கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்!



Donation, Donate, Charity, Give, Help, Volunteer, Hand
பிக்சாபே


4

கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள்!

சமூக பொறுப்புணர்வு திட்டங்களை பொறுத்தவரை இந்தியாவில் நிறைய விஷயங்களை செய்ய முடியும். அரசும் ஆதரவுக்கரம் நீட்டும். ஆனால் இதற்காக திட்டம் அவசியம்.. ஒரு விஷயத்தை கையில் எடுத்துவிட்டு அதன் பிரச்னைக்கான தீர்வு கிடைத்துவிட்டது என்று கலைந்து போய்விடக்கூடாது. கல்வி, சுகாதாரம், சூழல் போன்ற பிரச்னைகளை நீங்கள் கையில் எடுத்தால் செய்வதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. உதாரணமாக சென்னையில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டபோது, டைம்ஸ் ஆப் இந்தியா வாட்டர் பாசிட்டிவ் என்ற பிரசாரத்தை கையில் எடுத்தது. மக்களின் நினைவில் நீர் பற்றிய கவனத்தை கொண்டு வந்தது. அதேநேரம் ஆனந்த விகடன் தன்னார்வலர்களை திரட்டி நீராதாரங்களை தூர்வாரும் முயற்சிகளை செய்தது. அதுதொடர்பான செய்திகளுக்கு வாரந்தோறும் பக்கங்களை ஒதுக்கியது.

இதெல்லாம் சினிமாவை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்ற பெயரை கொஞ்சமேனும் மாற்றும் விஷயங்கள். இந்த பிரசாரங்களை, திட்டங்களை செய்வதில் பல்வேறு தடைகளும் எழக்கூடும். எனவே திட்டங்களை தயாரிக்கும்போது நீங்கள் என்ன கேள்விகளைக் கேட்கவேண்டும் என்று பார்ப்போம்.

1. நாம் தேர்ந்தெடுத்துள்ள சமூகப் பிரச்னை எப்படிப்பட்டது?

2. இதன்மூலம் நாம் நம்முடைய வணிக நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியுமா?

3. இப்பிரச்னையை அரசு கையாள முடியுமா?

4. நிறுவன ஊழியர்களின் வளர்ச்சிக்கு உதவுமா? அவர்களுக்கு சுவாரசியமான விஷயங்கள் ஏதேனும் உண்டா?

5. நமது போட்டியாளர்கள் இதனை தேர்ந்தெடுத்துள்ளார்களா?

6. சமூகப் பிரச்னையை கையாள உதவியாக யாரேனும் நமக்கு நிதியுதவிகளை அளிப்பார்களா?

7. இந்த பிரச்னையை கையாளுவதன் மூலமாக பாதிப்பு ஏதேனும் வருமா?



இந்த திட்டத்தை வடிவமைக்கும் மேலாளர் மற்றும் திட்ட வடிவமைப்பாளர்கள் தமக்குள் எழும் கேள்விகளுக்கு பதில் தயாரித்துக்கொள்வது முக்கியம். நிறுவனத்தின் திட்டம். திட்டத்திற்கு கிடைக்கும் தன்னார்வலர்கள், நிறுவனத்தின் மேம்பாடு, வளர்ச்சி ஆகியவற்றை அவர்கள் யோசிக்கவேண்டும். கேள்விகளை கேட்டுப் பார்த்து பதில்களை அவர்களாகவே தேட வேண்டும்.

ஆறு வழிகளில் சமூக பொறுப்புணர்வு திட்டங்களை செயல்படுத்த முடியும். அவை என்னவென்று பார்ப்போம்.

சமூகப் பிரச்னைகள்

நிறுவனம் உள்ள பகுதியில் மக்களுக்கு கல்வி, சுகாதாரம், குடிநீர் சார்ந்த பிரச்னைகள் இருக்கும். அவற்றை சரிசெய்ய முயலலாம். இதற்கான விழிப்புணர்வு திட்டத்தை நிறுவன அதிகாரிகளே உருவாக்கி அதனை மக்களிடையே பிரசாரம் செய்யலாம். அமெரிக்காவைச் சேர்ந்த பாடி ஷாப் நிறுவனம் விலங்குகளின் தோலால் ஆன பொருட்களை பயன்படுத்த வேண்டாம், விலங்குகளை அழகுசாதனப் பொருட்களுக்கான சோதனையில் பயன்படுத்த வேண்டாம் என்று பிராசாரம் செய்தது. 2003ஆம்ஆண்டு அமெரிக்காவில் கிரேட் அமெரிக்கா க்ளீன்அப் என்று திட்டம் உருவாக்ககப்பட்டது. அதில் அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இணைந்நது சுத்தம் பற்றி விழிப்புணர்வு செய்தன. சுத்தம் பற்றிய பல்வேறு பொருட்களை விற்ற நிறுவனங்கள் இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் சென்று சேர்ந்தன. லைசோல், பெப்சி ஆகிய நிறுவனங்கள் இதற்கு நிதியளித்தன.

பிரச்னை சார்ந்த மார்க்கெட்டிங்

பிஅண்ட் ஜி, ஐடிசி ஆகிய இந்திய நிறுவனங்கள் குழந்தைகளின் தொடக்க கல்விக்கு நிதியளிப்பதாக தங்களுடைய பொருட்களில் விளம்பரப்படுத்தி வருகின்றன. இதனால் நிறுவனத்திற்கு நல்ல பெயர் கிடைப்பதோடு, இதன் காரணமாகவும் பொருட்களை மக்கள் வாங்குவார்கள். அவை தரத்திலும் நன்றாக இருப்பது அவசியம். இம்முறையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வுத்திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த காம்காஸ்ட் என்ற நிறுவனம் இணையத் தொடர்பு வசதியை ரொனால்டு மெக்டொனால்டு என்ற நிறுவனத்திற்கு வழங்கியது. இதற்கான நிதியை மக்களும் வழங்கலாம் என விளம்பரப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தது.




கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு

குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஆறுமாதங்களுக்கு வழங்கவேண்டும் என்றால் இதனை கையில் எடுத்துக்கொண்டு குழந்தை மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கான ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் தன்னார்வ நிறுவனங்களோடு இணைந்து நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வார்கள். ஜான்சன் அண்ட் ஜான்சன் அல்லது பாம்பெர்ஸ் போன்ற நிறுவனங்கள் இதனை கையில் எடுத்தால் மகத்தான வெற்றி பெறுவார்கள். இப்போது டிவியில் இணையத்தில் வரும் உறக்க குறைபாடு தொடர்பான பிலிப்ஸின் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். அக்குறைபாட்டை போக்கும் சாதனத்தை பிலிப்ஸ் தயாரித்திருக்கிறது. ஆனால் அதனை விளம்பரம் செய்யும்போது, குறைபாட்டை அனைவரும் ஏற்றுக்கொள்வதன் மூலமே அதனை சரி செய்ய முடியும் என்று சொல்லி கடைசியாகவே தன்னுடைய பொருட்களை கீழே காட்டுவார்கள். இம்முறையைக் கூட இதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டலாம்.

கார்ப்பரேட் நிதியுதவி

சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு கார்ப்பரேட் நிறுவனம் நேரடியான நிதியுதவிகளை வழங்குவது. இதனை குறிப்பிட்ட தன்னார்வ நிறுவனங்களை இணைத்தும் செய்யலாம்.

தன்னார்வலர்களின் உதவி

பன்னாட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு தன்னுடைய ஊழியர்களின் பங்களிப்பையும் நிதியுதவியையும் வழங்குவது. இம்முறையில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல் நிறுவனம், கடல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை செய்தது. இந்த உ.தவிகள் இவ்வகையில் சேரும்.

பொறுப்புணர்ந்த வணிகம்

கிராஃப்ட் புட்ஸ் உணவுத்துறையில் பெரிய நிறுவனம். இந்நிறுவனம் குழந்தைகளின் நலன்களுக்காக பள்ளிகளில் மார்க்கெட்டிங் செய்வதை கைவிட்டதை முக்கியமாக சொல்ல்லாம். பொதுவாக சாக்லெட்டுகள், பிஸ்கெட்டுகளால் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே உடல்பருமன், ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனை உணர்ந்தாக நிறுவனங்கள் காட்டிக்கொள்ள இதுவே சிறந்த வாய்ப்பு.

ஸ்டார்பக்ஸ் நிறுவனம், காபி பயிர் விளைவிக்கும் போது ஏற்படும் சூழல் மாசுபாடுகளை குறைக்க சூழல் சார்ந்த நிறுவனங்களோடு உழைத்து வருகிறது. இது சமூகத்தில் நிறுவனத்திற்கு நல்ல பெயரை ஏற்படுத்தித் தரும்.

மேற்சொன்ன வகைகளில் அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் மியூசுவல், டெல், மெக்டொனால்டு ஆகிய நிறுவனங்கள் சிறப்பான செயல்பட்டு வருகின்றன். வாஷிங்டன் நிறுவனம் நிதி சார்ந்த நிறுவனம் என்பதால் சேமிப்பு பற்றிய பல்வேறு விழிப்புணர்வை வகுப்பறைகளில் ஏற்படுத்தி அதனை ஊக்குவிக்கின்றனர். இதன்மூலம் அடிப்படையான அந்நிறுவனத்தின் வருவாயும் பெருகுகிறது. நிறுவனத்தின் எதிர்கால வாடிக்கையாளராக மாணவர்கள் உருவாகவும் வாய்ப்பு கிடைக்கிறது. கற்பித்தலுக்கான பயிற்சியையும் கூடுதலாக ஆசிரியர்களுக்கு வாஷிங்டன் மியூசுவல் வழங்கியது.

டெல் நிறுவனம் மாணவர்களின் பழைய கணினிகளை பெற்றுக்கொண்டு தன்னுடைய நிறுவன கணினிகளை தள்ளுபடி விலையில் வழங்கியது. மேலும் பழைய கணினிகளை மறுசுழற்சி செய்வதாக சொல்லி மக்களின் அபிமானத்தைப் பெற்றது.

மெக்டொனால்டு நிறுவனம், குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தை தனது மையத்தில் நடத்தியது. மேலும் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் உழைத்த காவல்துறைக்கு 7 லட்சம் உணவுகளை விலையின்றி வழங்கி தேசப்பற்றை நிறுவி வியாபாரத்தை வளர்த்தது. ரொனால்டு மெக்டொனால்டு நிறுவனத்தின் மூலம் தீவிர நோய்வாய்பட்ட குழந்தைகளை தங்க வைத்து தன்னுடைய நிறுவன ஊழியர்கள் மூலம் பணிவிடைகளையும் சிகிச்சைகளையும் செய்து வருகிறது


தொடரும்....