நெ.1 சமூகத் தொழிலதிபர் மின்னூல் வெளியீடு! - அமேஸான் வலைத்தளம்
அன்பு நிறை நண்பர்களுக்கு,
வணக்கம். நான் முதலில் முத்தாரம் பொது அறிவு வார இதழில் ஸ்டார்ட்அப் மந்திரம் என்ற தொடரை எழுத தொடங்கினேன். அப்போது பிரதமர் மோடியின் அரசு, ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தை தொடங்கியிருந்தது. இத்திட்டத்தின் கீழ் நிறைய நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் எப்போதும் அரசு மிக நிதானமாக அனுமதிகளை பரிசீலித்து செம்மையாக பணியாற்றியதில் பல்வேறு நிறுவனங்கள் காணாமல் போயின. நான் அந்த தொடரை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழை ஆதாரமாக கொண்டே எழுதினேன். அப்போது இணையத்தில் பல்வேறு வலைத்தளங்களை தேடி தகவல் சேகரிக்க யோசிக்கவில்லை. இதழை வேகமாக முடிக்கவேண்டிய டெட்லைன் நெருக்கடி வேறு.
என்னளவில் நான் எழுதிய தொழில்சார்ந்த முதல் தொடர் அது. ஏறத்தாழ எழுதி முடித்தபிறகு பார்த்தால் படுமோசமான எழுத்தாகவே தென்பட்டது. அதற்குப் பிறகுதான், குங்குமத்திற்காக வணிகம் சார்ந்து எழுத ஆசிரியர் கே.என்.எஸ் கேட்டார். ஆனால் பிஸ்னஸ் இந்தியா நிருபர் எழுதிய தமிழக தொழிலதிபர்கள் பற்றிய நூலைப் படித்ததும் புரிந்துவிட்டது. என்னால் தொடருக்கான தகவல்களை திரட்ட முடியாது. எனக்கு தொழில்சார்ந்து எழுதும் திறமை கிடையாது என ஆசிரியரிடம் சொல்லிவிட்டு அந்த வாய்ப்பை கைவிட்டு விலகிவிட்டேன்.
தொழில் சார்ந்து எழுத முடியாவிட்டாலும் பொருளாதாரம் சார்ந்து கட்டுரைகளை எழுத தொடங்கினேன். அவற்றை பணியாற்றிம் கல்வி சார்ந்த இதழில் பிரசுரித்தனர். ஆனால் நூலாக வணிகம் சார்ந்த தொடர் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். எனவே இரண்டிற்கும் மேற்பட்ட நூல்கள், பல்வேறு வலைத்தளங்கள், நாளிதழ்கள் ஆகியவற்றை படித்தேன். தேவையான தகவல்களை சேகரித்த பிறகு நெ.1 சமூக தொழிலதிபர் நூலை எழுத தொடங்கினேன். இந்த நூல் நூறு பக்கங்களுக்கு உள்ளடங்கியது என்பதால், எளிதாக படித்துவிட முடியும். ஸ்டார்ட்அப் மந்திரம் நூல் இருபாகங்களாக பிரதிலிபி வலைத்தளத்தில் உள்ளது. அந்த நூல் தந்த துணிச்சலும், விழிப்புணர்வும்தான் தொழில் சார்ந்த இந்த நூலை எழுதக் காரணம்.
என்னால் தொழில் சார்ந்த நூலை எழுத முடியும் என்று நம்பிய ஒரே மனிதர் குங்குமம் முதன்மை ஆசிரியர் கே.என்.எஸ்தான். இந்த நூலை நான் அவரின் அன்புக்கே சமர்ப்பணம் செய்துள்ளேன்.
இந்த நூலில் அடிப்படையாக ஒருவர் சமூக பிரச்னைகளைத் தீர்க்க என்ன செய்யவேண்டும், எப்படி நிறுவனம் தொடங்கி செயல்படவேண்டும் என்பதை விளக்க முயன்றிருக்கிறேன். இந்த நூல் உங்களில் ஒருவருக்கேனும் சமூக பிரச்னை சார்ந்த செயல்பட, போராட வைத்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.
நன்றி!
அன்பரசு சண்முகம்
அமேஸான் வலைத்தளத்தில் உள்ள நூலை, கணக்கு தொடங்கி நீங்கள் வாசிக்க முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக