ஊபர் ட்ரைவரோடு போதை மாபியா தலைவனை வேட்டையாடும் முன்கோபி போலீஸ்!

Stuber (2019) — The Movie Database (TMDb)



ஸ்டூபர் - ஆங்கிலம் (2019)

இயக்கம் -மைக்கேல் டௌசே

திரைக்கதை - ட்ரிப்பர் கிளான்சி

ஒளிப்பதிவு - பாபி ஷோரே
 
இசை - ஜோசப் ட்ரப்பனீஸ்


காமெடி ஆக்சன் வகையைச் சேர்ந்த படம். ஸ்டீவ் பிளஸ் ஊபர் என்பதைத்தான் ஸ்டூபர் என பொருத்தி தலைப்பை வைத்திருக்கிறார்கள். 

படத்தின் நாயகன் ஊபர் கம்பெனிக்காக லீசுக்கு நிசான் எலக்ட்ரிக் காரை ஓட்டும் ஸ்டூதான். படத்தில் இவர் அனைத்து காட்சிகளிலும் வருகிறார். வசனம், உடல்மொழி என அனைத்திலும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர் இவர்.
இவருக்கு எதிர்மறையான பிக் பாய் கதாபாத்திரத்தில் பட்டிஸ்டா நடித்திருக்கிறார். கண்பார்வை பிரச்னையால் தன் போலீஸ் துணையை இழக்கும் காட்சியிலும், பின்னர் ஸ்டூவுடன் இணைந்து எதிரிகளை வேட்டையாடும் காட்சியிலும் இறுதிக்காட்சியில் தன் மகளைக் காப்பாற்றியதற்காக கட்டிப்பிடிப்பதும் என பட்டிஸ்டா நடிக்க முயன்றிருக்கிறார். முடிந்தளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவருக்கு காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்கள். 

கதையை மறந்துவிட்டோமே... போதைப்பொருள் மாபியா தலைவனைப் பிடிக்கவேண்டும். டெட்ஜோ என்பவன்தான் பட்டிஸ்டாவின் போலீஸ் தோழியை போட்டுத்தள்ளிவிட்டு பர்கூர் முறையில் கங்காருவாய் தாவி எஸ்கேப் ஆனவன். அவனைப் பிடிக்க பட்டிஸ்டாவுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கிறது? அவருக்கு கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருக்கும்போது... அவரது நண்பர் லியோன் கொடுக்கும் தகவல்படி, பட்டிஸ்டா டெட்ஜோவை பிடிக்க செல்கிறார். ஆவேசமும், முன்கோபமும், கூடவே கண்பார்வை பிரச்னையும் சேர வண்டியை நேராக கொண்டுபோய் பள்ளத்தில் இறக்குகிறார். அதன்பின், ஊபரை அழைத்தால் ஸ்டூ மாட்டிக்கொள்கிறார். அவருடைய மனைவி வீட்டில் அவரோடு செக்ஸ் செய்ய அழைத்துக்கொண்டே இருக்க, இவர் பட்டிஸ்டாவோடு போதை மாபியாக்களை கொல்ல அலைகிறார். இறுதியாக டெட்ஜோவை போட்டுத்தள்ளினார்களா? காவல்துறை அதிகாரியின் துரோகத்திற்கு பலியானார்களா என்பதுதான் இறுதிக்காட்சி. 

பதற்றமில்லாமல் ஜாலியாக ரசித்து சிரிப்பதற்கான படம். 

கோமாளிமேடை டீம்