பெண் குழந்தைகளின் உருவாக்கத்தைத் தவிர்க்கும் ஜப்பான் ஆராய்ச்சி!



Water, Play, Kids, Youth, Children, Happy, Girl, Fun






பிறக்கும் குழந்தைகளை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்!

செய்தி: மரபணுக்களை மருத்துவர்கள் கணித்து, ஆண், பெண் குழந்தைகளைத் தீர்மானிக்கும் திறனைப் பெற்றுள்ளனர்.இது சமூகத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஜப்பானில் உள்ள ஹிரோசிமா பல்கலைக்கழகத்தில் மசயுகி சிமடா  தலைமையிலான ஆராய்ச்சிக்குழுவினரின் ஆராய்ச்சி இதுவே. ஆணின் விந்தணுக்களில் எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்கள் உண்டு. இவற்றில் எக்ஸ் குரோமோசோம்கள் கருப்பைக்குள் செல்வதைத் தாமதப்படுத்தினால் பெண் குழந்தைகளின் பிறப்பைத் தடுக்கலாம். இதன் விளைவாக, ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த ஆராய்ச்சிதான் மருத்துவ வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.

விந்தணுக்களில் சராசரியாக ஐநூறுக்கும் மேற்பட்ட மரபணுக்கள் உள்ளன. விந்தணு செல்களை கருப்பைக்குள் நடத்திச்செல்வது இதன் அடித்தளத்திலுள்ள பதினெட்டு புரதங்கள் ஆகும். இவற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, குழந்தைகளின் பிறப்பை மாற்றலாம் என்பது புதிய கண்டுபிடிப்பு. “இந்த கண்டுபிடிப்பு  சமூகத்தின் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனை ஒருவர் தன் படுக்கையறையில் கூட செய்யலாம் என்பதால் இதன் விளைவுகளை அரசு உட்பட எந்த அமைப்பும் தடுக்க முடியாது.” என்கிறார் எஸ்டோனியாவைச் சேர்ந்த தார்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அலிரெசா பசெலி.

 மேற்கண்ட கண்டுபிடிப்பு மூலம் 90 சதவீதம் ஆண்குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. பெண்களின் பிறப்பு இதன் மூலம் 81 சதவீதம் குறையலாம். தற்போது பண்ணைகளிலுள்ள பன்றிகளின் மீது சோதிக்கப்பட்டு வெற்றியடைந்துள்ள முறை விரைவில் மனிதர்களின் மீதும் சோதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பாலுறவுக்கு முன்னர் புரதங்களின் வேகத்தை தாமதப்படுத்தும் ஜெல் அல்லது க்ரீமைப் பயன்படுத்தத் தொடங்குவது பரவலாக நடைபெற வாய்ப்புள்ளது. ”இது, ஆண், பெண் விகித மாறுபாடு கொண்ட நாடுகளில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்” என்கிறார் நெதர்லாந்தின் மாஸ்ட்ரிச்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரிவேதியியலாளர் வைபோ டான்டார்ப்.

பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவதை இங்கிலாந்து,சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் சட்டம் இயற்றித் தடுத்து வருகின்றன. பிறநாடுகளில் இச்சோதனைக்குத்  தடையில்லை. ஃப்ளோ சைடோமெட்ரி எனும் முறையில் பசுக்களின் கன்றுகளின் பாலினத்தை விருப்பம் போல தேர்ந்துகொள்ள விவசாயிகளை அமெரிக்க அரசு அனுமதிக்கிறது. இது வணிகரீதியாகவும், இறைச்சி விற்பனைக்கும் உதவுகிறது. ஆனால் இம்முறையை  மனிதர்களுக்கு அப்படியே மாற்றுவது ஆபத்தை உருவாக்கும். மேலும் இது குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கும்போது ஏற்படும் விளைவுகள் எதிர்காலத் தலைமுறையினரையே பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

தகவல்: New Scientist

வெளியீடு - தினமலர் பட்டம்

பிரபலமான இடுகைகள்