ஆபூர்வ கரணி மந்திரத்தை திருடும் சித்தவைத்தியரை விரட்டிப்பிடிக்கும் பார்வையற்றவளின் கதை! - கர்ண பரம்பரை
மெரினா புக்ஸ் |
கர்ண பரம்பரை
2016
நரசிம்மா
வானதி
பதிப்பகம்
ரூ.225
சப்தாமலை மூலிகைகளின் சொர்க்கபுரி. இங்கு வாழ்ந்து வருகிறார்
துளசி ஐயா என்ற துறவி. இவருக்கு சேவைகள் செய்து அவர் மனதில் இடம்பிடிக்கிறார் நல்லம்மர்
என்ற செல்வந்தர். பணக்காரராக இருந்தாலும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து துளசி ஐயாவின் அருளாசியினால் நம்பிராஜன் என்ற
மகன் பிறக்கிறார்.
நல்லம்மருக்கு கர்ண
மந்திரம் என்ற புகழ்பெற்ற அபூர்வ மந்திர உபதேசம் நடைபெறவிருக்கிறது. சத்யம் தியேட்டரில்
ரஜினி படம் போடுகிறார்கள் என்பது போல நல்லம்மர், சென்னையில் உள்ள தன் மகன் குடும்பத்திற்கு
கடிதம் போட பிரச்னை உருவாகிறது. அவரை வாழ்த்துவதற்கு சென்னையிலிருந்து வரும் வைத்தியர்களில்
ஒருவர் நல்லம்மரை வாழ்த்தி ருத்ராட்ச மாலை ஒன்றை கழுத்தில் போடுகிறார். அது டேப் ரிக்கார்டர்
என்று தெரியாமல் துளசி ஐயாவிடம் உபதேசம் பெறுகிறார் நல்லம்மர். இதன் காரணமாக, இருவரும்
தொன்னைக்காது சித்தரின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உள்ளாகிறார்கள். நல்லம்மர் எதிரிகளால்
வேட்டையாடப்பட்டு இறக்கிறார். நல்லம்மரான தனது கணவரை கொன்றது யார் என இரு கண்களும்
தெரியாத அவரது மனைவி வனதாயி கண்டுபிடிப்பதுதான் கதை.
கண் தெரியாத ஒருவர் எப்படி கொலைகாரனை கண்டுபிடிக்கிறார் என்பது
மிகப்பெரிய சவால்தானே. வனதாயிக்கு, பழங்குடி இனத்தைச் சேர்ந்த கரிச்சான், செல்லி, செல்லியின்
மகன் பைரவன், துளசி ஐயாவின் பேரன் திலக், நாமகிரி மாமி ஆகியோர் உதவுகிறார்.
எதிரியை நன்றாக உறுதியாக படைத்து இருப்பதால் 500பக்கங்களுக்கு
சுவாரசியத்தை தக்க வைக்க முடிகிறது. அவர் தன் பெயர்களை இடத்திற்கு ஏற்ப பயன்படுத்தவது,
தனது குடும்பத்திற்கு சந்திரசேகர் செய்த அநீதிக்கு பழிவாங்குகிறார். பழிவாங்கும் ஆயுதமாக
அவர் பயன்படுத்த கர்ண மந்திரத்தை தேர்ந்தெடுக்கிறார். இதன் காரணமாக ஏராளமானோரின் உயிர்
பலியாகிறது.
எதிரி என்ன ஆயுதத்தைப் பயன்படுத்துகிறானோ அதனைப் பயன்படுத்தியே
இறுதியில் வனதாயி அவனைத் தோற்கடித்து வைகுந்தத்திற்கு அனுப்புகிறார். நாவலில் திலக்
என்ற கதாபாத்திரம் வனதாயிக்கு உதவி செய்யக்கூடிய கதாபாத்திரம் என்பதால் நிறைய இடங்களில்
பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் மிக குறைவான இடங்களிலேயே இவர் வருகிறார். இவருக்கு பதிலாக
பல நேரங்களில் நாமகிரி மாமியே வனதாயிக்கு உதவுகிறார்.
யார் எதிரி என்பதில் வாசிப்பவர்களையும் நம்பிராஜனையும் குழப்பச்செய்கிறது அனந்தகிருஷ்ணனின் பாத்திர படைப்பு.
சிறப்பாகவே அதில் ஆசிரியர் வெற்றிபெற்றிருக்கிறார். இறுதிக்காட்சியில் திலக், சப்தாமலைக்கு
திரும்புவது விதியாக இருக்கிறது. ஆனால் அதிரூபா அங்கு வருவது வலிந்து திணிக்கப்பட்டதுபோல
இருக்கிறது. காரணம் இருவரின் உரையாடல்கள், பேச்சு என எதுவும் ஒருவருக்கொருவரை அறிமுகம்
செய்து வைக்கவில்லை என்பதால் அவர்களின் அன்பு, காதலை வேகமாக உள்வாங்க முடியவில்லை.
பகுத்தறிவது என்பதை ஆசிரியர் தன் நாவலில் முடிந்தவளவு எதிர்ப்பதைப்
போலவே படுகிறது. கடவுளை கண்ணை மூடிக்கொண்டு நம்பவேண்டும் என்பது அவசியமில்லை. கடவுளை
வணங்குவதும், வேண்டாம் என்பது தனிநபருக்கான சுதந்திரம். சில இடங்களில் நம்பிக்கை இல்லாதவர்களை
இடித்துரைப்பது பொருத்தமாக இல்லை.
பொதுநலம் காக்கும் கர்ண பரம்பரை
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக