அண்ணன் தம்பிகளின் பாசமும், சண்டையும்! - கும்பளாங்கி நைட்ஸ்
கும்பளாங்கி
நைட்ஸ் மலையாளம்(2019)
இயக்கம்
– மது ஸ்ரீ நாராயணன்
இசை - சுஷின் ஸ்யாம்
திரைக்கதை - ஸ்யாம் புஷ்கரன்
கேரளத்தில்
ஆற்றின் கரையில் வாழும் குடும்பத்தின் கதை. அந்தக் குடும்பத்தின் கலாசாரமே வேறுமாதிரி
என ஊருக்குள் பேசினாலும், சகோதரர்களின் பாசம் மட்டும் குறைதில்லை. குடும்பத்தின் மூத்தவன்
ஷாஜி. மெக்கானிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறான். இளையவன் பாபி, வயர்லெஸ் ஸ்பீக்கரில்
பாட்டு கேட்டுக்கொண்டு சில்லறை வேலைகளை செய்து வருகிறான். நடுச்சகோதரன் டான்ஸ் அகாடமியில்
பணிபுரிந்து வருகிறான். இளையவன் பள்ளியில் படித்து வருகிறான்.
பாபியில்
வாழ்க்கையில் வரும் மாற்றம் அவனோடு பள்ளியில் படித்த பேபி மூலம் வருகிறது. பள்ளியில்
பாபிக்கு லவ் லெட்டர் கொடுக்க முயன்று தோற்றவள் பேபி. இப்போது வேலையில்லாமல் சோம்பிக்கிடக்கும்
பாபியைப் பார்த்ததும் அவளுக்கு காதல் காவிரி வெள்ளமாக பொங்குகிறது. அணைபோட அவளது குடும்பத்தினர்
முயல்கின்றனர். குறிப்பாக அவளது அக்காவின் கணவர், பகத் பாசில்.
ஷாஜியின்
குடும்பம் வறுமையில் உள்ளதாலும், அவரின் தந்தையின் இருதார மணத்தாலும் அவரது தம்பி பாபிக்கு
பேபியை கொடுக்க மறுக்கின்றனர். பெண் கேட்க பகத்தின் சலூனுக்கே ஷாஜியும், பாபியும் செல்கிறார்கள்.
அங்கு அவர்களை சாமர்த்தியமாக பேசி அவமானப்படுத்தி அனுப்புகிறார் பகத். பாபியின் நண்பரின்
திருமணவிழாவில் முறைப்படி திருமணம் நடைபெறாது பாபியின் அண்ணன் ஷாஜிக்கு தெரிந்துவிடுகிறது.
வீட்டை விட்டு ஓடிவந்துவிடுகிறேன் என பேபி சொல்கிறாள். பாபிக்கும் பேபிக்கும் திருமணம்
நடந்ததா, ஷாஜி அண்ணன் என்ற பொறுப்பை உணர்ந்தாரா, சகோதரர்களுக்கு இடையிலான சீரானதா என்பதுதான்
கதை.
ஆஹா
படத்தில்
அனைத்து காட்சிகளையும் ஊரைச்சுற்றி எடுத்தே அழகு செய்திருக்கிறார்கள். மனிதர்கள், உறவுகள்,
ஆகியவற்றை அழகாக சொல்லியிருக்கிறார்கள். ஷாஜி மெல்ல தன்மீது மனிதர்கள் வைத்திருக்கும்
அன்பையும் நம்பிக்கையையும் நண்பரின் இறப்பின்போது உணர்வது, மருத்துவரிடம் அனைத்து விஷயங்களையும்
சொல்லி அழுவது என நடிப்பில் பின்னியிருக்கிறார். படத்தில் இது சரியில்லை என்று சொல்லுவதற்கு
விஷயங்கள் ஏதுமில்லை.
படத்தில்
படு சுவாரசியமாக கதாபாத்திரம் பகத்தான். சிரிக்கிறாரா கோபப்படுகிறாரா என்று அவரின்
மனைவி மட்டுமல்ல பார்க்கும் நமக்கே குழப்பாக இருக்கிறது. இந்த சைக்கோ வில்லனை இறுதிக்காட்சியில்தான்
புரிந்துகொண்டு வாயை பிளக்கிறோம். அப்படி நடித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும்
சார்தான்.
கலாசாரம்,
பண்பாடு என்ற விதிகளை நம் உடல்களைச்சுற்றி கயிறுகளாக இறுக்கி உடலும், மனதும் கடினப்பட்டு
போயிருப்பதை நுட்பமாக சொல்லியிருக்கிறார்கள். ஷாஜி சகோதரர்களிடம் பணம் இல்லையென்றாலும்
அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடிவதற்கு அவர்கள் பிடித்த விஷயங்களை செய்வதே காரணமாக
இருக்கிறது. அவர்களின் வீடு, சுதந்திரமாக இருக்கவும் இயங்கவும் அதுவே அடிப்படையாக உள்ளது.
கோமாளிமேடை டீம்