சிறுகுறு தொழில்துறைக்கு என்னாச்சு? - அரசின் பாதகமான நிதி,பணக்கொள்கை!


 இந்தியாவிலுள்ள 6.3 கோடி சிறுதொழிலாளர்கள் ஆட்டோமேஷன், அல்காரிதம் என தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்றபடி தொழில்களை மேம்படுத்தி, வருகிறார்கள். நாட்டின் நாற்பது சதவீத ஏற்றுமதிக்கும், 28 சதவீத உள்நாட்டு உற்பத்திக்கும் உதவுவது இவர்கள்தான். தோராயமாக 11 கோடிப்பேருக்கும் மேலாக வேலைவாய்ப்புகளை வழங்கும் சிறுகுறுகுறுந்தொழில் துறை, விவசாயத்துறைக்கு அடுத்து வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்குகிறது.

மத்திய அரசு பதிவு செய்த குறுந்தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடனாக 350 கோடியை இரு சதவீத வட்டியுடன் வழங்குகிறது. கூடவே முத்ரா கடன் வசதியும் உள்ளது. ஆனால் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்காக இந்திய அரசு செய்த பணமதிப்பு நீக்க முயற்சியில் இத்துறையின் வளர்ச்சி முடங்கியது. இதன்விளைவாக, தொழில்துறை உற்பத்தி இண்டெக்ஸில் (IIP) 3.6 சதவீத வளர்ச்சி மட்டுமே இந்த ஆண்டில் பதிவாகியுள்ளது.

இக்காலகட்டத்தில் வங்கிகளில் வாராக்கடன் அளவு அதிகரித்து வந்தது. இதைக் குறைக்க, ரிசர்வ் வங்கி கடன் தரும் முறைகளையும் மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதனால், சிறுகுறு தொழிலாளர்கள் வங்கிக் கடன் கிடைக்காமல் தடுமாறினர்.  இதற்காகவே இந்திய அரசு, செபியின் முன்னாள் தலைவரான யு.கே. சின்கா தலைமையில் கமிட்டி ஒன்றை நியமித்தது. இக்கமிட்டி, சிறுகுறு தொழில்துறையை ஆராய்ந்து நீண்டகால நோக்கில் பயன்தரும் பரிந்துரைகளை உருவாக்கியுள்ளது.
“சிறுகுறு தொழில்துறையினர், தங்களின் முதலீட்டிற்கான கடன்களுக்கு வங்கியைச் சார்ந்துள்ளனர். ஆனால் வங்கிகள் கடன் தருவதற்கான விதிகளை கடினமாக்கிவிட்டனர். மேலும் சிறுதொழில்களுக்கான துறை அறிவையும் வங்கி அதிகாரிகள் பெற்றிருப்பது வாராக்கடன் பிரச்னையைத் தீர்க்கும்” என்கிறார் சிறு,குறுதொழில்துறை ஃபெடரேஷனைச் (FISME) சேர்ந்த அனில் பரத்வாஜ். 

தகவல்:BT