சாதி மனநிலையை மாற்றினால் மட்டுமே பொருளாதாரம் உயரும் - சேட்டன் பகத்




If Celebrities Actually Reacted To Chetan Bhagat's Absurd Tweets ...
ஸ்கூப்வூப் 

மனநிலையை மாற்றினால் மட்டுமே பொருளாதாரம் உயரும்!

சேட்டன் பகத்

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

2017ஆம் ஆண்டு இந்திய அரசின் கடன் தகுதி மற்றும் வளர்ச்சி பற்றி மூடி நிறுவனம், சில இடங்களை முன்னேறியுள்ளது என்றதற்கு அரசிடம் நேர்மறையான தன்மை வெளிப்பட்டது. கடந்த வாரம் அதே மூடி நிறுவனம் இந்தியாவின் தகுதியை குறைத்து வெளியிட்டவுடன் அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. கனத்த சங்கடமூட்டும் மௌனம் அரசு தரப்பில் நிலவுகிறது.

மூடி நிறுவனத்தின் செயல்பாடு எனக்கு பெரிய ஆச்சரியத்தை தரவில்லை. காரணம் பெருந்தொற்று காரணமாக இந்தியாவின் தரமதிப்பீடு புள்ளிகள் குறையவில்லை. முன்னர் இந்திய அரசு செய்த பொருளாதார தவறுகளின் விளைவாகவே இந்த தரமதிப்பீடு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதனையும் அந்த நிறுவனம் தெளிவான தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.

தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு கொள்கைகளையும், சீர்திருத்தங்களையும் அமல்படுத்தப்படுத்தவில்லை.

பல்வேறு கொள்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. அவற்றில் சீரான செயல்பாட்டுத்தன்மை இல்லை.

அரசினால் தனது நிதி நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை மேலும் கடன் பெறுவதையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கமுடியவில்லை.

பொருளாதார துறையில் ஏற்பட்ட சரிவையும், அரசால் தடுக்கமுடியவில்லை.

கொரோனா என்பது இப்போதிருக்கும் கடினமான தடைகளில் ஒன்றுதான். இவற்றிலிருந்து மீண்டாலும் இந்திய அரசு தனது தவறுகளை சரிசெய்துகொள்ளாவிட்டால் முழுமையான தோல்வியை பொருளாதாரம் சந்திக்க நேரிடும் என்பதே உண்மை.

பாஜக அரசு ஆட்சிக்கு வந்த 2014ஆம்ஆண்டு முதல் சில விஷயங்களை தீவிரமாக கடைபிடித்து வருகிறது. அதில் ஒன்றுதான், இந்தியாவுக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும் அதற்கு பாகிஸ்தானை குறை சொல்லி பிரசாரம் செய்வது, விரக்தி அடைவது. இந்த தேவையில்லாத வேலைகள் இன்றுவரை குறையவில்லை. பெருகிக்கொண்டே இருக்கிறது. இன்று நாம் பொருளாதாரத்தை விட பாகிஸ்தானைப் பற்றி அதிகம் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதாக சித்திரம் உருவாகிவிட்டது.

இந்தியர்கள் இப்போது பொருளாதாரம் பற்றி மட்டுமல்ல எதைப்பற்றியும் கவலைப்படுவது கிடையாது. நாட்டிலுள்ள ஏதேனும் கோவிலை உடைப்பது, அதைக் காரணம் காட்டி பிற இனக்குழுக்களை தாக்கி படுகொலை செய்வது, பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவது என பேசுவது, அதை வைத்தே பாராட்டுகளைப் பெறுவது இதுதான் இங்கு அனுதினமும் நடந்து வருகிறது. டிவி சேனல்களில் பொருளாதாரம் வீழ்கிறது என்று பேசினால் மக்களுக்கு கொட்டாவி வருகிறது. உடனே டிவியை நிறுத்திவிட்டு தோள்களைக் குலுக்கிவிட்டு சென்றுவிடுகின்றனர். மக்களின் நிலையை அப்படியே புரிந்துகொண்ட அரசியல்வாதிகள் அதனை மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கின்றனர். இது தனிநபர் தொடங்கி அரசு வரையில் அப்படியே தொடர்கிறது. மக்கள் கொஞ்சமேனும் அக்கறை எடுத்துக்கொண்டால்தான் தலைவர்களும் மக்கள் மீதும் நாட்டின் மீதும் அக்கறை கொள்வார்கள்.

உலக நாட்டு மக்கள் பொருளாதாரம் பற்றி கவலைப்படும் போது இந்தியர்கள் ஏன் அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள். நல்ல கேள்விதான். ஆனால் இந்தியர்கள் அடிப்படை மனநிலையே விதியை நம்புவதுதான். கடவுள் நமக்கு பணம் தேவைப்பட்டால் கொடுப்பார். இல்லையெனில் இல்லைதான். அதுவரை நாம் சோற்றைத் தின்றுவிட்டு தூங்கி எழுவோம். நடப்பது நடக்கட்டும் என்ன எண்ணம் நம்மிடையே தீவிரமாக இருக்கிறது.

சுவையான சாப்பாடும், தூக்கமும் போதும் என்ற இந்தியர்களின் மனநிலை ஏற்படுத்திய பாதிப்பை நாம் அனைவரும் இனி வரும் காலங்களில் பார்க்கவிருக்கிறோம்.  இந்தியாவில் படித்து பட்டம் பெறுபவர்களின் அடிப்படை சம்பளமே 7, 500 ரூபாய் இருந்தால் அதிகம். இனி நிலைமை அப்படித்தான் மாறப்போகிறது. இதன் காரணமாக, பல லட்சக்கணக்கானோர்க்கு வேலையின்மை பிரச்னை ஏற்படப்போகிறது. நான் மேற்சொன்ன சம்பளம் அமெரிக்காவில் மெக்டொனால்டு நிறுவனத்தில் பர்கர் செய்பவரின் குறைந்தபட்ச சம்பளம் ஆகும். அதாவது, எட்டு மணி நேர வேலைக்கான சம்பளம். இதனை இந்தியர்கள் மாத சம்பளமாக பெறுவார்கள். இதனை உணராமல் இளைஞர்கள் 4ஜி டேட்டா பேக்கில் வெப் சீரிஸ்களைப் பார்த்து வருகிறார்கள்.

அடுத்து, இபோதுள்ள அரசு எந்த கருத்தியலைக் கொண்டு செயல்பட்டாலும் வணிகத்திற்கு எதிராகவே இருக்கிறது. இதனை நான் உறுதியாகவே சொல்லுகிறேன். அரசு அதிகாரிகள் இதனை உறுதியாக எதிர்ப்பார்கள். எளிதாக வணிகம் செய்ய இந்தியா அனுமதிக்கிறது என எடுத்துக்காட்டுகளை எடுத்து பேசுவார்கள். அவர்களின் எடுத்துக்காட்டு தொழில்முனைவோர், ஐஏஎஸ் அதிகாரியுடன் டீயும் மேரி பிஸ்கெட்டுமாக இருப்பார். இதற்கு என்ன பொருள் என்று எனக்குப் புரியவில்லை. நான் அதிகாரத்தோடு இருக்கிறேன் என்பதா., நான் அதிகாரத்தோடு இருந்தாலும் தொழில் செய்பவர்களை நான் எதுவும் செய்யமாட்டேன் என்பதா? இந்தியாவின் அடிப்படையே சாதி என்பதால், அனைத்து ஏற்றத்தாழ்வுகளும் தொழில்களில் உள்ளன. இதனால் இங்கு வணிகம் செய்வது மிகவும் கடினமாக மாறிவருகிறது.

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப், தனது பதிவுகளை நீக்கியதற்காக வெளிப்படையாக டிவிட்டர் தலைவரை திட்டுகிறார். ஆனால் அதற்கு டிவிட்டர் நிறுவனம் கவலைப்படாது. காரணம், வணிகரீதியான பாதுகாப்பு அங்கே அப்படி உள்ளது. ஆனால் இந்தியாவில் அப்படி சக்தி வாய்ந்த ஒருவர் பேசினால் தொழிலதிபர் உயிரோடு இருந்து தொழிலை நடத்த முடியுமா? அன்றே அவரின் ஆயுள் முடிவுக்கு வந்துவிடும். நம் மனநிலை மாறாதவரை வணிகம் நிச்சயமாக வளராது.

இந்திய தொழில்துறையில் உள்ளவர்கள் வியாபாரிகளாக இருக்கிறார்களே  ஒழிய கண்டுபிடிப்பாளர்களாக இல்லை. புதிய கண்டுபிடிப்புகளை இவர்கள் ஆதரிப்பதுமில்லை. கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப்படுத்துவதில்லை. தொழிலதிபர்களின் முக்கியமான கேளிக்கை, நிறுவனத்தை உயர்பதவிகளில் தனது மகன், மகள்களை உட்கார வைப்பதும். அவர்களின் நிச்சயம், கல்யாண விழாக்களை கோவிட் -19 நிதி ஊக்கத்தொகையை விட அதிக செலவில் நடத்துவதுமாகவே இருக்கிறது. திறமையை மதிப்பதை விட யார் அவர்கள், யார் சிபாரிசின் மூலம் வந்தவர்கள் என்பதாகவே இங்கே பதவி உயர்வுகள் உள்ளன என்பது அவமானகரமான உண்மை.

எந்த வேலையும் செய்யாமல் நிறுவனத்தின் இயக்குநர் ஆகும் தொழிலதிபர்களின் பிள்ளைகளுக்கு பதிலாக வேறு ஒருவருக்கு நிறுவன பதவிகளை ஏன் கொடுப்பதில்லை? நிறுவன இயக்குநர் இருக்கையில் உட்கார அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் சொல்லுவதையெல்லாம் அவர்கள் தங்கள் கூட்டங்களில் பேசுவார்கள். ஆனால் மறந்தும் கூட இந்த மாற்றங்களை தங்கள் நிறுவனத்தில் செய்துவிட மாட்டார்கள். எஃப்ஐசிசிஐ, சிஐஐ ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அனைத்து நிதிநிலை அறிக்கைகளையும் மாற்றத்திற்கானது என்று புகழ்ந்து பேசுவார்கள். இந்திய அமைப்புகள் இப்படித்தான் தீவிரமான அரசியல் சார்புநிலைக்குள் சிக்கிக்கொண்டு தடுமாறி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள ஆப்பிள், அமேஸான், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள், புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டே சந்தையில் தங்களை தகவமைத்துக்கொண்டு வருகின்றன. இந்திய நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்தால் கூட இந்த மூன்று நிறுவனங்களின் மதிப்புக்கு ஈடாகாது. அவர்கள் எப்படி யோசிக்கிறார்கள்? புதிய கண்டுபிடிப்புகளைச் செய்கிறார்கள்? நம்மால் ஏன் அப்படி உருவாக முடியவில்லை.

நம் பிறந்த நாளுக்கு யார் செலிபிரிட்டியாக வருகிறார்கள்? நாம் அடுத்து வாங்கவுள்ள விலையுயர்ந்த சொகுசு கார் என்ன? என்றுதான் இந்திய தொழிலதிபர்கள் யோசித்து வருகிறார்கள். வேறு எதையும் யோசித்து மூளையை கஷ்டப்படுத்த அவர்கள் விரும்புவதில்லை. இந்திய அரசு, மக்கள், தொழிலதிபர்கள் ஆகியோரிடம் மாற்றங்கள் ஏற்படாதபோது பொருளாதாரத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்