மக்களுக்கான உரிமைகளைக் கோரும் சுதந்திர புரட்சி நூலகங்கள்!



The Rise of India's Protest Libraries | OZY
ozy




சர்வாதிகாரத்தை எதிர்க்கும் நூலகங்கள்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியத் தலைநகர் டில்லியில் புரட்சி நூலகங்கள் தொடங்கப்பட்டன. இவை தமிழகத்தில் உள்ள அண்ணா நூலகம் போன்ற பிரமாண்டத்தைக் கொண்டவை அல்ல. ஆனால் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் சுதந்திர மனநிலை கொண்ட மனிதர்களுக்கானவை. இந்த நூலகங்களை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடங்கினர். கொரோனா பீதிக்கும் முன்புவரை இவை சுதந்திர மனநிலை கட்டற்ற பேச்சுரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் மனிதர்கள் வந்து செல்லும் இடங்களாக இருந்தன. அச்சமயத்தில்தான் காவல்துறை டாக்டர். ஜாகீர் உசேன் நூலகத்தில் உள்ளே நுழைந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. மாணவர்களின் மீது அநீதியான முறையில் தடியடி நடத்தியது.
இந்திய அரசின் பாரபட்சமான குடியுரிமை சட்டதிற்கு எதிரான போராட்டங்கள் நாட்டில் எங்கெங்கு நடந்தனவோ, அங்கு போராட்டத்தின் ஒரு பகுதியாக புரட்சிகர நூலகங்கள் தொடங்கப்பட்டன. இப்படி கான்பூர், நாக்பூர், சம்பால், உதயகிரி உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்களில் புரட்சிகர நூலகங்கள் உருவாக்கப்பட்டடன.

நாங்கள் எங்களது நூலகங்களை அரசியல் காரணங்களுக்காக மட்டுமே திறக்கவில்லை. இதில் சுதந்திர உரிமைகளை விரும்பும், பேசும் மக்கள் பங்கேற்கலாம். அப்படிப்பட்ட பொதுமக்கள் பங்கேற்கும் இயக்கமாகவே இதனை நடத்தி வருகிறோம். இதைத் தொடங்கும்போது அரசியல் செய்கிறீர்கள் என்று புகார்களை எழுப்பியவர்கள், இன்று இந்நூலகங்களை மூடிவிடாதீர்கள் என்று எங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் என்கிறார் டில்லி ஷாகீன்பாக்கில் பாத்திமா சாவித்ரிபாய் பூலே நூலகத்தை தொடங்கி பங்கேற்றும் வரும் தன்னார்வலரான முகமது ஆசிஃப். 

வாசிப்பு என்பதை அநீதிக்கும் வன்முறைக்கும் எதிரான பாதுகாப்பாக மாணவர்கள் கருதுகிறார்கள். இதில் மாணவர்கள், பெற்றோர். பெண்கள், குழந்தைகள் ஆகியோரும் பங்கேற்று வருகிறார்கள். சுதந்திரம், உரிமை என பேசினால் சவால்கள் வராமலா இருக்கும்? முசா ராணி, முஸ்டாஃபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கலவரத்தில் புரட்சி நூலகங்களும் எரிக்கப்பட்டன. மாணவர்களை ஒத்த மனநிலை கொண்டவர்களிடம் நிதியுதவி பெற்று மீண்டும் புரட்சிகர நூலகங்களை தொடங்கும் திட்டத்தை தன்னார்வலர்கள் கொண்டுள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் நோய்க்கான ஊரடங்கு உத்தரவு இருப்பதால் நூலகத்தை தொடங்கும் பணியை தள்ளி வைத்திருக்கிறார்கள். “எங்களின் பணிக்கு பெண்கள்தான் உந்துதலாக, ஊக்கசக்தியை அளித்தனர். இரு பெண்கள் எங்கள் நூலகத்திற்கு வந்து தினசரி படித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசியபோது, அவர்கள் திருமணமானவர்கள் என்று தெரிந்தது. முன்னர் படிக்கும் பழக்கம் இருந்தவர்கள், திருமணத்திற்குப் பிறகு படிக்கமுடியவில்லை. உங்கள் நூலகம் மூலம் அந்த ஆசை நிறைவேறியுள்ளது. நீங்கள் படிப்புக்காக கல்லூரி சென்றாலும் நாங்கள் இந்த நூலகத்தைப் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட தன்னார்வலர்களின் உதவியால்தான் நூலகம் தடைகளை தாண்டி நடைபெறுகிறது” என்கிறார் ஆசிஃப்.

புரட்சிகர வாசிப்பு குழுவினர், நூலகங்களில் குழந்தைகளுக்கான தனிப்பகுதிகளையும் உருவாக்கி இருந்தனர். இங்கு  குழந்தைகள் வாசிக்கலாம். எழுதலாம். ஏன் பாடக்கூட செய்யலாம். வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவதோடு நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி தருவதை முக்கியம் என்று உணர்ந்திருக்கிறோம் என்கின்றனர். சுதந்திர உரிமைகள் மற்றும் பேச்சுரிமைக்கு ஆதரவானர்கள் மாணவர்களுக்கு நூல்களை தானமாக வழங்கி வருகின்றனர். 

நன்றி – பினான்சியல் எக்ஸ்பிரஸ் மார்ச் 29, 2020– ஷிரியா ராய்