சமூக பொறுப்புணர்வு திட்டம் - தொடக்கம்








1


சமூக பொறுப்புணர்வுத்திட்டம்

உங்கள் பகுதியில் நிறைய வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை மக்களுக்கு குறிப்பிட்ட சேவையை வழங்குகின்றன. அதற்கான கட்டணத்தை வசூலிக்கின்றன. இவற்றை பற்றி நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. இந்த நிறுவனங்களின் வளர்ச்சி என்பது அதன் உரிமையாளர், அதில் வேலை செய்யும் பணியாளர்கள் தொடர்பானதுதான்.

இவர்கள் சமூகத்திற்கு என்ன பங்களிப்பு செய்கிறார்கள்? ஆண்டிற்கு ஒருமுறை வரும் அறுபத்து மூவர் விழாவிற்கு தயிர் சோற்றை பொட்டலமிட்டு வழங்குவதை நான் கூறவில்லை. நிறுவனங்கள் தாமாக முன்வந்து அவர்கள் தொழில் செய்யும் பகுதிக்கு என்ன விஷயங்களைச் செய்கிறார்கள் என்பதை சமூக பொறுப்புணர்வு திட்டம் எனலாம். இன்று இதனை அரசு கட்டாயமாக்கிவிட்டது.

இந்திய அரசு இதனை சட்டமாக்கும் முன்பே டாடா, பிர்லா போன்ற நிறுவனங்கள் அவர்களின் தொழிற்சாலை உள்ள பகுதிகளில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்திறன் சார்ந்த பல்வேறு பயிற்சிகளை வழங்கிவந்தனர். இப்படி இவர்கள் செய்யவேண்டும் என்பது அன்று கட்டாயமில்லை. ஏன் செய்கிறார்கள்? இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்கள், அதற்காக அங்குள்ள மக்களுக்கான செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இதன்மூலம் வணிக நிறுவனம் என்பதைத் தாண்டிய விளம்பரம் நிறுவனத்திற்கு கிடைக்கிறது. மக்களின் ஆதரவில்லாத நிறுவனம் எதுவுமே பார்ச்சூன் 500 பட்டியலில் மட்டுமல்ல, குங்குமத்தில் கூட இடம்பெறாது. அரசு மக்களுக்கு எதையும் இலவசமாக செய்ய முடியாது. அப்படி இலவசம் என்றால் வரியை உயர்த்தி அச்சுமையை மக்களிடம் இறக்கித்தான் செய்ய முடியும். இந்த விஷயத்தில் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய பகுதிக்கான வளர்ச்சியில் பங்கு பெற்றால் பற்றாக்குறை, போதாமை என்பதே இருக்காது.

குறிப்பிட்ட தொழில் முயற்சி என்பது தனிநபரின் கனவுதான். ஆனால் அதனை அவர் ஒருவராக நின்று சாதிக்க முடியாது. அதற்கு எண்ணற்ற கரங்கள், தோள்கள் தேவைப்படுகின்றன. ஒருவரின் கனவு, ஏராளமானோரின் வாழ்க்கையில் வெளிச்சம் தருகிறது. சமூகத்திலிருந்து பெறும் விஷயங்களை சமூகத்திற்கு திரும்ப செலுத்துவது சமூக பொறுப்புணர்வுத் திட்டம் எனலாம். இன்று இந்தியாவில் தனியார் அரசு பங்கேற்பு திட்டங்களை கூறுகிறார்கள். இதன்மூலம் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் இந்தியா தன்னிறைவு பெற முடியும்.

இதனை எப்படி வரையறுப்பது?

ஒரு நிறுவனம் தனது வணிக நடவடிக்கைகளை குறிப்பிட்ட பகுதி சார்ந்த விதிகளோடு அடிப்படை சட்டங்களை மதித்து நடக்கிறது. இவையன்றி, அவை தன்னார்வமாக ஈடுபடக்கூடிய வளர்ச்சி செயல்பாடுகளை சமூக பொறுப்புணர்வு என வரையறை செய்கின்றனர்.

குறிப்பிட்ட தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் தாம் சார்ந்த துறையைப் பொறுத்தே சமூகத்திற்கான வளர்ச்சிப்பணிகளைச் செய்யலாம். லைஃபாய் சோப்பு விற்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் யூனிலீவர். கைகழுவது முக்கியம் என்று தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வருகிறது.

இதே நிறுவனத்தின் ரின் சோப், துணிகளை துவைப்பதற்கானது. அதனை வேலைவாய்ப்புக்கான கருவியாக மாற்றி ரின் கேரியர் அகாடமி எனத்தொடங்கி தன்னுடைய பிராண்டை மக்கள் மனதில் அழுத்தமாக பதிவு செய்தது. அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் நிறுவனம், பற்கள் தொடர்பான பல்வேறு இலவச முகாம்களை ஆலோசனை வகுப்புகளை உலகம் முழுக்க நடத்தி வருகிறது. இப்பணிகளை இந்நிறுவனங்களில் சிஎஸ்ஆர் என வகைப்படுத்திக் கொள்வர்.

தமிழகத்தில் உள்ள தினமலர் பத்திரிகை நிறுவனம், திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு கட்டடங்களைக் கட்டிக் கொடுத்துள்ளது. மேலும் அங்கு இதழியல் படித்து வரும் மாணவர்களை ஈடுபாட்டுடன் தனது பத்திரிகையில் பணிக்கும் அழைக்கிறது. கல்வி சார்ந்த நிறுவனங்களை நடத்தி வருவதோடு கல்வி சார்ந்த பல்வேறு பணிகளையும் தினமலர் செய்து வருகிறது.

கவின்கேர் நிறுவனத்தை அறிந்திருப்பீர்கள். முதன்முதலில் பாக்கெட்டில் சிக் ஷாம்பூ விற்பனையைத் தொடங்கிய நிறுவனம். இந்நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த தொழில்முனைவோர்களுக்கு விருதளித்து பாராட்டுவதோடு வணிகத்திற்கான ஐடியாக்களையும் பெறுகிறது. தேர்வு பெற்ற ஐடியாக்களை செயல்படுத்த நிதியும் அளித்து உதவுகிறது. சமூக பொறுப்புணர்விலும் தனது தொழில்தளத்திற்கான இடத்தை கண்டுபிடிக்க முனையும் கவின்கேர் நுகர்பொருள் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.

தொடரும்....