லவ் இன்ஃபினிட்டி: காதல் இதயத்தை உடைத்தேன்!







God gave me a new heart!
monina moreno\pinterest



23
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: அரசு கார்த்திக், விபானா





arasyputri


திருவண்ணாமலையில் கவிக்குமார் எனக்கு கற்றுக்கொடுத்தது பலரையும் எப்படி வேலை வாங்குவது என. பேசிப்பேசியே ஒருவரின் மனதைக் கரைத்து...அவரின் இயல்பை சின்னாபின்னமாக்கி இயற்கையே எல்லாம் என நம்ப வைப்பதை மிக இயல்பாக செய்து வந்தார். ஏறத்தாழ சதுரங்கவேட்டை நாயகனைப் போல என்று வைத்துக்கொள்ளுங்கள்.

திடீரென காலையில் பக்தி பெருகும்போது காக்கை அலுவலகத்திலிருந்து நடப்போம். பாதி தூரம் வந்ததும், நடக்க வேண்டாம். டைம் இல்ல என ஷேர் ஆட்டோ பிடிப்பார். இதெல்லாம் இரும்புக்கை மாயாவின் ஆக் சன் வேகத்தில் நடக்கும். அதேசமயம் கார்த்திக்கின் ஸ்க்ரீன் பிரிண்டிங் ஆபீசில் இருந்து சுமக்க முடியாத அளவு புத்தகங்களை, சரவணா ஸ்டோர் பையில் சுமக்க வைப்பார். அவரும் கூடவே சும ப்பார் என்று வையுங்கள். அப்போது ஆட்டோ நிச்சயம் தேவைப்படும் சூழல். ஆனால் நடந்தே போகலாம் என்பார்.

திருவண்ணாமலை பகலில் இருப்பது போல இரவில் இருக்காது. அதன் முக்கிய வருமானமே அண்ணாமலையார் கோவில்தான். நாள்தோறும் கூட்டம் குவிந்துகொண்டே இருக்கும். கிரிவலம் போய்க்கொண்டே இருப்பார்கள்.ஆனால் இதில் முக்கியமானது, இரவுகளில் சாரை சாரையாக செல்லும் கூட்டம். பஸ்ஸ்டாண்டைத் தாண்டிச் சென்றால் ஒரு ஜங்ஷனாக சாலை ஒன்று வரும். அதில் வண்டியில் சென்றால், கார்த்திக்கின் கடை வம்சி புத்தக கடைக்கு அருகில் வரும்.

அதுதான் சென்னையிலுள்ள பஸ்கள் வரும் வழித்தடம். எப்போதும் கூட்டமிருக்கும். அதில் புத்தகங்களை கைகளில் தூக்கியபடி நடப்பதை நினைத்துப் பாருங்கள். கவிதை எழுதுபவர்கள் எவ்வளவு குரூரர்கள் என்பதற்கு நான் உட்பட நிறைய சாட்சிகள் உண்டு. கவிக்குமார் நல்லவர் என்று சொல்ல முடியாது. தேனொழுகப் பேசுவார்; வாக்குறுதி கொடுத்துவிட்டு மின்னலாக மறைந்துவிடுவார். இதையெல்லாம் பின்னாளில்தான் அறிந்துகொண்டேன். குறைந்தபட்ச இழப்போடு தப்பித்தேன்.


அப்போதுதான் மங்கை மலர் என்ற பத்திரிகையாளரைச் சந்தித்தேன். அவர் வழியாக சிற்றிதழ் ஒன்றுக்கு வேலைக்கு சேர்ந்தேன். அங்கு இருமாதங்கள் வேலை செய்தேன். நண்பர் குமரேசனின் கருணையால் அவரின் அறையில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது கையில் இருந்தது வெள்ளை நிற சாம்சங் குரு. பிருந்தா ஆச்சரியமாக போன் செய்தாள். என்னை உண்மையாகவே பிடித்திருக்கிறதா என்று கேட்டாள். ஊர்கதைகளைப் பேசினாள். மிகச்சரியாக மேட்டருக்கு வந்தாள். நீ அவளை மறந்திட்டியா? இப்ப எல்லாம் ஓகேவா என்றாள். அப்போது அவள், ஈரோட்டில் செயல்பட்ட தனியார் பள்ளியில் டீச்சராக இருந்தாள். அறிவியல் எடுக்கிறாள் என்று சொன்னாள். எனக்கு தெரியலை என்று சொன்னதும் அழுதாள். அவளுக்கு வீட்டில் வரன் பார்க்கிறார்களாம். சூப்பர் என ஆர்வமிகுதியில் சொன்னதும், ஆண்மையை பழிக்கிற கெட்ட வார்த்தையைச் சொல்லி போனை அணைத்தாள்.


 சரி வீட்டில் இப்படி ஒரு கேரக்டர் இருந்ததே மறந்து விடுவார்கள் என்று ஊருக்கு வந்தேன். தாடியோடு வந்ததால் அம்மா மிரண்டுவிட்டார். இருபது ரூபாய்க்கு ஷேவிங் பண்றது விக்குதே, அதை வாங்கி ரெண்டு இழுப்பு இழுத்துட்டு வருவானா, இப்படி பரதேசி மாதிரி வந்து நிக்கிறே? என காய்ச்சி எடுத்தாள். அவளை டைவர்ட் பண்ணுவதற்கு ஒரே வாய்ப்பு, சோறு. தயிர் இருக்குதா, சோத்தக் கொண்டா தாயி. ஈரக்கொலை எரியுது என்று சொல்ல அவளின் கண்களில் கண்ணீர் குளம் கட்டிவிட்டது.

அப்பனுக்கு எப்போதும் சமூக அந்தஸ்து பத்தித்தான் கவலை. பேரகான் செருப்பு போட்டு நடந்தவர், அதை ஆயுளுக்கும் கடைபிடிக்க நினைத்தார். ஆனால் சுரேஷ் கவுண்டர், செருப்ப மாத்துடா சண்முகா, காசு இல்லாமலா இருக்கு. கல்லு மாதிரி செருப்பு வாங்கி போட்டுக்கிட்டு இருக்கிறே. பைக்கில வரும்போது இந்த ரப்பர் செருப்பை போட்டுக்கிட்டு வந்தா கண்றாவியா இருக்குடா  என வாங்கு வாங்கென வாங்க, அன்றே செந்தில் முருகன் மளிகைக் கடையில் பேரகானின் ஆபீஸ் செப்பலை வாங்கிவிட்டார்.

வீட்டில் அப்பனுக்கு காசு கேட்காமல் இருந்தாலே போதும் என நினைத்தார் போல. எதுவுமே பேசவில்லை. இரண்டு நாள் இருந்துவிட்டு கிளம்பும்போது கேட்டார். காது வெச்சிருக்கியில்ல? நான் பதில் பேசவில்லை. கிளம்பிவிட்டேன். எனக்கு உண்மையில் வெட்கமாகவே இருந்தது. அதுவரையில் அடிக்கடி தோன்றிக்கொண்டிருந்த மைதிலியின் முகம் நினைவுகொள்வது மிகவும் கடினமாகி வந்தது. அதேசமயம் பிருந்தாவின் முகத்தை இவ்வளவு நுணுக்கமாக பார்த்திருக்கிறேனா என்ற அளவில் அவளின் முகம் வெளிச்சம் கூடி வந்தது. சத்தியமாக,  அதற்கு என்ன அர்த்தம் என்றே புரியவில்லை. ரூமில் அதற்கான பதில் தயாராக இருந்தது.

(காதல் சொல்லுவேன்)