கொரோனா பீதியால் விரட்டப்படும் மக்கள்! - இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலம்
toi |
வேலைதேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற வட இந்திய மக்கள் இப்போது தம் மாநிலங்களுக்கு வேகமாக திரும்பி வருகின்றனர். காரணம், கொரோனா வைரஸ் பீதியால் பல்வேறு இடங்களிலும் வேலை இல்லை. அதற்காக பசியோடு கிடக்க முடியுமா? அரசு மக்களுக்கு பயண ஏற்பாடுகள் செய்கிறதோ இல்லையோ அவர்கள் நடக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் இப்போது பல்வேறு சோதனைகள் செய்யாமல் அவர்களை கிராம மக்கள் உள்ளே அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்து அவர்களை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
மேற்கு வங்கம், பீகார், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தராகண்ட் மக்கள் பலரும் ஊர் நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் இவர்களை ஊருக்குள் விடாமல் கிராம மக்கள் தடுத்து வைத்துள்ளனர். ராஜஸ்தானின் தகவல்லி கிராமத்தைச் சேர்ந்த இடம்பெய்ரந்து சென்ற மக்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முறையாக சோதனைகள் நடைபெறாத நிலையில் மூன்று நாட்களுக்கு மேலாக கிராமத்திற்கு வெளியில் காத்திருக்கின்றனர். ”கேரளம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த மக்களை சோதித்த பிறகே கிராமத்திற்கு அனுமதிக்க அரசு உத்தரவு. அரசின் உத்தரவுக்கு முன்னர் அங்கு சென்றவர்களையும் அங்குள்ள மக்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. ” என்கிறார் ராஜஸ்தான் தோல்பூரைச் சேர்ந்த எஸ்பி மிருதுள் கச்சாவா.
வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தவர்களை பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கச்சொல்லி மாவட்ட நிர்வாகங்களை மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கிராமத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை,
சத்தீஸ்கர் மாநிலத்தில் குலாபி கேங், அந்த மாநில இளைஞர்கள் கர்நாடகத்திலிருந்து திரும்பிய தொழிலாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. உரிய உடல்தகுதி சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதி என்று சாலைகளை தடுத்து வைத்துள்ளனர்.
பல கி.மீ தூரம் நடந்து வந்த மக்கள் இன்னும் பல மாதங்களுக்கு காத்திருந்து சோதனைகள் நடந்தபிறகுதான் ஊருக்குள் நுழைய முடியும் என்றால் அது வேதனையான செய்தி அல்லவா? அரசு சோதனைகளை விரைந்து முடித்தால் மட்டுமே இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மன உளைச்சலேனும் ஏற்படாமல் இருக்கும்.
நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ்