நீதித்துறைக்கு நேர்மையை சொல்லித்தரும் தனியொருவன்!
லா அபைடிங் சிட்டிசன் ஆங்கிலம் -2009
இயக்கம் - எஃப் கேரி கிரே
திரைக்கதை - கர்ட் விம்மர்
ஒளிப்பதிவு - ஜொனாதன் சேலா
இசை - பிரையன் டைலர்
ஜெரார்ட்
பட்லரின் தயாரிப்பில் அவரே நடித்து வெளியிட்டுள்ள படம்.
கதை
எளிமையான பழிவாங்கும் கதைதான். படத்தில் தொடக்கத்தில் ஜெரார்டின் மனைவி கற்பழித்துக்
கொல்லப்படுகிறார். குழந்தையும் சுடப்பட்டு சாகிறாள். இவர்களை காப்பாற்ற முடியாதபடி
ஜெரார்டு காயம்பட்டு வீழ்கிறார்.
பிறகு,
காவல்துறை ஜெரார்டின் உதவிக்கு வருகிறது. ஆனால் அரசு துறை வழக்குரைஞரான ஜேமி ஃபாக்ஸ்
ஜெயிக்கும் வழக்குகளில்தான் தான் வாதாட வேண்டும் என்ற உறுதியாக இருக்கிறார். எனவே ஜெரார்டின்
குடும்பத்தை கொன்றவர்களோடு சமரசமாகி அவர்களுக்கு குறைவான தண்டனை வாங்கிக் கொடுக்கிறார்.
இதனை அகங்காரமாக ஜெரார்டின் முன்னால் சாட்சியங்களே கிடையாது எப்படி ஜெயிப்பது என்று
கூறுகிறார். அவர் குற்றவாளிக்கு கை கொடுப்பதை ஜெரார்டு நேரடியாக பார்த்துவிட்டு அமைதியாக
செல்கிறார். அவர் எப்படி அரசு வழக்குரைஞரை பழிவாங்கினார், தனது குடும்பத்தைக் கொன்றவர்களை
எப்படி கொன்றார் என்பதுதான் கதை.
படம்
முழுக்க அரசு அமைப்புகளின் மீதான கோபம் தீவிரமாக இருக்கிறது. தனக்கு எதிரியாக உள்ளவர்களை
சிறையில் இருந்தபடியே டெக்னிக்கலாக கொல்கிறார் ஜெரார்டு. ஜேமி ஃபாக்ஸ் எப்படி ஜெரார்டை
கட்டுப்படுத்தி தனது பக்க சேதாரத்தை குறைத்துக்கொல்கிறார் என்பது இறுதிக்கட்ட காட்சி.
இழக்க
இனி என்ன இருக்கிறது என்கிற ஆதங்கப்ப்படும் கதாபாத்திரத்தில் ஜெரார்ட் பட்லர் நன்றாக
நடித்திருக்கிறார். அமைதியாக காவல்துறையிடம் கைதாகி வந்து சிறையில் ஜேமி ஃபாக்சிடம்
டீல் பேசும் காட்சி, நீதிமன்றத்தில் பிணை வேண்டாம் என நீதிபதியிடம் பேசும் காட்சி,
நீ எனக்காக குற்றவாளிக்கு தண்டனை வாங்கித்தர முயற்சி கூட செய்யவில்லை என பேசும் காட்சி
என அனைத்திலும் மனதைக் கவர்கிறார். இறுதியில் தனக்கான முடிவை ஏற்கும்போதும் பெரியளவு
அதிர்ச்சியை அவர் வெளிப்படுத்துவதில்லை. அமைதியாக தனது படுக்கையில் உட்காரும் காட்சி
மறக்கமுடியாத காட்சி.
வழக்கில்
வெற்றி தோல்வி என்பது வெறும் கோப்புகள் இடம் மாறுவதோடு நின்றுவிடாது. அது சாதாரணர்களின்
வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பேசுகிற படம். ஒருவருக்கு நேரும்
இழப்பை மற்றொரு இழப்பு மூலம் பேச வைத்திருக்கிறார்கள்.
இந்த
குடிமகன் நீதியை வேண்டும் மக்களுக்கு பிடித்தமானவன்தான்.
கோமாளிமேடை டீம்