உணவுக்காக கரும்பு வெட்டச்செல்லும் பழங்குடி மாணவர்கள்! - பள்ளிகள் திறக்கப்படாததால் அவலம்!






பசி – jawathsaleem




உணவின்றி தவிக்கும் பழங்குடி மாணவர்கள்

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆங்கிலத்தில்: ஜெயலக்ஷ்மி ராமானுஜம்

தமிழ்நாடு முழுக்க கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பால் பீதியில் ஆழ்ந்திருக்கிறது. இந்த நேரத்தில் பள்ளியில் அளிக்கப்பட்டு வந்தத மதிய உணவுத்திட்டத்தை நம்பியிருந்த பழங்குடி மாணவர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். பசி இப்போது அவர்களை கூலித்தொழிலாளர்களாக மாற்றியுள்ளது.

தமிழ்நாட்டில் 43 லட்சம் மாணவர்கள் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். 1956ஆம்ஆண்டு மதிய உணவுத்திட்டம் முன்னாள் முதலமைச்சரான காமராஜர் மூலம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டது. அந்நாளில் நிறைய மாணவர்கள் வசதியின்மையால் பள்ளிக்குச் செல்லாமல் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிக்கொண்டிருந்தனர். அதனை மாற்றி கல்வி மூலம் அவர்களை முன்னுக்கு கொண்டுவர காமராஜர் நினைத்தார். அதற்காக அவர் பள்ளியில் ஒருவேளை உணவேனும் அளிக்கவேண்டும் என மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டுவந்தார். இதற்கான நிதியைக்கூட அன்றைய மத்திய அரசு அளிக்க முடியாது என கையை விரித்துவிட்டது. மக்கள் பலரிடமும் நிதிபெற்று இத்திட்டத்தை முதல் அமைச்சர் காமராஜர் கொண்டு வந்தார்.

பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கான உணவுப்பொருட்களை நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க பல்வேறு கல்வி வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பொதுமுடக்க காலத்தில் சத்துணவுப் பணியாளர்கள் வேலையின்றி இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதேசமயம் மாணவர்களுக்கு அரசு சமைத்த உணவை வழங்குவதும் சாத்தியமில்லை. நம் அருகிலுள்ள கேரள மாநிலத்தில் மாணவர்களுக்கான உணவுப்பொருட்களையும் நியாய விலைக்கடை வழியாக வழங்கிவருகின்றனர். தமிழக அரசு இதைப் பின்பற்றலாம். இப்போதே பழங்குடி மாணவர்கள் உணவுக்காக கரும்புவெட்ட சென்றுவருகின்றனர். பள்ளி தொடங்கினாலும் கூட முன்னர் இருந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்புவது கடினம் என்கிறார் பள்ளிக்கல்வி இயக்கத்தைச் சேர்ந்த வி. வசந்திதேவி.

சிலர் அரசு தரும் உணவுப்பொருட்களுக்கு பதிலாக பணமாக மாணவர்களின் பெற்றோர் கணக்கில் செலுத்தலாம் என்கிறார்கள். சாதாரண நாட்களில் 25 சதவீத மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க அரசு மாணவர்களுக்கான உணவுப்பொருட்களை வழங்க முன்வர வேண்டும்.


கருத்துகள்