்சியாக மாறியது. இதன் மதிப்பை தக்க வைத்து அரசியல் காய் நகர்த்தி முதன்மையான நாடாக மாறியது அமெரிக்கா.
இன்று உலகம் முழுக்க பல்வேறு நாடுகளும் சேகரித்து வைத்துள்ள டாலர்களின் மதிப்பு 62 சதவீதமாகும் என்று நடப்பு நிதியாண்டின் காலாண்டு கணக்கு சொல்கிறது உலக நிதி கண்காணிப்பகம். அமெரிக்காவில் நடைபெறும் மாற்றங்கள், அதன் பொருளாதாரத்தோடு நேரடியாக தொடர்பில்லாத நாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்று வங்கி மாநாட்டில் பேசியுள்ளார் கார்னி.
பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் வந்தாலும், சந்தைக்கு ஏற்றபடி டாலர் எப்படியோ சமாளித்து வருகிறது. ஆனால் இது எவ்வளவு நாளைக்கு என்று தெரியவில்லை. சீனா, கடன் பட்டாலும் எதிர்காலத்தில் அதன் கடன் சுமையைக் குறைத்துக்கொள்ளும காலனி நாடுகளை உருவாக்கியபடி பயணித்து வருகிறது. சீனாவின் யுவான், விரைவில் சந்தையில் ஆட்சி செய்யும். இப்போதும் இந்தியா உலகச்சந்தையில் பம்மினால் ரூபாய் வணிகத்திலிருந்து ஒழிந்துவிடும். நமது ரூபாய் மதிப்பில் வியாபாரம் செய்வதற்கான முயற்சிகளை முடுக்குவதே, டாலர் ஏற்ற இறக்கங்களிலிருந்து நம் பொருளாதாரத்தைக் காத்துக்கொள்ளும் வழி.