அரசக் குடும்பத்தை பழிவாங்கும் விதவையின் ஆக்ரோஷ பயணம்! - காலச்சக்கரம்








Kaalasakaram by காலச்சக்கரம் நரசிம்மா
குட்ரீட்ஸ்



காலச்சக்கரம்

நரசிம்மா

வானதி பதிப்பகம்

 

நாவலில் வரலாறு, பண்பாடு, தாந்த்ரீகம், குற்றம் என பல்வேறு துறைகள் சார்ந்த விவரங்கள் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன.

 

1947 ஆண்டு தொடங்கி 2007 ஆம் ஆண்டு வரை கதை நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை புரிந்துகொண்டாலே கதை எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது என புரிந்துகொள்ளலாம்.

 

காஷ்மீரைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற திருமணமான பெண்ணை அரச குடும்பத்தைச் சேர்ந்த ஜெயன் சக்ரவர்த்தி என்பவர் பலவந்தமாக தனது காதலியாக்கி சிதைக்கிறார். அப்பெண்ணை கர்ப்பிணியாக்கிய பிறகு கைவிடுகிறார். இதனால் ஷ்ரத்தா என்ற பெண் எடுக்கும் பழிவாங்கும் படலமே காலச்சக்கரம்.

 

நாவல் முழுக்க இந்தியக் கலாச்சாரம் சார்ந்த அக்கறையுடன் ஒவ்வொரு அங்குலத்தையும் அலசுகிறது. காஷ்மீர் பண்டிட்டுகள் அடித்து விரட்டப்படுவதை வரலாறு சம்பவமாகவும், கதையில் முக்கியச் சம்பவமாகவும் சேர்ந்த ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதன் பின்னணியில்தான் கதை வேகம் பிடிக்கிறது. முதல் அத்தியாயம், அனந்தம்பூர் அரண்மனையைச் சேர்ந்த வசுந்திரா தேவி கனவு கண்டு அலறுவதும், அவளைப் பார்க்க திவான் காரில் கிளம்ப கதையும் மெல்ல வேகம் பிடிக்கிறது.

 

கும்பேஸ்வரர் கோவிலில் சாங்கோபாங்கமாக வேலை பார்க்கும் பட்டப்பா, அவரின் மகன் முதலில் அமைதியாக ஆட்களாக தெரிந்தாலும் அவர்கள் வாசுதேவன் குடும்பத்திற்கு செய்த அபிசார செயல்களை அறியும்போது நம்மை அறியாமல் மனதில் துவேஷம் பீறிடுகிறது. சங்கமேஷ்வரன் முதலில் மர்மமான தாந்த்ரீக பின்னணியில் வெளிப்பட்டு பின்னே நாயகனாக உருவெடுக்கிறார். இவரை அப்படி நாம் நினைத்தாலும் அனைத்தையும் இயக்கும் ஷ்ரத்தா தான் நாவலின் நாயகி.

 

காளி வழிபாடு சார்ந்த ஏராளமான தகவல்கள் கூறப்படுகின்றன. அவை ஆன்மிகம் சார்ந்த வரலாற்றை அறியும் வேட்கையை வாசிப்பவர்களுக்கு உறுதியாக ஏற்படுத்தும். ஆசிரியரின் நோக்கம் அதுதானோ என்னவோ தெரியவில்லை. நூலை வாசிக்க எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடிக்கும்படியான திருப்பங்கள், கதாபாத்திரங்களை அமைத்து வென்றிருக்கிறார் நரசிம்மா. இவரது முதல் நாவல் காலச்சக்கரம் என்பதை பலரும் நம்பவே மாட்டார்கள்.

 

அறிவியல் கலாசாரத்தோடு மோதும் இடங்களில் தன்னையும் மறந்து ஆசிரியரின் கோபம் வெளிப்பட்டுவிடுகிறது. சில இடங்களில் பகுத்தறிவாதிகளை கடுமையான சாடுகிறார். ஆனால் அவை அந்த இடங்களில் தேவைப்படாமல் இருக்கும்போதும் உரையாடல்கள் வருவது ரசிக்கத்தக்கதாக இல்லை. அறிவியலில் மட்டும் நம்பிக்கை கொண்டவர், இந்து கலாசார மரபுவாதி என பேசும்போது மோதல் வார்த்தைகள் வந்தால் பரவாயில்லை. நம்பிக்கையுள்ள இருவரும் நம்பிக்கையில்லாதவர்களைப் பற்றி பேசுவது எதற்கு என புரியவில்லை.

 

காலச்சக்கர சுழற்சியில் சுவாரசியமான பழிவாங்கும் படலம்

கோமாளிமேடை டீம்


கருத்துகள்