மூளையின் பணி - மினி அலசல்!




மூளை எப்படி வேலை செய்கிறது?

அம்பானி பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெறவும், பஞ்சர் கடையில் சுப்பிரமணி வேலை செய்யவும் ஒரு காரணம்தான் இருக்கமுடியும். ஆம். அது மூளை வேலை செய்வதுதான். இருவருக்கும் இருக்கும் நேரம் ஒன்றுதான். இருவரும் யோசிக்கிறார்கள். ஆனால் அதனை யோசித்து சரியாக நடைமுறைப்படுத்துவதில் தொழிலதிபர் – வியாபாரி முந்தி விடுகிறார். இதுதான் சுப்பிரமணிக்கும் அம்பானிக்கும் உள்ள வேறுபாடு.

மனம் தன் ஆசை, லட்சியம் சார்ந்து மூளையை கட்டுப்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர். மற்றொரு சாரார், மூளைதான் உடல், மனம் என இரண்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என அதற்கும் அறிவியல் விளக்கங்களை தருகின்றனர்.

இருபதாம் நூற்றாண்டில் மூளை நரம்பியல் சார்ந்த உளவியல் பகுப்பாய்வு பெருமளவு முன்னேறிவிட்டது. ஆனாலும் மூளை, மனம், உடல் என மூன்று அம்சங்களில் எது எதைக் கட்டுப்படுத்துகிறது என்ற சர்ச்சை இன்றும் கூட ஓயவில்லை. கிரேக்கத்தில் இதைப்பற்றிய கருத்துகளை அரிஸ்டாட்டில், டெஸ்கார்டெஸ் ஆகியோர் கூறியுள்ளனர். மூளை, மனம் என இரண்டையும் அவர்கள் தனியாக பிரித்துதான் கூறியுள்ளனர். இவர்களின் கருத்துகள் தத்துவம் சார்ந்தவை என்பதை நீங்கள் கருத்தில் கொள்வது அவசியம்.

இடது, வலது மூளைகளைக் கொண்ட பகுதிக்கு செரிப்ரல் கார்டெக்ஸ் என்று பெயர். இடது பக்க மூளை நம் உடலின் வலதுபுறத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு விஷயத்தை ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வது, மொழி கற்பது, பேசுவது ஆகியவற்றை இடது பக்க மூளை முடிவு செய்கிறது.

வலது பக்க மூளை, முழுக்க கலை தொடர்பானது. இடது பக்க உடலை கட்டுப்படுத்துகிறது. ஓவியம், எழுத்து, சிந்தனை சார்ந்த பகுதி இது.

மூளை பற்றிய ஆய்வில் ரோஜர் ஸ்பெர்ரி செய்த ஆய்வுகள் இன்று நாம் மூளை நரம்பியல் துறையில் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணம். அவர் இடது, வலது மூளைகளின் பங்களிப்பு பற்றி ஆராய்ச்சி செய்து நிரூபித்தார். ஒருவருக்கு தலையில் அடிபட்டு மூளை பாதிக்கப்பட்டால் அவரின் ஆளுமை பழக்கவழக்கங்கள் மாறுபட்டன. இதுபற்றிய தொடர்ச்சியான ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லை.

மூளையின் வரைபடம்

மனித உடல் உறுப்புகளிலேயே மிகவும் சிக்கலான பகுதி, மூளைதான். இதிலுள்ள நியூரான்கள் ஐம்புலன்களின் வழியாக நாம் பெறும் தகவல்களை இணைத்து சேமித்து வைக்கிறது. நினைவகங்களில்  சேமித்து வைக்கப்படும் இந்த தகவல்கள் தேவைப்படும் போது எடுத்துக்கொள்ளப்படுகின்ன்றன. தேவையில்லை எனும்போது மெல்ல அழிக்கப்படுகின்றன.

மூளையின் மேல் பகுதி, பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து பார்க்கும் பணிகளைச் செய்கிறது. செரிப்ரல் கார்டெக்ஸ் எனும் இப்பகுதி, பிற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அமைப்பில் வேறுபாடுகளைக் கொண்டது. மூளையின் மத்தியபகுதி, நம்முடைய உணர்வு நிலைகளுக்கானது. மூளையின் கீழுள்ள பகுதி, உடலின் செயல்பாடுகளுக்கானது. குறிப்பாக, மூச்சுவிடுவது போன்றவற்றைக் கண்காணிக்கிறது.

மூளையின் செயல்பாடுகளை சிடி ஸ்கேன், எஃப்எம்ஆர்ஐ ஆகிய தொழில்நுட்பங்களின் மூலம் படமெடுத்து அதன் செயல்பாடுகளை கணிக்க முடியும்.

மூளையிலுள்ள பகுதிகளைப் பார்ப்போம்.

ஹைப்போதாலமஸ்

உடலின் வெப்பநிலை, நீரின் அளவு, குணநலன்களை தீர்மானிக்க உதவுகிறது.

தாலமஸ்

மூளையிலுள்ள முக்கிய பகுதிகளுக்கு தகவல்களை அனுப்பி வைக்கிறது.

ஹைப்போகேம்பஸ்

குறுகிய கால நினைவுகளை நீண்டகால நினைவுகளாக சேமித்து வைக்கிறது.

ஆல்ஃபேக்டரி பல்ப்

வாசனை சார்ந்த நினைவுகளை சேமித்து வைக்கிறது.

அமிக்தலா

வாசனை, நினைவுகள் கற்றல் சார்ந்த விஷயங்களை சேமித்து வைக்கிறது.

 

மூளையில் 86 பில்லியன்களுக்கு மேற்பட்ட நியூரான்கள் உள்ளன. ஒரு பில்லியன் - நூறுகோடி

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்