சிஎஸ்ஆர்: சமூக பிரச்னைகளுக்கான பிரசாரம்




CSR (Corporate Social Responsibility) | Definition & Meaning ...
optimy wiki


5

சமூகப் பிரச்னைகளுக்கான பிரசாரம்

கார்ப்பரேட் நிறுவனங்கள் குறிப்பிட்ட சேவையை அல்லதுத பொருட்களை தயாரித்து வழங்கும் பணியை செய்துவருகின்றன. சமூகப் பிரச்னைக்கு அந்நிறுவனம் முன்னின்று பிரசாரத்தை முன்னெடுக்கும்போது அது நிறுவனத்தைப் பிரபலப்படுத்துவதாக இருக்கவேண்டும். ஆனால் நிறுவனத்தின் பொருட்களை அங்கே விளம்பரம் செய்யக்கூடாது. அது தவறான அணுகுமுறை.

உதாரணத்திற்கு நகரங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள இளம் வயதினர், இரவு உணவின்றி உறங்கச்செல்லுகின்றனர் என்பது சமூகப் பிரச்னை. இப்பிரச்னை சார்ந்து பிரசாரம், விளம்பரங்கள் அமையவேண்டும். இதில் இணைந்துகொள்ளும் நிறுவனங்களை விளம்பர பதாகையில் குறிப்பிடலாம். நேரடியாக குறிப்பிட்ட நிறுவனங்களின் நிதியை ஏற்கலாம். மக்களிடம் இதற்கான விழிப்புணர்வுக்காக அவர்களிடம் மனுக்களை சமூக வலைத்தளங்களில், மின்னஞ்சலில் அனுப்பச் செய்யலாம். அவ்வளவே இதில் செய்யமுடியும். இதிலுள்ள அம்சங்களை பார்ப்போம்.

விழிப்புணர்வு முக்கியம்

குறிப்பிட்ட வழித்தடத்தில் அதிக விபத்துகள் நடக்கின்றன. அதற்கு காரணம், அங்கு வேகத்தடை அமைக்கப்படாதது என்றால் அதனை புள்ளிவிவரங்களுடன் தொகுத்து அதனை புகார் மனுவாக்கலாம். அரசு மருத்துவமனையில் நர்ஸ்கள் குறைவாக நியமிக்கப்பட்டிருந்தால் அதனை கூடுதலாக்க பிரசாரம் செய்யலாம்.அ இந்தியாவில் குறிப்பிட்ட வணிக நகரில் தற்கொலைகள் அதிகம் நடந்தால் அதனை தடுக்க முயலாம். இவை எல்லாவற்றிலும் மக்கள் பலரையும் இணைக்கும் சமூக விஷயங்கள் இருக்கின்றன.

மேலும் அதிக தகவல்கள்

நிறுவனங்கள் தமது பிரசாரம் தொடர்பான விவரங்களை அனைத்தையும் பிரௌச்சரில் இட்டு நிரப்பி மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டியதில்லை. மேலும் விவரங்களுக்கு என க்யூஆர் கோடை பிரின்ட் செய்தால் போதும். அதனைக் க்ளிக் செய்து வலைதளத்திற்கு சென்று மக்கள் விஷயத்தை புரிந்துகொள்வார்கள். அங்கே மக்கள் வாக்களிக்கும் விஷயங்களை வைத்தால் சிறப்பாக இருக்கும். உணவு வங்கி, ரத்த தானம் ஆகிய பிரசார உத்திகளை எடுத்தால் எளிமையாக மக்களிடம் அணுக முடியும்.

புற்றுநோய், பசுக்களைக் காப்பது, அருகி வரும் பறவைகளைக் காப்பதற்காக என பல்வேறு சமூக பொறுறப்புணர்வுத் திட்டங்களுக்காக பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களிடம் நிதியுதவியைப் பெறுகின்றன.

பெங்களூருவைச் சேர்ந்த அக்சய பாத்ரா நிறுவனம், மாணவர்களுக்கு பல்வேறு அரசுகளுடன் இணைந்து உணவு வழங்கி வருகிறது. இதுபோன்ற செயல்பாடுகளுக்கு மக்களிடம் நிதி கோரலாம். மேலும் பயன்படுத்திய துணிகளை ஆதரவற்றோர் காப்பகங்களுக்காக கோரலாம். தேவையில்லாத துணிதான் கிடைக்கும் என்றாலும் அதனை சேகரித்துக் கொடுக்கும் முயற்சி நிறுவனத்திற்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும். இதில் சிறுபான்மையினரின் நலன்களுக்காக நடத்தும் ஓவியக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, நூல் விற்பனை ஆகியவை முக்கியமானவை.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களுடன் தொடர்பு குறிப்பிட்ட அளவிலேயே இருக்கும். ஆனால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணையும்போது மக்கள் தொடர்பு கிடைக்கும். சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் வழியாக மக்களின் தேவைகளை நிறுவனம் எளிதாக உணர முடியும். தனது நிறுவனத்தை மேலும் பல கோடி மக்கள் உணரச் செய்வதற்கு இதைவிட சிறந்த வாய்ப்பு ஏதுமில்லை.

பொருளும் நோக்கமும்

2002ஆம் ஆண்டு பென்அண்ட் ஜெர்ரி ஐஸ்க்ரீம் நிறுவனம் வெப்பமயமாதலுக்கு எதிராக பிரசாரம் ஒன்றை உருவாக்கியது. இதில் டேவ் மேத்யூஸ் என்ற இசைக்குழுவையும் தன்னார்வக் குழுக்களையும் இணைத்துக்கொண்டது. இந்நிறுவனத்தின் வணிக நோக்கம் இயற்கையான் பொருட்களால் ஐஸ்க்ரீம் தயாரிக்கப்படுகிறது எனபதுதான். இதில் சமூக நோக்கத்தை கலந்து அனைத்து மக்களும் கடைபிடிக்கவேண்டியவை என வெப்பமயமாதலை பிரசாரம் செய்தது. இதற்காக இசைக்குழு மூலம் பாடல்களை பதிவு செய்து சிடிகளாக்கி மக்களுக்கு வழங்கியது. 63 ஆயிரம் மக்களின் கோரிக்கை கடிதங்களை அமெரிக்க சட்டசபைக்கு அனுப்பி வைத்தது.



வாடிக்கையாளர்களின் நம்பிக்கை

மனிதர்களை விட நாய்கள், பூனைகள் மீது அமெரிக்கர்களுக்கு அன்பு அதிகம். எனவே, பெட்ஸ்மார்ட் நிறுவனம், இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி சமூக பிரசாரம் செய்து தனது வணிகத்தைப் பெருக்கியது, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றது.

1993 முதல் 2005ஆம் ஆண்டுவரை இந்த திட்டம் அமலில் இருந்தது. தெருவில் சுற்றும் ஆதரவற்ற நாய்களை தத்தெடுத்துக்கொள்ளுங்கள் என்பதே அந்த திட்டம். பெட்ஸ்மார்ட் நிறுவனத்தின் அறக்கட்டளை இதற்காக வடக்கு அமெரிக்காவில் மட்டும் 50 லட்ச ரூபாய் செலவு செய்து நாய்களை தத்தெடுப்பதற்கான செயல்பாடுகளை முடுக்கியது. இதற்கு பல்வேறு விலங்கு நல சங்கங்களை தன் பணியில் இணைத்துக்கொண்டது. இதில் வாடிக்கையாளர்கள் நாய்களை பராமரிக்க பத்து, இருபது டாலர்கள் வரை நிதி வழங்கலாம். இதற்கு நிறுவனம் டீஷர்ட் மற்றும் பயணப்பை ஒன்றை பரிசாக வழங்கியது.

இந்த திட்டம் மூலம் ஆதரவற்ற கோடிக்கணக்கான நாய்களுக்கு வாழ்வதற்கு பாதுகாப்பான இல்லங்கள் கிடைத்தன. இதைப்போலவே வலிநிவாரணி மருந்து தயாரிப்பு நிறுவனம், ஆர்த்தரைட்டிஸ் பவுண்டேஷனுடன் இணைந்து ஆர்த்தரைட்டிஸ் வாக் எனும் நிகழ்ச்சியை நடத்தி பெரும் புகழ் பெற்றது. தன்னுடைய பொருட்களையும் மறைமுகமாக விளம்பரப்படுத்திக் கொண்டது.

பயணத்தில் நல்ல விஷயம்!

1994ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், தனது விமானத்தில் பயணிக்கும் வாடிக்கையாளர்களை வைத்தே சமூக பிரசாரம் ஒன்றை செய்த்து. அமெரிக்கர்கள் ஆண்டுதோறும் பல லட்சம் பேர் பிரிட்டிஷ் ஏர்வேஸை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்று வந்தனர். அப்போது வெளிநாட்டு பணத்தை கொண்டுவருவார்கள் அல்லவா? அதனை யுனிசெஃபின் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான நிதிக்கு வழங்க ஊக்குவிப்பதுதான் திட்டம்.

திட்டத்தின் இறுதியில் பிரிட்டிஷ் ஏர்வேஸின் மூலம் கிடைத்த நிதி, யுனிசெஃப் உலகமெங்கும் வசூலித்த நிதியில் அரைப்பகுதியைக் கொண்டிருந்தது. இதைப்போலவே 1994ஆம் ஆண்டு வால்மார்ட் சூப்பர் மார்க்கெட் நிறுவனம், சைல்ட்ஸ் மிராக்கிள் நிறுவனத்தோடு இணைந்து குழந்தைகள் மருத்துவமனை அமைப்பதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டது. இதில் வால்மார்ட் தனது ஊழியர்களை துணிச்சலாக ஈடுபடுத்தியது. இதன்மூலம் பலகோடி ரூபாய்களை வசூலித்து சாதனை செய்தது.

இதில் சில சவால்களும் உள்ளன. குறிப்பிட்ட சமூக பிரச்னைகளுக்கு பயன்படுத்தும் பிரௌச்சர், நோட்டீஸ், தொப்பி, வாட்டர் பாட்டில்கள், பயணப்பை ஆகியவை அழியும்போது சமூக பொறுப்புணர்வு பிரசாரம் பற்றிய நினைவு காணாமல் போய்விடும். இதில் பென் அண்ட் ஜெர்ரி ஐஸ்க்ரீம் புத்திசாலித்தனமான காரியம் ஒன்றைச் செய்தது. குறிப்பிட்ட பிரசாரத்தை முன்னிறுத்தி ஐஸ்க்ரீம் ஒன்றை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது.

இரண்டாவது, இதில் கிடைக்கும் நிதியை முழுக்க கண்காணிப்பது கடினம். ஊழியர்களின் இதற்கான செயல்பாடுகள் நடைபெறும் இடம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து விவரங்களை பெறுவது கடினமான செயல். இதற்கென தனிகுழுவை அமைத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கைகளைப் பெற்றால் மட்டுமே நினைத்த இலக்கை அடைய முடியும்.

நேரமும், விசாரணையும்

ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ் நிறுவனம், சமூக பொறுப்புணர்வு திட்டமாக பொது மருத்துவமனைகளில் நர்ஸ்களை நியமிக்கும் பிரசாரத்தை முன்னெடுத்தது. இந்த வேலை தொடர்பாக பல்வேறு விசாரணைகள் தொடர்ந்து வந்ததில் நிறுவனம் தடுமாறிப் போய்விட்டது. காரணம் இது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் முடிவடையும் திட்டம் அல்ல.

பாடி ஷாப் என்ற நிறுவனம் அழகுப்பொருட்களுக்கான செயல்திட்டத்தில் விலங்குகளை சோதனைக்கு பயன்படுத்தக்கூடாது என்று விழிப்புண்ர்வு பிரசாரம் செய்தது. ஆனால் இந்த பிரசாரத்திறகாக பத்து ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தே இதனை சாதித்தது. இப்படி நேரம் செலவழிக்காதபோது நம்மால் நினைத்த விஷயங்களை செய்ய முடியாது. எதிர்பார்த்த பயன்களையும் பெற முடியாது.