சிஎஸ்ஆர்: தன்னாவலர்களின் பங்களிப்பும், திட்டத்தின் நோக்கமும்!




NBC Bearing | Sustained & Effective CSR Approach
என்பிசி




8

தன்னார்வலர்களின் பங்கு

கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்வேறு தன்னார்வ நிறுவனங்களை இணைத்துக்கொண்டு பணிபுரிகின்றனர். ஆனாலும் முடிந்தவரை இந்த செயல்பாட்டில் தங்கள் நிறுவன ஊழியர்களின் பங்கினையும் உறுதி செய்கின்றனர். காரணம், நிறுவனத்தின் சமூகம் சார்ந்த ஈடுபாட்டை, பொறுப்பை ஊழியர்கள்தானே பிறருக்கு சொல்ல முடியும்.?

ரிவல்யூஷன் ஆப் தி ஹார்ட்’ என்ற நூலில் ஆசிரியர் பில் ஷோர் நிறுவனங்கள் தம் ஊழியர்களை ஈடுபடுத்தி செய்யும் சமூகப்பணிகளைக் குறிப்பிடுகிறார். மருத்துவர் தம் நேரத்தை ஒதுக்கி குழந்தைகளை இலவசமாக சோதிப்பது, தச்சு வேலைக்காரர் மரச்சாமான்களை பழுதுநீக்கிக் கொடுப்பது, ஆசிரியர் வறுமைகோட்டிற்கு கீழுள்ள தெரு சிறுவர்களுக்கு கல்வி கற்பிப்பது ஆகியவை செயல்பாடுகள் சமூகப் பொறுப்புணர்வுக்கு முக்கியமான சான்றுகள் என்கிறார். இது இனக்குழு சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறுகிறார். மேற்சொன்னவை தன்னார்வ செயல்பாடுகளாகும்.

நிறுவனங்கள் தம் ஊழியர்களுக்கு ஆண்டு இறுதியில் குறிப்பிட்ட நாட்களை சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களுக்காக ஒதுக்கி பணிகளைச் செய்ய வைப்பது, பொது விழிப்புணர்வு பிரசாரங்களைச் செய்வது ஆகியவற்றை செய்கின்றன. மற்றபடி சுயமாக முன்வந்து தன்னுடைய திறமைகளை சமூகத்திற்கு வழங்குவது தனிப்பட்டவர்களின் பொறுப்புணர்வு சார்ந்தது.

ஃபோர்டு நிறுவனம், ஏழைமக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளை கட்டித்தருகிறது. ஹெச்பி நிறுவனம் வறுமை நிலையிலுள்ளவர்களுக்கும் தொழில்நுட்பம் சென்று சேர உதவுகிறது. ஃபெட்எக்ஸ் நிறுவனம் குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிப்பது பற்றிய பணிகளை செய்கிறது. ஃபேனி மேக் நிறுவனம், வீடற்ற மக்களுக்கு வீடு கட்டித்தருவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. ஷெல் நிறுவனம், சூழல் பாதுகாப்பு சார்ந்த வளர்ச்சிப் பணிகளைச் செய்கிறது. ஏடி அண்ட் டி நிறுவனம், செஞ்சிலுவை சங்கப் பணிகளில் தன் ஊழியர்களை ஈடுபடுத்தி வருகிறது. லீவிஸ் ஸ்டிராஸ் நிறுவனம் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு, உணவு வழங்குதல் ஆகிய பணிகளை செய்கிறது.




சவால்கள்

கார்ப்பரேட் நிறுவனம், தனது மூன்று லட்சம் ஊழியர்களை குறிப்பிட்ட மணிநேரம் சமூகப்பணிகளை செய்ய வைத்து சம்பளம் வழங்குகிறது. அந்த குறிப்பிட்ட மணிநேர உற்பத்தி திறன் என்பது நிறுவனத்திற்கு உதவாது. எனவே, இந்தவகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வழியாக சமூக பொறுப்புணர்வு திட்டங்களை செய்வது பெருநிறுவனங்களுக்கு லாபகரமான ஒன்று.

செய்தியை அனைவருக்கும் புரியும்படி ஏற்க வைத்து பணிகளைச் செய்வது கடினம். நிறுவனம் தனக்கென தனித்துவமான நோக்கத்தைக் கொண்டது. பணிபுரிபவர்களுக்கும் தனி நோக்கம் உண்டு. இவை ஒன்றாக இணையாதபோது நிறுவனம் நினைத்த நோக்கத்தை அடைய முடியாது.

ஐபிஎம் நிறுவனம் பல்லாண்டுகளாக இளைஞர்களின் கல்வி சார்ந்த முயற்சிகளை ஊக்குவித்து வருகிறது. இந்த நிறுவனம் கணினி மற்றும் அது சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனம். தான் செய்யும் சமூக பொறுப்புணர்வு திட்டங்களை நோக்கத்தோடு இணைக்கவில்லையெனில் அதில் பெறும் பயன்களை அறிய முடியாது. எனவே சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களை கவனமாக வடிவமைப்பது அவசியம்.

சமூக பொறுப்புணர்வை தனித்திட்டங்களாக செய்யவேண்டும் என்பதில்லை. இப்போது சிட்டி யூனியனின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் இடத்திற்கு செல்கிறீர்கள். அதைப் பயன்படுத்தி பணம் எடுக்கிறீர்கள். உங்களுக்கு ரசீது வராது. காரணம், காகித ரசீதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. டிஜிட்டலாக இருப்புத்தொகையை சோதித்துக்கொள்ளுங்கள் என்று செய்தி மட்டும் வரும். உங்களுக்கு போனில் எடுத்த பணத்திற்கான தகவல் வந்துவிடும். இதுபோல இயற்கைச்சூழல், விபத்து, ரத்ததானம், நோய்கள் தடுப்பு என பல்வேறு விஷயங்களை சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களாக மாற்றி அதில் பங்களிக்கலாம்.

மக்களின் வாழ்க்கையில் பங்களிக்கும் வங்கிகள், உணவுத்துறை நிறுவனங்கள், குளிர்பான நிறுவனங்கள் பெரும்பாலும் புதிய சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களை தீட்டி மக்கள் மீதான தங்களது அக்கறையைக் காட்டுகிறார்கள். மெக்டொனால்டு ஒருமுறை மகிழ்ச்சியான உணவு என்ற பெயரில், உணவு, உடற்பயிற்சி நூல் ஆகியவற்றை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. கொகோகோலா நிறுவனம் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் சார்ந்த விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து மக்களின் மனதை வென்றது. பன்னாட்டு உணவு நிறுவனமான கிராஃப்ட் புட்ஸ், தாங்கள் விற்கும் உணவுப் பொருட்களில் உள்ள கலோரி சத்து பற்றிய விவரங்களை பாக்கெட்டுகளில் அச்சிட்டு விற்றது கூட மக்களின் ஆரோக்கியம் பற்றிய அக்கறையில்தான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் அபாயகர அளவில் காரீயம் உள்ளதாக செய்தி வெளியானது. இதற்குப் பிறகு மேகி நூடுல்ஸ் தனது செயல்பாடுகளை வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றியது. தங்களின் உணவு ஆரோக்கியமானது என விளம்பரம் செய்து மீண்டும் சந்தையில் வெற்றி கண்டது. அந்த சர்ச்சை வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றதால் வணிகப்பங்கை சந்தையில் இழந்தது. ஆனால், தனது பொருட்கள் மீதான நம்பகத்தன்மையை நிரூபித்து இன்றும் இந்தியாவில் தனது பொருட்களை வெற்றிகரமாக விற்று வருகிறது. ஏராளமான புது வகைகளை வேறுபட்ட சுவைகளில் அறிமுகப்படுத்தி வருகிறது.

1998ஆம் ஆண்டு புகழ்பெற்ற காபி தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஸ்டார்பக்ஸ், கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் என்ற சூழல் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதாவது, இந்த ஒப்பந்தப்படி காபி பயிரைப் பயிரிடும் விவசாயிகளுக்கு சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பல்வேறு விவசாய செயல்பாடுகளை ஸ்டார்பக்ஸ் மற்றும் கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் அமைத்து தரவேண்டும். இதன்மூலம் ஸ்டார்பக்ஸ் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான உறவு நெருக்கமாகும். அவர்கள் சமூக பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் வரும்.

வென்றது எப்படி?

சரியான திட்டமிடுதலை செய்தனர். மேலும் சூழல் விஷயங்களில் அனுபவமுள்ள நிறுவனத்துடன் இணைந்தனர். அடுத்து, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் திட்டங்களை செயல்படுத்தினர். திட்டங்கள் நிறைவேறியதையும் அதற்கு ஏற்பட்ட சவால்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டனர். நீண்டகால முதலீட்டில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் நம்பிக்கை கொண்டிருந்தது. முதல் திட்டமாக மெக்சிகோவில் உள்ள எல் ட்ரூன்ஃபோ காடுகளை பாதுகாக்கும் செயல்பாடுகளை செய்தனர். ஸ்டார்பக்ஸ் சூழலுக்கு அதிக மாசுபாடு ஏற்படாத காபி கொட்டைகள் உற்பத்தியில் கவனமாக இருந்தது.

கிராஃப்ட் புட்ஸ் நிறுவனம் இதுபோலவே முக்கியமான முடிவை தனது ஓரியோ பிஸ்கெட் விவகாரத்தில் எடுத்தது. உடல் பருமன் பற்றிய சர்ச்சைகள் அப்போதுதான் அமெரிக்காவில் தொடங்கியிருந்தன. அதனை பயன்படுத்திக்கொண்டு வியாபாரத்தில் வெல்ல கிராஃப்ட்ஸ் திட்டம் தீட்டியது. அடுத்து அவர்கள் விற்ற ஓரியோ பிஸ்கெட் ரேப்பரில் குறைந்த கொழுப்பு கொண்ட பிஸ்கெட் மாறாத அதே சுவையில் என விளம்பரப்படுத்தியது. இந்த பிரசாரத்தை செய்த முக்கிய வணிக நிறுவனமான கிராஃப்ட் புட்ஸ் பாரட்டப்பட்டதோடு, உடல்பருமன் பிரச்னை தேசிய அளவில் பேசப்படும்படி செய்தது. தனது வணிகத்தையும் அதை நோக்கி நகர்த்திக்கொண்டு வென்றது.

முக்கியமான யோசனைகள் சில.

சமூகப் பிரச்னைகளில் நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு பொருத்தமானதை தேர்தெடுக்கவேண்டும். அதில் கவனம் வைத்து தொடர்ந்து பிரசாரம் செய்வது அவசியம்.

பெரு நிறுவனங்களோடு இணையும் பிற தன்னார்வ நிறுவனங்களை கவனமாக தேர்ந்தெடுப்பது அவசியம். இந்த நிறுவனங்களின் விதிகள் பெரு நிறுவனங்களின் விதிகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே செயல்பாட்டில் வெற்றி சாத்தியம்.

பெரு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை, சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் ஊக்குவிப்பதாக அமைய வேண்டும்.

சமூகத்திற்கான அக்கறையோடு பொருட்களின் தரம், மேம்பாடு ஆகியவற்றை பற்றியும் நிறுவனங்கள் கவனம் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான் புதிய தலைமுறையினரையும் ஈர்த்து வாடிக்கையாளர்களை கவர முடியும்.



பிரபலமான இடுகைகள்