மனநலனைக் கட்டுப்படுத்தும் உயிரிவேதியியல் மருந்துகள் - மனமறிந்து பழகு இறுதிப்பகுதி!

Man, Think, Laying, Brain Icon, Mind, Thinking
pixabay

மனமறிந்து பழகு! - இறுதிப்பகுதி

வேதிப்பொருட்களால் சிகிச்சை

ஒருவருக்கு சூழல்களாலும், தன்னுடைய குழந்தைப்பருவ வலி நிரம்பிய அனுபவங்களாலும் பாதிப்பு ஏற்படலாம். அதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் இயல்பாக, பழக்கவழக்கமாக மாறிவிடுவதை தெரபிகளால் மட்டுமே குணப்படுத்திவிட முடியாது. அதற்காகவே வேதியியல்ரீதியான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவில் 2017ஆம் ஆண்டு எடுத்த ஆய்வுப்படி, அங்கு 1999 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் மன அழுத்த மருந்துகளின் பயன்பாட்டு அளவு 95 சதவீதம் கூடியுள்ளது.

இதற்கு முக்கியக் காரணம், தொழில்துறை மாற்றங்கள், பொறுப்புகள் கூடியுள்ளதும், உறவு சார்ந்த சிக்கல்களும் முக்கிய காரணமாக உள்ளன. இவற்றுக்கு தெரபியோடு மூளையிலுள்ள செரடோனின் போன்ற மனநிலையை மாற்றும் சுரப்புகளைக் கட்டுப்படுத்த மருந்துகள் வழங்கப்படுகின்றன. இவற்றை மருத்துவரின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்தவேண்டும். இந்த மருந்துகளுக்கும் உடல் கட்டுப்பட மறுத்தால், இறுதிக்கட்டமாக மூளையில் சிறிய அளவு மின்சாரம் செலுத்தப்படும்.

இப்போது மனநல சிகிச்சைகளுக்குப் பயன்படும் மருந்துவகைகளைப் பார்ப்போம்.

ஆன்டி டிப்ரசன்ட்ஸ் மருந்துகள், ஒருவருக்கு ஏற்படும் மன அழுத்தம், பதற்றம், மகிழ்ச்சியில்லாத தன்மை, ஆகியவை ஏற்படும்போது வழங்கப்படுகின்றன. டிரைசைக்ளிக்ஸ், செரடோனின் நோர்பைன்பிரின் மருந்துகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. இம்மருந்துகள் மூளையிலுள்ள வேதிப்பொருட்களை கட்டுப்படுத்துகின்றன. இதனால் செரடோனின், டோபமைன், நோர்பைன்பிரின் அளவு மூளையில் அதிகரிக்கிறது. இவை அடிக்கடி மனநிலை மாறும் பிரச்னையைத் தீர்க்கிறது. இதன் பக்க விளைவாக உடலுறவில் ஆசை குறைதல், எடை அதிகரிப்பு, தலைவலி, குமட்டல் ஆகியவை ஏற்படுகின்றன.

ஆன்டிசைக்கோட்டிக்ஸ் மருந்துகள் ஸிசோபெரெனியா, ஆளுமை பிறழ்வு ஆகிய பாதிப்புகள் உள்ள நோயாளிக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இம்மருந்துகள் மூளையில் சுரக்கும் டோபமைன் சுரப்பைக் கட்டுப்படுத்துகின்றன. இதன் விளைவாக காதில் கேட்கும் குரல்கள், கற்பனைக்காட்சிகள் குறைகின்றன. எதிர்மறை எண்ணங்கள் குறையத் தொடங்குகின்றன. இம்மருந்துகளின் பக்கவிளைவாக உடல் சோர்வு தோன்றும். இறுக்கமாக இருப்பார்கள். உடல் வெப்பநிலை கூடும்.

ஆன்டி ஆக்சைட்டி மருந்துகள், பதற்றக்குறைபாடு, ஓசிடி, பிடிஎஸ்டி ஆகிய பாதிப்புகளுக்கு தீர்வு தருகின்றன. பென்சாபைன்டைன், பஸ்பைரோன், செரடோனின் – நோர்பைன்பிரின் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பயன்படுகின்றன. இவை தசையில் ஏற்படும் இறுக்கத்தைக் குறைத்து உடலையும் மனதையும் நெகிழ்வாக்குகின்றன. இம்மருந்துகளின் பக்கவிளைவாக உடல்சோர்வு, கிறுகிறுப்பு, கவனமின்மை, பேச்சு குளறுவது ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மூட் ஸ்டேபிலைசர்ஸ் மருந்துகள், ஆளுமை பிறழ்வு, மனநிலை மாற்றம், பதற்றக் குறைபாடு பிரச்னைகளுக்கு தீர்வு தருகின்றன. லித்தியம், கார்பாமேசைன், அசெனாபைன் ஆகிய மருந்துகள் இக்குறைபாடுகளுக்கு பயன்படுகின்றன. இவை, டோபமைன் சுரப்பைக் கட்டுப்படுத்துகின்றன. மனதை அமைதியாக்கும் வேதிப்பொருட்களை உருவாக்குகின்றனர். இம்மருந்துகளின் விளைவாக ஓய்வு எடுக்காமல் அலைவார்கள். உடலுறவில் ஆர்வம் குறையும். உணர்வுகளை வெளிப்படுத்துவது அதிகரிக்கும். வாய் அடிக்கடி உலர்ந்துபோகும். எடை அதிகரிக்கும்.

ஸ்டிமுலன்ட் மருந்துகள், நார்கோலெப்ஸ்பி, ஏடிஹெச்டி ஆகிய குறைபாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆமெட்டமைன், காஃபீன், நிகோட்டின் ஆகிய வேதிப்பொருட்கள் சிகிச்சைக்குப் பயன்படுகின்றன. டோபமைன், நோர்பைன்பிரின் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் கவனம், யோசிக்கும், பேசும் கருத்துகளின் கோர்வைத்தன்மை அதிகரிக்கிறது. உடலில் விழிப்புணர்வுத் தன்மை கூடுகிறது. இதன் பக்கவிளைவாக பதற்றம், இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. எடை இழப்பு, தூக்கமின்மை ஏற்படுகிறது.

தூக்கமின்மையைப் போக்க தூக்க மருந்துகள் பயன்படுகின்றன. ஆன்டிஹிஸ்டாமைன்ஸ், பென்சாபைன்டைன் ஆகிய மருந்துகள் இதில் அதிகம் பயன்படுகின்றன. இம்மருந்துகளின் பக்கவிளைவாக ஞாபகமறதி, உடல்சோர்வு, கிறுகிறுப்பு ஏற்படுகிறது.

டிமென்ஷியாவுக்கு மருந்துகள் கிடையாது. இதன் பாதிப்பை மட்டுப்படுத்த கோலினெஸ்ட்ரேஸ் மருந்து பயன்படுகிறது. இதன் பக்கவிளைவாக எடை இழப்பு, வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ் - சைக்காலஜி நூல்

சைக்காலஜி டுடே வலைத்தளம்

இத்தொடரை எழுத ஊக்கமளித்த தோழர் பாலபாரதி, கணியம் சீனிவாசன், ஃப்ரீதமிழ்இபுக்ஸ் குழு, கே.என். சிவராமன், இளங்கோ கிருஷ்ணன், கதிரவன் கருணாநிதி, கார்ட்டூன் கதிர், வெங்கடசாமி ஆகியோருக்கு எனது நன்றிகள்

தொகுப்பு: அன்பரசு சண்முகம், கா.சி வின்சென்ட்



கருத்துகள்