சிஎஸ்ஆர்: கடைபிடிக்கவேண்டிய வெற்றி விதிகள்


Corporate Social Responsibility (CSR): implications for HR
glocal thinking






9

வெற்றி விதிகள்

இந்தியாவில் சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கான நிதியை தேசியப் பேரிடர் பிரச்னைகளுக்கும் வழங்கலாம் என அறிவித்திருக்கிறது. இந்திய அரசு. இதனால் பல்வேறு பெரு நிறுவனங்கள் கொரோனா பாதிப்புக்கு தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியை வழங்க உள்ளன. இம்முறை வணிகம் பாதிப்பு, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் ஊழியர்களுக்கு முழு சம்பளம் தருவதே சிக்கலாக உள்ள நிலைமை. இதில் பொதுமக்களுக்கான செலவுகள் என்பதை நிறுவனங்கள் கடைசியாகத்தான் யோசிப்பார்கள்.

சில தன்னார்வலர்கள், கூலித் தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, சோப்பு என அவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர். சமூக பொறுப்புணர்வுத் திட்டம் என்பது காகிதத்தில் இருப்பதோடு, நடைமுறையிலும் வருவது முக்கியம். ஆனால் பெரும்பாலும் அதில் நிறைய நிறுவனங்கள் சொதப்பிவிடுகின்றன. காரணம், சமூகப் பிரச்னைகளை எப்படி தேர்ந்தெடுப்பது, அதில் கவனம் குவிப்பது சார்ந்த சந்தேகங்கள்தான். அதற்கு சில உதாரணங்களையும் விதிகளையும் இங்கே பார்ப்போம்.

சமூக பிரச்னைகளை தேர்ந்தெடுங்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் மியூசுவல் என்ற நிறுவனம் இன்றுவரை மாணவர்களின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு மட்டுமே பிரசாரம் செய்கிறது. வேறு விஷயங்களில் கவனம் குவிக்கவில்லை. ஏவான் என்ற இங்கிலாந்து நிறுவனம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் தடுப்பு, சிகிச்சை பற்றியே மட்டுமே விழிப்புணர்வு செய்துவருகிறது. இப்படி செய்வதன் மூலம் அத்துறை சார்ந்த பல்வேறு தன்னார்வ நிறுவனங்களை உருவாக்க முடியும். அத்துறையில் பல்வேறு முன்னேற்றங்களை வளர்ச்சியை உருவாக்க முடியும்.

பிரச்னைகளை கவனியுங்கள்

பெருநிறுவனங்கள் எங்கு வணிகம் செய்கிறதோ அங்குள்ள பிரச்னையை கையில் எடுத்து அதை தீர்ப்பதற்கான செயல்பாடுகளை முடுக்க வேண்டும். கிராஃப்ட் புட்ஸ், அமெரிக்காவில் உடல்பருமன் பாதிப்பை ஆய்வு மூலம் அறிந்து அதற்கு எதிரான பிரசாரத்தை கையில் எடுத்தது. ஹோம் டிபாட் நிறுவனம், தனது வியாபாரப் பகுதியில் நீர் தட்டுப்பாட்டை விழிப்புணர்வு பிரசாரம் செய்து கவனிக்க வைத்தது.

நோக்கம், மதிப்பு, சேவைகள்

ஏடி அண்ட் டி நிறுவனம், புயல், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தனது நிறுவன போன்களை இலவசமாக வழங்கியது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் நெடுஞ்சாலையில் விபத்து பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி சீட்பெல்டுகளை இலவசமாக பொருத்தி தநதது. இதன் மூலம் சமூக அக்கறை, அதன் நோக்கம் ஆகியவற்றில் தெளிவாக இருந்தது. மக்களின் மனதில் அழுத்தமான முத்திரையைப் பதித்து வணிகத்திலும் வென்றது.

செலவுகள் குறையவேண்டும்

ஹார்ட்வர்டு வணிகப்பள்ளியைச் சேர்ந்த மைக்கேல் போர்ட்டர், பெரு நிறுவனம் சமூகத்திற்கான பணிகளை செய்கிறது. அத்தோடு அதன் மூலம் தனது வலிமையை அதிகரித்துக்கொள்வதோடு பங்குதாரர்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும். சமூக பொறுப்புணர்வுத் திட்டங்கள் கவனிக்கப்பட்டால் நிறுவனத்திற்கான விளம்பரச் செலவைக் குறைத்துவிடலாம். நிறுவனங்கள் ஒற்றை குறிக்கோளை கொண்டு இந்த திட்டங்களில் செயல்படக்கூடாது. ஊழியர்கள், சந்தை, வாடிக்கையாளர்கள், லாபம் ஆகியவற்றை நோக்கி ஓடவேண்டும் என்கிறார்.

நோக்கமும் வணிகமும்

தனிப்பட்ட மனிதர்களுக்கான காப்பீட்டை வழங்கும் நிறுவனம் சஃபெக்கோ. இந்த நிறுவனம் தீயை அணைக்க உதவும் பொருட்களை வாங்கித் தர மக்களை வேண்டியது. தனிநபர்கள் இது பற்றி கவனம் கொண்டால் மட்டுமே அவர்கள் செல்லும் இடங்களில் துணிச்சலாக தீயை அணைப்பார்கள். அதுபற்றிய கவனைத்தைக் கொண்டிருப்பார்கள் என்று திட்டம் தீட்டி விழிப்புணர்வு செய்து மக்களின் கவனம் ஈர்க்கலாம்., இதுவே நாடு முழுக்க தீ அணைக்கும் கருவியை வாங்கினால் லாபம்தானே? அப்படி கணக்கு போட்டு சஃபெகோ வென்றது.




ஒரே நோக்கம் பல்வேறு செயல்பாடுகள்

பென் அண்ட் ஜெர்ரி நிறுவனம் வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வு திட்டத்தை தயாரித்ததை முன்னமே படித்திருக்கிறோம். அதேபோல இதையொட்டிய மையப்பொருளில் உருவாக்கிய ஐஸ்க்ரீம் சிறப்பாக விற்றது. மேலும் இந்த ஐஸ்க்ரீம் ரேப்பரில் வெப்பமயமாதல் பற்றி எழுதிய விஷயங்கள் மக்களின் சிந்தனையைத் தூண்டின. இதன் விளைவாக பெருமளவு வெளியாகும் கார்பன் டை ஆக்சைடை குறைக்கும் செயல்பாட்டிற்காக பல்லாயிரம் மக்கள் தங்களின் கோரிக்கைகளை அதிபருக்கு அனுப்பினர். வெப்பமயமாதல் என்ற ஒன்றைப் பிடித்தே தொங்காமல் தெற்கு டகோடாவில் காற்றாலை ஒன்றையும் அரசை நிறுவ வைத்தது இந்த நிறுவனம். நோக்கம் ஒன்றுதான் என்றாலும் அதனை பல வகையில் அடைய முடியும் என்று இன்றுவரை நிரூபித்து வருகிறது பென் அண்ட் ஜெர்ரி நிறுவனம்.

சரியான ஆதரவாளர்கள் மற்றும் உழைப்பு

ஜான்சன் அண்ட் ஜான்சன், பற்றாக்குறையாக உள்ள நர்ஸ்கள் தொடர்பான சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தை தொடங்கி வெற்றிகண்டது. இதற்கு காரணம், நாடெங்கும் உள்ள நர்ஸ் சங்கங்களை இந்த நிறுவனம் இணைத்துக்கொண்டதுதான். தொடர்ச்சியாக இதுபோன்ற திட்டத்தை வளர்த்தெடுத்தால் மட்டுமே இத்திட்டங்களை வரலாறு பேசும். ஃபேனி மே என்ற நிறுவனம் வீடற்றவர்களுக்கான உதவிகளை பல்லாண்டுகளாக வழங்கி வருகிறது. 90 ஆயிரம் டாலர்கள் உதவிகளை வழங்கத்தொடங்கி இன்று 6.2 மில்லியன் டாலர்களுக்கு மேல் நிதியை சேகரித்து மக்களுக்கு வழங்கியுள்ளது.

திட்டங்களை மேம்படுத்தல்

குழந்தைகளுக்கான உணவு என்பது பழைய விஷயம்தான். ஆனால் பரேடு எனும் இதழ் இதுபற்றிய கட்டுரையை எழுத குழந்தைகளுக்கான உணவு நிதி அதிகரித்தது. லைசோல் அமெரிக்காவை சுத்தமாக வைத்திருப்போம் என்ற திட்டத்திற்கான நிதியை சேகரித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனம் வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள மக்களுக்கு தொழில்நுட்ப கல்வியை வழங்கி வருகிறது. மேற்சொன்ன அனைத்தும் எப்போதும் சமூகத்தில் உள்ள பிரச்னைகள்தான். ஆனால் இவற்றை தொடர்ச்சியாக பிரசாரம் செய்யும் போது அதன்மீதான பொதுமக்களின் கவனம் அதிகரிக்கிறது.

இதுவரை நீங்கள் பார்த்தது அடிப்படையான சமூக பொறுப்புணர்வுத் திட்டம் எப்படி அமையவேண்டும் என்பதுதான். இதிலுள்ள எடுத்துக்காட்டுகளில் உள்ளவை அமெரிக்க நிறுவனங்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அடிப்படையான நோக்கம் சரியாக இருந்ததால் உங்களால் சமூக பொறுப்புணர்வு திட்டத்தையும் அதோடு வணிகத்தையும் வெற்றிகரமாக வளர்ச்சி பெறச்செய்ய முடியும். நன்றி

 இந்த சமூக பொறுப்புணர்வு திட்டம் தொடரை தங்களுடைய தினமலர் பட்டம் இதழில் எழுத அனுமதி அளித்த பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ், தொடர்ந்து ஊக்குவித்து உற்சாகமூட்டிய நண்பர் பாலபாரதி அவர்களுக்கும் நன்றிகள்.   


பிரபலமான இடுகைகள்