ஆசையை துறக்கும் உலகின் சிறந்த வாள் வீரன்! - தி வாரியர்ஸ் வே
வாரியர்ஸ் வே -கொரியா(2010)
இயக்கம்
–லீ சியூங்மூ
ஒளிப்பதிவு - வூ ஹியூங் கிம்
இசை ஜேவியர் நவரெட்டே
உலகில்
மிகச்சிறந்த வாள் வீரனாக ஆசைப்படும் வீரன் ஒருவனின் கதை. அவனுக்குள் இருக்கும் கருணை
உணர்வு அவனை வீழ்த்திவிடும் என அவனது குரு எச்சரிக்கிறார். அதையும் மீறி எதிரிப்படையினரைச்
சேர்ந்த குழந்தை ஒன்றை எடுத்து வளர்க்கிறான்.
அது அவரது குருவுக்கு கடுமையான கோபத்தை
ஏற்படுத்துகிறது. அவர் தன் சீடன் கொன்ற ஆட்களைத் தவிர்த்த மீதி ஆட்களைத் திரட்டிக்கொண்டு
அவனை பின்தொடர்கிறார். நாயகன் குழந்தையை எடுத்துக்கொண்டு தனது நண்பன் வாழ்ந்த ஊரை நோக்கிப்
போகிறான். அங்கு நண்பன் இல்லை. ஆனால் அவன் நடத்திவந்த விடுதி இருக்கிறது. அங்கேயே தங்கும்போதுதான்
அங்கு அடிக்கடி வந்து பொருட்களையும் பெண்களையும் கொள்ளையடித்துப்போகும் படைவீரன் ஒருவனைப்
பற்றி தெரிய வருகிறது. அவனைப் பழிவாங்க துடிக்கும் இளம்பெண்ணுக்கு நாயகன் உதவுகிறான்.
அந்த ஊரின் பிரச்னையில் தலையிட வேண்டாம் என்றாலும் சூழல் அவனை விடுவதாக இல்லை. இந்த
நிலையில் அவன் அந்த ஊர் மக்களைக் காப்பாற்றினானா? இளம்பெண் தன் அப்பாவைக் கொன்றவனை
பழிவாங்கினாளா? குரு, நாயகனை தோற்கடித்து குழந்தையைக் கொன்றாரா என்பதே மீதி கதை.
வாள்
வீச்சு, எப்படி அதனைக் கற்க வேண்டும், மனத்தின் கவனம் குன்றாது பயில்வது என பல்வேறு
விஷயங்களை படத்தில் கூறியிருக்கிறார்கள். சண்டை என்று வரும்போது இதில் வாள்களுக்கு
நிகராக துப்பாக்கிக் குண்டுகளும் சீறுகின்றன. நிஞ்சா படையினரின் சண்டைகளும் பிரமிக்க
வைக்கின்றன. இறுதிக்காட்சி சண்டைக்குப் பிறகு நாயகன் எடுக்கும் முடிவு பொருத்தமானதாகவே
தோன்றுகிறது. வாள்வீச்சு பற்றிய கதை என்றாலும் அதிலும் வாழ்க்கை தத்துவத்தை புகுத்தி
பல்வேறு விஷயங்களை பேசி பார்வையாளர்களுக்கு புரிய வைக்க முயன்றிருக்கிறார்கள்.
கோமாளிமேடை டீம்