இறப்புக்காக பிராத்தியுங்கள்- நைஜீரிய பெண்களின் அவலநிலைமை!



Image result for nigeria girls trafficked



நைஜீரியாவைச் சேர்ந்த அதாராவுக்கு பதினேழு வயதானபோது நடந்த சம்பவம், அவரது வாழ்க்கையை மாற்றியது. அவரிடம் பேசிய பெண், லிபியாவில் வேலைவாய்ப்பு உள்ளது என்றார். இவர் மிகவும் சிரமப்பட்டு, அங்கு சென்றபோதுதான் 4 ஆயிரம் டாலர்களுக்கு விற்கப்பட்டிருப்பது தெரிந்தது. அங்கு பாலியல் தொழில் செய்ததோடு, அவரது எஜமானியோடும் உடலுறவு கொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டது. பின்னர் அவர் ஐஎஸ் படையின் பாதாள சிறையில் உடலுறவுக்கான அடிமையாக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு லிபியா படையினரால் மீட்கப்பட்டுள்ளார். தற்போது, உலக அகதிகள் அமைப்பு மூலம் நைஜீரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர், காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். காரணம் அவரது வீட்டில் பெற்றோரின் கட்டற்ற வன்முறை அதாராவால் தாங்க முடியாமல் இருந்தது.

காப்பகத்திலும் உணவு, சுகாதார வசதிகள் குறைவுதான். ஆனால் அவருக்கு வேறு என்ன வழி இருக்கிறது?


Related image


நைஜீரிய ஊடகங்கள் வேலை என்ற பெயரில் கடத்தப்படும் பெண்களைப் பற்றி பரபரப்பான செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் இம்முறையில் மீட்கப்படும் பெண்களின் நிலைமை பற்றி கள்ள மௌனம் சாதிக்கின்றன. அரசும் இதில் பெரியளவு தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே, மனித உரிமைக் கண்காணிப்பகம் இறப்புக்காக பிரார்த்தியுங்கள் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அதாரா தனது வீட்டு நிலைமை காரணமாக பதினெட்டு வயதில் வெளியே சென்றார். வீட்டுவேலை என்பதை நம்பி கூலி 417 டாலர்கள் என ஒப்புக்கொண்டார். அவர் செய்த தவறை விரைவிலேயே உணர்ந்தார். காரணம் அவரை அழைத்து வந்த பெண்மணி அதாராவை நான்கு நாட்கள் பட்டினி போட்டு அவரை கீழ்ப்படிய வைத்தார். எதற்கு கைகாட்டும் ஆணுடன் ஆணுறை இன்றி பாலுறவு கொள்ளத்தான். அதாரா, எதற்கு இப்படி செய்கிறீர்கள்? வீட்டு வேலைக்குத்தானே அழைத்து வந்தீர்கள் என்று கேட்க, இதுவும் அந்தப் பிரிவில்தான் வரும் என்று நக்கலாக சொல்லியிருக்கிறார்.

பின்னர் அவரை அழைத்து வந்த செலவு 4 ஆயிரம் டாலர்கள் என்று சொல்லி அதனை தந்தால் விட்டுவிடுவதாக கூறியிருக்கிறார். அவ்வளவு பணம் கிடைத்தால், அதாரா ஏன் நைஜீரியாவிலிருந்து லிபியாவுக்கு சகாரா பாலைவனம் தாண்டி வரவேண்டும்?


 பின் ஒரு மாதம் இரவும் பகலுமான உடலுறவு விளைவாக அதாரா கருத்தரித்தார். கரு இருந்தால் எப்படி வேலை செய்வது என அதாரா கேட்டதற்கு, கருவைக் கலைத்து விடலாம் என அவரது எஜமானி கூறினார். கருவைக் கலைத்து ரத்தப்போக்கு நிற்க, ஈரத்துணியை அவரது யோனியில் திணித்தார். ரத்தப்போக்கு நிற்கும் முன்னரே அவரை லிபிய மனிதருக்கு விற்றுவிட்டார் அதாராவின் எஜமானி. அவர் திருமணம் செய்து உதவுவதாகத்தான் சொன்னார். ஆனால் அதற்குள் ஐஎஸ் தீவிரவாதிகள், லிபிய மனிதரைக் கொன்றுவிட்டு அதாராவை கைது செய்து கூட்டிச்சென்றனர். அங்கும் கற்பழிப்பு தொடர்ந்தது. நமது பஞ்சாயத்து போலவே கற்பழித்தவரையே பெருமையாக திருமணமும் செய்து வைத்துவிட்டனர்.

மூன்று ஆண்டுகள் இப்படியே போனது. அப்போதுதான் லிபிய படை தீவிரவாதிகளை ஒடுக்கி அதாராவை மீட்டது. உலக இடம்பெயர்தல் அமைப்பு அவரை நைஜீரியாவுக்கு அனுப்பி வைத்தது. வீட்டுக்குச்செல்ல நினைத்தவரை நாப்டிப் எனும் அரசு அமைப்பு, காப்பகத்திற்கு அனுப்பியது. அங்கு அவர் உயர்ந்த மதில்களுக்குப் பின்னால் அமர்ந்திருக்கிறார்.

உடல்ரீதியான துன்புறுத்தல் கிடையாதுதான். ஆனால் உங்களை எங்குமே செல்லவிடாமல் அடைத்து வைத்திருந்தால் அது யாருக்குத்தான் பிடிக்கும்? தற்போது முடியலங்கார படிப்பை படித்து வருகிறார் அதாரா. பேருந்துக்கு காசில்லாத தால் நடந்துதான் செல்கிறார். உணவும் சில வேளைகளில் கிடைக்கும் அல்லது கிடைக்காது. லிபியாவில் சந்தித்த கொலைகளும், அனுபவித்த கொடுமைகளும் அவரை இன்றுவரை பாதித்து வருகின்றன.

மனித உரிமைக் கண்காணிப்பகம்

ஆங்கிலமூலம் - ஆட்ரே வேப்வயர்