ஓடுக்கப்பட்டோருக்கான உரிமைக்குரல்! - லாங்டன் ஹியூஸ்!

20 LGBTQ+ People Who Changed the World

மாற்றுப்பாலின சாதனையாளர்கள்

கவிஞர் லாங்டன் ஹியூஸ்

அமெரிக்காவில் மிசோரியில் 1902 ஆம் ஆண்டு பிறந்தார் ஹியூஸ். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கைத தொடர்பான கவிதைகள், கட்டுரைகள், நாளிதழ் பத்திகள் எழுதியுள்ளார்.

இவர் பிறந்ததும் கணவரை விட்டு தாய் பிரிந்து கிளீவ்லாந்து வந்தார். அங்கு அவரின் பாட்டியுடன் சேர்ந்து வசிக்கத்தொடங்கினார். ஆற்றைப் பற்றி பேசும் நீக்ரோ என்ற கவிதையை பள்ளிப்பருவத்தில் எழுதினார். அது பிரசுரமாகவே எழுத்து பற்றிய நம்பிக்கையைப் பெற்றார். 1921 ஆம் ஆண்டு தி கிரிசிஸ் என்ற பத்திரிகையில் அக்கவிதை பிரசுரமானது. பின்னர், கவிதைகளை தொடர்ந்து  எழுதிக்கொண்டிருந்தவருக்கு 1925 ஆம் ஆண்டு ஆப்பர்சூனிட்டி இதழின் பரிசும் கிடைத்தது. அதோடு இரு நண்பர்களான அர்னா, வெச்டன் ஆகியோரின் நட்பும் கிடைத்தது. இவர்களின் நட்பு வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்தது. பல்கலைக்கழக படிப்புக்காக வந்தவருக்கு ஹார்லேம் நகருடன் நீடித்த தொடர்பு ஏற்பட்டது. இருள் நகரம் என்று அதனை எப்போதும் குறிப்பிடுவது ஹியூஸின் பாணி.

1926,27 ஆண்டுகளில் தி நேஷன் உள்ளிட்ட பத்திரிகைகளில் சிறந்த ஆப்பிரிக்க அமெரிக்க கவிஞராக பாராட்டு பெற்றுவிட்டார். அப்போது லிங்கன் பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித்தொகை கிடைக்க, அதைப்பெற்று படித்தார். இலக்கியம், கட்டுரைகள், சிறுகதைகள் என பலவற்றிலும் சாதித்தவர் ஹியூஸ். தான் இறக்கும் வரை கவிதைகளை எழுதி வந்தார். அரசியல் கட்டுரைகளில் ஜெஸ்ஸி பி செம்பிள் என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கினார். இந்த கதாபாத்திரம் கொண்ட கட்டுரைகளை சிகாகோ டிபெண்டர், நியூயார்க் போஸ்ட் ஆகிய நாளிதழ்கள் வெளியிட்டன. பின்னர் இவை கட்டுரைத்தொகுப்பாக வெளியிடப்பட்டன.

பல சர்ச்சைகள் இவரது படைப்பு பற்றி எழுந்தாலும் ஜாஸ் கவிதைகள் என்பதை உருவாக்கியது இவர்தான். ஜாஸ் இசையைப் போன்ற லயத்துடன் இவரது கவிதைகளை வாசிக்கலாம். 1967 ஆம் ஆண்டு மறைந்தவரை இன்றும் அவர் எழுதிய கவிதைகள் நினைவுபடுத்துகின்றன. ஒடுக்கப்பட்டோர், புறக்கணிப்பட்டோருக்காக இயல்பாக சமரசமற்று எழுந்த கவிஞரின் குரலாக ஹியூஸ் என்றும் நினைவுகூரப்படுவார்.

நன்றி: அவுட்.காம்

தமிழில்: வின்சென்ட் காபோ